தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1973-ம் ஆண்டு முதல் விவசாயிகளிடையே நெல் கொள்முதல் செய்து வருகிறது. 1973-ல் சம்பா பருவத்தில் 27,000 டன்னில் தொடங்கிய கொள்முதல் கடந்த ஜூலை 31-ம் தேதியோடு 28.10 லட்சம் டன் நெல்லைக் கொள்முதல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த அளவு கடந்த ஆண்டின் அளவான (2018-19) 19.11 லட்சம் டன்னைவிட 8.99 லட்சம் டன் அதிகம். நெல் கொள்முதலில் இந்த புதிய சாதனையை அடைந்திருக்கிறது தமிழகம்.

நெல் நாற்றுகள்

தமிழகத்தில் நெல் கொள்முதலில் இரண்டு பருவங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குறுவை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), இரண்டு சம்பா (டிசம்பர் முதல் ஜூலை வரை).

மத்திய அரசு 2002-ல் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்தது. அப்போதிலிருந்து நெல் கொள்முதல் ஓர் ஒழுங்குமுறையோடு செயல்பட்டு வருகிறது. 2002-03 ஆண்டுக் காலத்தில் 1.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அது 2011-12 ஆண்டுக் காலத்தில் 23.87 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதன்பிறகு 2015, 2016 ஆண்டுக் காலத்தில் மிகவும் குறைந்து 17.84, 2.12 லட்சம் மெட்ரிக் டன்னாகக் குறைந்து போனது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் பெரிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல் விற்பனை செய்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதனிடம் பேசியபோது, “நெல்லை சாகுபடி செய்வது மிகவும் எளிது. இன்னொன்று நெல் சாகுபடி இன்று முற்றிலும் இயந்திரமாகிவிட்டது. நாற்று நடுவதிலிருந்து நெல் தாள்களை அறுவடை செய்வது வரை இயந்திரங்கள் செய்கின்றன. ஆள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு நெல் சாகுபடி மிகவும் ஏற்றதாக உள்ளது. அதேசமயம் நெல் கொள்முல் நிலையத்துக்கு இன்று நெல்லை விற்பனை செய்தால், நாளை விவசாயியுடைய வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடுகிறது. இப்படி அறுவடை முடிந்து உடனடி பணம் என்பதால், நெல்லை விவசாயிகள் சாகுபடிக்கு அதிகம் தேர்வு செய்கிறார்கள். அதேசமயம் மற்ற பயிர்களின் சாகுபடி குறைந்து வருவதும் கவலையளிக்கிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் உளுந்து, எள் சாகுபடி அதிகம் நடைபெறும். ஆனால், அனைவரும் நெல் சாகுபடியையே தேர்ந்தெடுப்பதால், மற்ற பயிர்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உளுந்து, எள் அறுவடை பின்சார் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இதனால் பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் போன்றவற்றின் சாகுபடியையே மறந்து வருகிறார்கள்.

சாமிநாதன்

தமிழகத்தில் நெல் கொள்முதல் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாயினும், அதனால் விவசாயிகளுக்கு எந்தவித மகிழ்ச்சியும் இல்லை. ஏனெனில், ஒரு கிலோ நெல் 19.05 ரூபாய்க்குத்தான் (ஒரு குவிண்டால் 1,905 ரூபாய்) கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவே கேரளாவில் ஒரு கிலோ நெல் 27.50 ரூபாய்க்கும், சத்தீஸ்கரில் 25 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு கிலோ நெல்லுக்கு 30 ரூபாய் (ஒரு குவிண்டால் ரூ.3,000) உயர்த்தி கொடுக்க வேண்டும். பயறு வகைகள், சிறுதானியங்களின் சாகுபகுடியையும் ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (விற்பனை) அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “தமிழக நெல் கொள்முதல் வரலாற்றில் 2002-லிருந்து இது உச்சபட்ச சாதனை. நாங்கள் 32 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தோம். இப்போது 28 மெட்ரிக் டன்னைத் தொட்டுவிட்டோம். இலக்கையும் விரைவில் தொட்டுவிடுவோம். தமிழ்நாட்டில் 2,113 நேரடி கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. அதனால், விவசாயிகள் தங்களுடைய நெல்லை எளிதாகக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சந்தை விலையைவிட மத்திய அரசு கூடுதலாகவே விலை நிர்ணயித்திருக்கிறது.

நெல்

அதாவது, ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு 1,815 ரூபாயும் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக 50 ரூபாயும் சேர்த்து ரூ.1,865 வழங்கப்படுகிறது. சிறப்பு கிரேடு நெல் ஒரு குவிண்டாலுக்கு 1,835 ரூபாயும் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து ரூ.1,905 வழங்கப்படுகிறது. அதனால் எளிதாகக் கொள்முதல் செய்ய முடிகிறது. இன்னொன்று பருவமழையும் சீதோஷ்ண நிலையும் இந்தாண்டு கைகொடுத்தது. விவசாயிகளுக்குப் பணமும் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்படுவதால் விவசாயிகள் நெல் விற்பனைக்கு அரசையே நாடுகிறார்கள். இங்கே விவசாயியாக இருக்கிற யாவரும் நெல் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும். நிலத்திற்கான ஆவணங்கள், ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை அளித்து நெல்லை விற்க முடியும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.