வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தப் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதில், விசாரணையை தவிர்த்து மற்ற அனைத்து படங்களிலும் தனுஷ் தான் கதாநாயகன். வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இதுவரை வலம் வருகிறது. வட சென்னை இரண்டாம் பாகம் பேசப்பட்டு வந்த நிலையில், சூர்யா உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் அறிவித்து இருந்தார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள அந்த படத்திற்கு வாடிவாசல் என்ற பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருவதால் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த உடனே வாடிவாசல் படத்தின் படப்பிட்ப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், படத்தில் தந்தை, மகன் என சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
வாடிவாசல் கதையில் தந்தை கதாபாத்திரம் ஜல்லிக்கட்டின் போது இறந்துவிடுவார். பின்னர், அதே போன்ற ஜல்லிக்கட்டில் மகன் காளையை அடக்குவார். ஏற்கனவே வாரணம் ஆயிரம், 24 ஆகிய படங்களில் சூர்யா தந்தை மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்திலும் தந்தை மகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தந்தை கதாபாத்திரத்திற்கு ராஜ்கிரன், சத்யராஜ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, சேவல் சண்டையை மையமாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால், ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு அவர் இயக்கும் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM