கொரோனா பாதிப்பு, சமூகத்தில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டும், ஊதியக் குறைப்புடனும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏராளமான நிறுவனங்கள் ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்தாலும், அது ஏற்படுத்திய வலிகள் இன்னும் ஆறவில்லை.

கோவை

கொரோனா வைரஸ் தாக்கி ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, அதனால் ஏற்பட்ட தாக்கத்தின் பாதிப்புகளில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, முன்னுதாரணமாக தன்னம்பிக்கை விதைத்துள்ளனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி.

Also Read: கோவை: அரசுப் பள்ளிக்காக நில தானம் செய்த தொழிலதிபர்! – விழா எடுத்துப் பாராட்டிய பொதுமக்கள்

கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மகேஸ் – ரம்யா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மகேஸ் மைசூரில் ஒரு நகைக் கடையில் பணிபுரிந்துவந்தார். கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் கோவை வந்த அவர், ஏதாவது சுயதொழில் செய்ய முடிவு எடுத்தார். இதையடுத்து, தன் மனைவியின் உதவியோட எல்.இ.டி பல்புகளை உற்பத்தி செய்து விற்று வருகிறார்.

எல்.இ.டி பல்பு

இதுகுறித்து மகேஸ், “ஊரடங்கு காரணமாக அங்கு பணியில்லை. ஊருக்கு வந்துவிட்டேன். இப்போது கடையை திறந்துவிட்டனர். ஆனால், எனக்கு 50% ஊதியத்தை ரத்து செய்துவிட்டனர். வீட்டு வாடகை தொடங்கி ஏராளமான செலவுகள் இருப்பதால், வேலைக்குச் செல்வதற்கு பதிலாக சுயதொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

ஆரம்பத்தில் டிஷர்ட் பிசினஸ் செய்யலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்.இ.டி பல்புகளுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். கூகுள், யூ-டியூபில் எல்.இ.டி பல்பு எப்படி செய்வது என்பது குறித்த தகவள்களைச் சேகரித்தேன். அதற்குத் தேவையான மூலப்பொருள்களை, பல்வேறு இடங்களில் ஆர்டர் செய்தேன். என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துதான் முதலீடு செய்தோம்.

மகேஸ்

எனக்கு எலக்ட்ரானிக்ஸ் குறித்து பேஸிக் ஓரளவுக்கு தெரியும். அதனால், பெரிய அளவுக்குப் பிரச்னை இல்லை. அப்படி இருந்தும், கிட்டத்தட்ட 30 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 31-வது முயற்சியில்தான் வெற்றி கிடைத்தது. இப்போதுவரை 125 பல்புகளை தயாரித்துள்ளோம்” என்றவரை தொடர்ந்தார் ரம்யா.

”நல்ல தரத்தில் உற்பத்தி செய்கிறோம். உறவினர்கள், நண்பர்கள் தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்திய பல்புகளைவிட, இது நல்ல வெளிச்சம் தருவதாகக் கூறினர். இதற்கு சில சிறப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளோம். வீட்டில், மின்சாரத்தில் வோல்டேஜ் பிரச்னை ஏற்பட்டாலும், அது பல்பை எந்த விதத்திலும் பாதிக்காது. 9 வாட்ஸ் பல்பு ரூ.65-க்கு விற்கிறோம். 2 ஆண்டுகள் வாரன்டி கொடுக்கிறோம். புராடக்ட்டுக்கு ‘மீரா’ என்று என் கணவரின் அம்மா பெயரை வைத்துள்ளோம்” என்றார்.

எல்.இ.டி பல்பு

மகேஸ், ”வீட்டில் வைத்துதான் தயாரிக்கிறோம். மனைவி ரம்யாவின் சப்போர்ட்டில்தான் இதெல்லாம் நடக்கிறது. இப்போதுதான், கடைகளுக்கு நேரடியாக சென்று மார்க்கெட்டிங் செய்து வருகிறேன். ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன. ஆர்டர்கள் அதிகரிக்க, அதிகரிக்க இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

திசைகள் இருக்கின்றன, தேடல்தான் தேவை!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.