தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்தும், தன்னிகரற்ற உணவுமாகும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது தாயின் முழுமுதல் கடமை. இன்று உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. எனவே, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், கொரோனா காலத்தில் தாயும் சேயும் எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும்  மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சசித்ரா தாமோதரனுடன் கலந்துரையாடினோம். அவர் கூறிய விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் தாய்ப்பாலில் உள்ள மகத்துவத்தின் புரிதல் எந்த அளவிற்கு உள்ளது? 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளே ஆரோக்கியமான குழந்தைகள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பும், இந்திய குழந்தைகள் நல மையமும். மேலும், 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை மற்ற சத்தான உணவுடன் தொடர்ந்து தாய்ப்பால் வழங்கிடவும் வலியுறுத்துகிறது.

image

ஆனால் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஐந்தில் நான்கு தாய்மார்கள், தாய்ப்பால் முழுமையாக தருவதில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். ஆய்வின் படி, இந்தியாவில் 40.5% தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள் மட்டுமே 6 மாதம் வரை தாய்ப்பால் தருகிறார்கள். மேலும் சிலர் புட்டிப்பாலுக்கு எளிதாக மாறிவிடுகின்றனர். தமிழகத்திலும் இந்த சதவிகிதம் குறைவு என வெளிவரும் புள்ளிவிவரங்களும் கவலையை ஏற்படுத்துகின்றன.

தாய்ப்பாலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தாய்க்கும் தாய்ப்பால் தருவது மிகவும் முக்கியமானது.

குழந்தைக்கு என்ன நன்மைகள்?

குழந்தைக்கு உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தாய்ப்பால்தான். தாய்க்கும் சேய்க்கும் இடையே ஓர் உன்னதான உறவுப் பாலமாய் பந்தத்தையும் உளவியல் ரீதியாக அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. தாய்ப்பாலில் நிறைந்துள்ள தண்ணீர், வைட்டமின்கள் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் தவிர்க்கப்படுவதோடு ஆஸ்துமா, அலர்ஜி, நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியவற்றையும் தடுக்கவல்லது.

image

உடற்பருமன், குழந்தைப் பருவப் புற்றுநோய், குழந்தைப் பருவ நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களிலிருந்தும் காக்கிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைக்கும் பலம் தாய்ப்பாலுக்கு உண்டு.

தாய்க்கு என்ன நன்மைகள்?

தாய்ப்பால் தருவதால் பேறுகாலத்திற்குப் பின் தாய்க்கு ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் ரத்த சோகை குறைவாகக் காணப்படும். மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய் வராமலும் தடுக்கும் பெரும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. மேலும், தாய்ப்பால் தருவதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால், தாயின் உடல் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிவிடும். பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான். அதற்கு இணையாக எந்த உணவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது உண்மை.

image

பணிக்கு செல்லும் தாய்மார்களுக்கு உங்கள் அட்வைஸ்?

பணிக்கு செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து, அதை அறை வெப்பத்தில் (Room Temperature) 8 மணி நேரம் வரை வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் 12 முதல் 24 மணி நேரம் வரை வைக்கலாம். பணிக்குச் செல்லும்முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி பாட்டில்களில் சேகரித்து, நேரத்தை குறித்து வைத்துச் செல்வது சிறந்தது.

தாய்ப்பால் எனும் வரப்பிரசாதம்..!

இச்சமூகத்தில் அனைவருக்கும் தாய்ப்பால் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது நம் முக்கியமான கடமைகளுள் ஒன்று. சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்துவது சிறந்தது. சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பால்புட்டிகளைக் காண்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என்பதை அனைவருக்கும் உணர்த்துவோம். எப்படி தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமையாகின்றதோ தாய்ப்பால் தருவதும் தாயின் கடமையாகின்றது. அதற்கு உதவுவது இந்த சமுதாயத்தின் கடமை.

கொரோனா காலமும், தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற மகத்துவமும்… (தொடரும்)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.