இன்றைய கொரோனா கால சூழலில் நம் வாழ்வியலும், வாழ்க்கை முறையும் முற்றிலுமாக மாறியுள்ளது. லேசான தலைவலி என்றால் ஒரு மாத்திரை, காய்ச்சல் என்றால் அதற்கும் ஒரு மாத்திரை எடுத்து கொண்டு அவரவர் வேலையை கவனித்து செல்கிறோம். 

சமயங்களில் எந்தவித சம்மந்தமும் இல்லாமல் திடீரென கை, கழுத்து, வயிறு, மார்பு போன்ற இடங்களில் வலித்தால் அசால்டாக எடுத்து கொள்ள கூடாது என்றும், உடலில் உள்ள குறிப்பிட்ட சில உறுப்புகளில் கோளாறோ அல்லது சிக்கலோ இருந்தால் அது சாதாரண வலியாக ஆரம்பித்து உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மாறவும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர். 

அதனை மையமாக வைத்து அறிவியல் சம்மந்தமான ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‘பிரைட் சைட்’ என்ற நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. 

அதில் உடலில் உள்ள முக்கிய பாகங்களில் கோளாறு இருந்தால் எப்படி வலிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

image

இதயம்

உடல் இயக்கத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் இதயத்தில் வலி இருந்தால் , இடது கை, கழுத்து, தோள்பட்டை முதலிய இடங்களில் வலி பரவலாக இருக்கும். மார்பு பகுதியில் ஒருவகை அழுத்தமான வலி (Compressed Pain) இருப்பதையும்  உணர முடியும். அந்த மாதிரியான வலியோ அல்லது அதற்கான அறிகுறியோ இருந்தால் உடனடியாக அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்து மருத்துவரை அணுகுவது தான் சரியான தீர்வு.

image

கிட்னி (சிறுநீரகங்கள்)

நம் ரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை தனியாக பிரித்து ரத்தத்தை சுத்திகரிப்பது தான் கிட்னியின் பணி. வயிற்றின் பின்புறத்தில் கீழ் முதுகின் அருகே அமைந்துள்ள கிட்னியில் வலி இருந்தால் அது கீழ் முதுகு வலிப்பது போலவே இருக்கும். ஆனால் ஒருவருக்கு கிட்னியில் வலி இருந்தால் அது வழக்கமான முதுகு வலியை காட்டிலும் அதிகமாக வலிக்கும். அப்படி வலி இருந்தால் அதிகமான குடிநீரை குடிப்பது நல்லது. உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை கிட்னி செய்வதால் மருத்துவரின் ஆலோசனையை அவசியம் பெற வேண்டும்.

image

நுரையீரல்

சுவாசிக்க உதவும் நுரையீரலில் ஒருவருக்கு வலி இருந்தால் அது அதிகப்படியான வலியாக தெரியாது. மூச்சு திணறல், தொடர்ச்சியாக இருமல், சுவாசிப்பதில் சிரமம் மாதிரியான அறிகுறிகள் மூலமாகவும் நுரையீரலில் கோளாறு இருப்பதை அறிந்து கொள்ளலாம். நுரையீரலில் நோய் தொற்று, புற்று நோய் என பல நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் மருத்துவரை அணுகி நுரையீரலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

image

அப்பண்டிக்ஸ் 

அடிவயிற்று பகுதியின் வலது பக்கத்தில் குடல் வால் அமைந்துள்ளது. பொதுவாக அப்பண்டிக்ஸ் என நமக்கு ஆங்கிலத்தில் சொல்லி தான் வழக்கம். ஒருவருக்கு குடல் வாலில் வலி இருந்தால் அந்த வலி வயிற்று பகுதி முழுவதும் இருப்பதை உணரலாம். தொடர்ச்சியாக அப்படியே அந்த வலியை கண்டுகொள்ளாமல் விட்டால் தொடை பகுதிக்கும் அந்த வலி பரவும். வாந்தி, காய்ச்சல், மலச்சிக்கல், வயிற்று போக்கு மாதிரியான அறிகுறிகளும் குடல் வாலில் கோளாறு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள். 

image

வயிறு

இரைப்பையில் பிரச்சனை இருந்தால் அது இடுப்பு எலும்புக்கு மேல் உள்ள உடலின் மைய பகுதியான வயிற்று பகுதியில் வலியை ஏற்படுத்தலாம். வயிற்றில் வலி இருந்தால் அது பின் பக்கமுள்ள முதுகிலும் இருக்க வாய்ப்புள்ளது. இரைப்பையில் ஏற்படும் வலி சில நேரங்களில் நெஞ்சு வலி போன்ற அறிகுறியையும் தரலாம். அதனால் மருத்துவர்களை ஆலோசித்து அது வயிற்று வலியா அல்லது நெஞ்சு வலியா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

image

பித்தப்பை மற்றும் கல்லீரல்

பித்தப்பை மற்றும் கல்லீரலில் ஒருவருக்கு பிரச்சனை இருந்தால் அது அடி வயிற்றின் வலது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த பகுதியில் வலி இருந்தால் அதனை அவ்வளவு சுலபமாக தெரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும் வாய் மற்றும் நாக்கில் எப்போதும் புளிப்பு சுவை இருப்பது போன்ற உணர்வு, மஞ்சள் காமாலை போன்ற நோயின் மூலம் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் அதிகம் மதுகுடிப்பவர்களுக்கு இதுமாதிரியான அறிகுறிகள் இருக்கும்.

உடலின் பல்வேறு பாகத்தில் வலி இருந்தால் அதை எப்படி எடுத்து கொள்ள வேண்டும், அதற்கான தீர்வு என்ன என்ற கேள்வியோடு அரசு மருத்துவர் சக்திவேலிடம் பேசினோம்… 

“பொதுவாக ஒருவருக்கு வலி ஏற்பட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சாதாரணமாக உள்ள ஒருவருக்கு ஏதேனும் ஒரு பகுதியில் வலி இருப்பது தெரியவந்தால் அவர் உடனடியாக அருகில் உள்ளவர்களிடம் சொல்லி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் உள்ள பல முக்கிய உறுப்புகள் முதுகு பகுதியில் தான் ஆரம்பிக்க கட்டத்தில் வலியை கொடுக்கும். வயிறு, கிட்னி, கல்லீரல், இதயம் என அனைத்து உறுப்புகளிலும் கோளாறு இருந்தால் அது முதுகு பகுதியில் வலி கொடுத்து அறிகுறியாக தெரியப்படுத்தும். அதனால் எந்த பகுதியில் வலித்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.

முறையான பரிசோதனைக்கு பிறகே அந்த வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய முடியும்” என தெரிவித்துள்ளார். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.