சிகிச்சை மற்றும் வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த வெளி மாநிலத்தவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தவித்து வந்த அவர்கள் இந்த மாத தொடக்கம் முதல் பல சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை வேலூரிலிருந்து மட்டும் 4000-க்கும் அதிகமான வெளிமாநிலத்தவர்கள் 4 ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலப் பயணிகளுக்காக சிறப்பு ரயில்

அப்படி இறுதியாக வேலூரிலிருந்து மேற்குவங்கம் சென்ற ரயிலில் 1,186 மேற்கு வங்கத்தினர் அனுப்பப்பட்டனர். மேற்குவங்கத்தினர் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவரும் மேற்குவங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தவருமான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும்தான். தனக்கு இருக்கும் மேற்குவங்க அரசுடனான தொடர்பைப் பயன்படுத்தி, தமிழக அரசுக்கு உதவியாக இருந்தார், பாலச்சந்திரன். அதன் பிறகே, வேலூரிலிருந்து மேற்குவங்கத்தினரை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாலச்சந்திரன்,“மருத்துவமனைக்கு வந்தவர்கள், வேலை செய்ய வந்தவர்கள் எனப் பல மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊரடங்கால் வேலூரில் தங்கும் நிலை ஏற்பட்டது. இவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கத் தமிழக அரசு சிறப்பாக உதவி செய்துள்ளது. மேலும் மதுரையில் 90 மேற்குவங்கத்தினர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊரடங்கால் உணவின்றித் தவித்த அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல தாங்களே பேருந்து ரெடி செய்து கொள்வதாகவும் அதற்கான அனுமதி பாஸ் தரவேண்டும் என்றும் மதுரை கலெக்டர் வினய்யிடம் கேட்டுள்ளனர்.

பாலச்சந்திரன்

உடனடியாக மதுரை கலெக்டர், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி பயணத்துக்கான அனுமதி கேட்டுள்ளார். இந்த விவரம் அறிந்த நான், தமிழக தலைமை செயலாளர் சண்முகத்துக்கு அனைத்து விவரங்களையும் கூறி பாஸ் வழங்க உதவ வேண்டும் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் செய்தி அனுப்பிய அடுத்த 4 மணி நேரத்தில், மதுரையில் சிக்கியிருந்த மேற்குவங்கத்தினருக்கு பாஸ் வழங்கப்பட்டுவிட்டதாக அவர் பதில் அளித்தார். இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

இவரைத் தவிர சுற்றுலாத்துறை ஆணையராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் எனக்கு போன் செய்து, “தமிழகத்தில் இருக்கும் அனைத்து மேற்கு வங்கத்தினரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நாங்கள் மேற்குவங்க அரசுடன் தொடர்பில் உள்ளோம். அந்த மாநில அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஏற்கெனவே சில சிறப்பு ரயில்கள் மூலம் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இன்னும் 10 ரயில்கள் அனுப்ப அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஹவுரா மட்டும் செல்லாமல் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். அடுத்த வாரம் 11,000 மேற்கு வங்கத்தினர் சொந்த ஊர் அனுப்பப்படவுள்ளதாகக் கூறினார்.

ராஜேஷ் ஐ.ஏ.எஸ்

மேற்கு வங்கத் தொழிலாளர்களை அவர்களது ஊருக்கு அனுப்பிவைக்க ராஜேஷ் ஐ.ஏ.எஸ்ஸைத் தொடர்பு அதிகாரியாக நியமித்தது போல அனைத்து மாநிலத்துக்கும் ஒரு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசு. மேலும், பதவியில் இல்லாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான நான் கேட்டுக்கொண்டதற்காக மிகவும் விரைவாகச் செயல்பட்டு தகவல் தந்த தலைமைச் செயலர், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், தமிழக அரசு ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.