உலகின் மிக பிரபலமான வலைத்தளங்களில் ஒன்று விக்கிப்பீடியா. இணைய சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியா தளத்தை நிச்சயம் பயன்படுத்துவார்கள். அந்த அளவிற்கு இது பிரபலம்.
சுமார் 260க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை பயனர்களுக்கு விக்கிப்பீடியா கொடுத்து வருவதும் இதற்கு காரணம். தனி மனிதன், நிறுவனங்கள், அரசு என அனைத்து விவரங்களும் இதில் இலவசமாக கிடைக்கும்.
வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இதில் கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் லாப நோக்கமற்ற விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதில் உள்ள கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். சமயங்களில் விருப்பம் இருந்தால் கட்டுரைகள் எழுதி பங்களிப்பு தரலாம். கட்டுரைகளை திருத்தவும் செய்யலாம்.
இந்தியாவில் அதிகளவிலான பயனர்களை கொண்டுள்ளது விக்கிப்பீடியா.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது பயனர்களிடம் நன்கொடை கேட்க ஆரம்பித்துள்ளது விக்கிப்பீடியா தளம்.
‘விக்கிபீடியா ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பால் இயக்கப்படுகிறது. எங்களிடம் வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லை. பங்குதாரர்கள் என யாரும் இல்லை. ஆனால் எங்களிடம் நன்கொடையாளர்கள் உள்ளனர். உங்களைப் போன்ற வாசகர்கள் தான் எங்களது நன்கொடையாளர்கள். ஆதலால் நாங்கள் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்’ என விக்கிபீடியா தளத்தை பயன்படுத்தும் போது அதன் பயனர்களிடம் இந்த மெசேஜை தட்டி விடுகிறது விக்கிபீடியா தளம்.
2015இல் இதே போல நன்கொடை வசூலில் விக்கிப்பீடியா ஈடுபட்டுள்ளது. இந்திய அளவில் விக்கிப்பீடியா பயன்படுத்தும் பயனர்களின் சுமார் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே நன்கொடை கொடுத்துள்ளதாக விக்கிப்பீடியா அறிவித்துள்ளது. இந்தியா உட்பட மேலும் சில நாடுகளில் விக்கிப்பீடியா நன்கொடை வசூலித்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM