ஆத்தூர் வெற்றிலை: `காரத்தன்மை மிகுந்த தனிச்சுவை!’ – கிடைக்குமா புவிசார் குறியீடு?

தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிலை சாகுபடி நடைபெற்றாலும், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. சுமார் 2,000 விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆத்தூரிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தினமும் 2,000 கிலோவும், சீஸன் காலங்களில் 5,000 கிலோ வரையிலும் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கலந்துரையாடல் கூட்டம்

வாழை, தென்னை விவசாயம் செய்தாலும் இப்பகுதி விவசாயிகளின் முதன்மை சாகுபடிப் பயிராக வெற்றிலையே உள்ளது. இருப்பினும், வெற்றிலையை அதிகப்பரப்பளவில் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும், வெற்றிலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் உடன்குடி வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கக்கூட்டத்தில், ‘மண்ணின் வேந்தனான வெற்றிலை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடிக்கால் கொடுத்து வளர்க்க அறிவுறுத்த வேண்டும்.

பாட்டிமார் கை வைத்திய முறையில் வெற்றிலையை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு மருந்தாக அரைத்துக்கொடுக்க அறிவுறுத்த வேண்டும், பிற பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், வெற்றிலை விவசாயம் செய்ய அறிவுறுத்த வேண்டும், வெற்றிலை விவசாயத்தில் பூச்சி, நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கைமுறை மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெற்றிலைக் கொடி

ஒவ்வொரு கூட்டத்திலும் வெற்றிலை விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆத்தூர் சுற்றுவட்டார வெற்றிலை விவசாயிகளை ஒருங்கிணைத்து, நபார்டு வங்கியின் உதவியுடன் உற்பத்தியாளர் குழுவாக உருவாக்கி, `ஆத்தூர் வெற்றிலை’க்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் தூத்துக்குடியிலுள்ள என்.ஜி.ஓ நிறுவனமான `செவாலியர் ரோச் சொசைட்டி’ ஈடுபட்டுள்ளது. இதற்காக வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இதுகுறித்து, `செவாலியர் ரோச் சொசைட்டி’யின் நிறுவனர் ஓய்வுபெற்ற விலங்கியல்துறைப் பேராசிரியர் முனைவர். தாகூர் டீரோஸிடம் பேசினோம், “தமிழகத்தில் பல பகுதிகளில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் காரத்தன்மை மிகுந்து தனிச்சுவையுடன் காணப்படும், தூத்துக்குடி மாவட்டம் ’ஆத்தூர் வெற்றிலை’க்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அதற்குக் காரணம், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரின் வளம்தான். நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி எனப் பல வகைகள் இருந்தும், நாட்டுக்கொடியே அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது.

கலந்துரையாடல் கூட்டம்

வெற்றிலையின் விளைச்சலைப் பொறுத்து கொழுந்து, சக்கை, மாத்து, ராசி, சன்னரகம் எனத் தனித்தனி ரகங்களாகப் பிரிக்கப்படுகிறது. வெற்றிலை பயிரிடப்படும் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், வெற்றிலை வனம் போலவே காட்சியளிக்கும். அகத்தியில் வெற்றிலைக் கொடிகள் படருவதாலும், ஆமணக்கு, முள்முருங்கை வேலிப்பயிராகப் பயிரிடப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. `மதுரை மல்லி’, `ஈரோடு மஞ்சள்’, `கொடைக்கானல் மலைப்பூண்டு’, `சிறுமலை மலைவாழை’ என அந்தந்தப் பகுதிகளில் விளையும் தனிச்சிறப்பு பெற்ற விவசாய விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

அதைப்போல, தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலம் கடந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் `ஆத்தூர் வெற்றிலை’க்கும் புவிசார்குறியீடு கிடைக்க வேண்டும். அந்த நோக்கத்தில், மேலஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுற்றுவட்டார வெற்றிலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து இதுகுறித்து பேசி மூன்று கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தியுள்ளோம். விவசாயிகளும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தற்போது உற்பத்தியாளர் குழுவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

கலந்துரையாடல் கூட்டம்

அதன் பின்னர், அக்குழுவினர் மூலமாக புவிசார்குறியீடு பெற மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க உள்ளோம். சமீபத்தில் `கோவில்பட்டி கடலைமிட்டாய்’க்கு அளிக்கப்பட்ட புவிசார்குறியீடு, கடலைமிட்டாய் வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, கரிசல்காட்டு நிலக்கடைக்கும் அதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் கிடைத்த அங்கீகாரம். அதைப் போலவே ஆத்தூர் வெற்றிலைக்கும் விவசாயிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான அனைத்து உதவிகளையும் முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்றார்.