சும்மா இருந்தா இதெல்லாம் யோசிக்கத் தோணும்’ என ஜாலியாகப் பிறரைக் கலாய்த்தாலும், இந்த லாக்டௌன் நாள்கள் என்னவோ, நம்மை நிறையவே சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

அதுவும், பழைய நினைவுகளை நாம் அசைபோடுவதால் அவை குறித்த கனவுகள் துரத்துமாம். குறிப்பாக பெரும்பாலானோர்க்குக் கடந்தகாலக் காதலைப் பற்றிய கனவுகள்தாம் அதிகம் ஏற்படுகின்றனவாம். ஓர் ஆய்வு இப்படிச் சொல்லியிருக்கிறது.

கனவுகள்

நமது மனதை ஒரே விஷயம் ஆக்கிரமித்திருப்பதன் தாக்கம் கனவிலும் எதிரொலிக்கலாம் என்கின்றனர், மனநல வல்லுநர்கள். அதெல்லாம் சரிப்பா, ‘அந்தப் பழைய காதல் நினைவை எப்படிச் சமாளிப்பது’ எனக் கேட்பது புரிகிறது. மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் இதுகுறித்துப் பேசினோம்.

Also Read: தேடி வந்த காதல்! – ஜில்லென்று ஒரு லாக் டெளன் குறுங்கதை #MyVikatan

“நம் வீட்டு வாசலில் ஒரு ஐஸ்கிரீம் பாக்ஸும் அருகில் ஒரு தேளும் இருப்பதைப் பார்த்தால், தேள்மீதுதானே நமது கவனம் இருக்கும். அதே உளவியல்தான் எல்லாவற்றிற்கும். இன்பத்தைவிட, துன்பம்தான் அதிகம் கவனத்தை ஈர்க்கும். நம் வாழ்வில் நமக்கு நடந்த நல்ல நினைவுகளை எல்லாம் முந்திக்கொண்டு கெட்டவைதாம் முன்னால் வந்து நிற்கும்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

அதுவும் நமது மூளைக்கு அதிக செயல்பாடுகள் தராதபட்சத்தில் இந்தச் சம்பவங்கள் நிறையவே நடக்கும். குறிப்பாக, மூளை சோர்வடைகிற நேரத்தில் நெகட்டிவ் எண்ணங்கள் வரும். மனம்முழுக்க ஒரே விஷயம் பாதிப்பதன் தாக்கம்தான் கனவிலும் எதிரொலிக்கிறது. காதல் நினைவுகள் மட்டுமல்ல, எந்த நினைவையும் பக்குவத்தோடு அணுகுவதுதான் இவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் கையாள வேண்டிய முதல் உத்தி.

மனித மனத்தின் அடிப்படை ஒன்று இருக்கிறது. வாழ்வில் எப்போதும் நமக்கு யாரோ ஒரு பார்ட்னர் தேவைப்பட்டுக் கொண்டேயிருப்பாரே, அதுதான். இந்த பார்ட்னர் என்பவர் வாழ்க்கைத் துணைதான் என்றில்லை. நட்பு, சகோதரர், பெற்றோர் என எவரேனும் நமக்கான உந்துதலுக்கு உடனிருப்பார்கள். இவர்கள் எவரும் இல்லாத தனிமை சூழலில் பழைய எண்ணம் தோன்றலாம். வேலைப் பளுவால் ஏற்படுகிற மன அழுத்தத்தினாலும் பழைய நினைவுகள் எழலாம். அப்படியான எண்ணங்கள் வருவதில் எந்தத் தவறுமே இல்லை. மனித மனத்தின் இயல்பு அது.

தனிமை

இந்த எண்ணங்களெல்லாம் மனதைப் பாதித்து அழுத்த, அழுகை வந்தால் நிச்சயமாக அழுதுவிடலாம். பலரும் அந்தப் பழைய காலங்களில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பார்கள். அதை மீண்டும் மனதில் நிறுத்தி அசைபோட்டு திருத்திக்கொள்ள முயலலாம். ஏன்? அவரைத் தொடர்புகொண்டு சாரி சொல்லத் தோன்றினால்கூட, தயக்கமின்றிச் சொல்லலாம். ஆனால், மேற்சொல்லியிருக்கிற எந்தக் கட்டத்திலும் ஓர் எல்லை வகுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்தகாலக் காதல் துணையின் தற்போதைய வாழ்க்கையை எந்த வழியிலும் நம் செயல்பாடுகள் தீய விதத்தில் பாதித்துவிடவே கூடாது. இந்த மாதிரி சூழல்களில் நம்முடைய மனம் கடந்த காலத்தை மட்டுமே சிந்திக்கச் சொல்லும். அதிலிருந்து நாம் மீளவேண்டும். நிகழ்காலத்துக்கு வந்து சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை, நமது முன்னாள் காதல் துணை தற்போது வேறொரு மண வாழ்வையோ, புதிய காதலையோ தேடிச் சென்றிருப்பதாக வைத்துக்கொள்வோம். அது அவர்களது வாழ்வுக்கான முடிவு. அதில் நாம் எந்தக் குழப்பத்தையும் விளைவிக்கக் கூடாது. இதுதான் பக்குவ மனநிலை.

லவ் மேரேஜ்

அதேநேரம், ஏதோவொரு சூழலில் கருத்து முரணால் பிரிந்துபோன அந்தத் துணையும் நாமும் வேறு ஆப்ஷன்களுக்குள் விழாமல் இருப்பதாக உணர்ந்தால் மேற்கொண்டு, நாம் தொடங்கியிருக்கிற அந்தப் புதிய உரையாடலை நீட்டிக்கலாம். அந்த வகையில் பழைய காதலின் அடுத்த அத்தியாயத்தை எழுத இந்த ஊரடங்கும்கூட உதவிபுரியலாம். ஆனால், அது அவரவருக்கான வாய்ப்புகளையும் மனநிலையையும் பொறுத்தது.

Also Read: மசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்!

நம் நினைவுகள் உணர்வுபூர்வமானவை என்றாலும், நடைமுறையோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள மறுக்கவோ, மறக்கவோ கூடாது. நமது பழைய காதலை கடந்து வந்த சூழல், இப்போதிருக்கிற நிகழ்காலம் எல்லாமும்தான் தீர்மானிக்கிறது, தற்போதைய நினைவின் எதிர்காலத்தை.

ஹார்ட் கேம்

எந்த நினைவையும் மனதுக்குள் போட்டு அமிழ்த்திவிடக் கூடாது, நினைவுகள் அவற்றின்போக்கில் தொடரட்டும். நாம் நமக்கானவற்றோடு தெளிவான எண்ணம் கொண்டிருந்தால் போதும். நம்மிடம் தற்போது குவிந்திருக்கிற வாழ்க்கையில் கிடைக்கும் பாசிட்டிவ்களை எடுத்துக்கொண்டோம் என்றால், கடந்துபோன நினைவுகள் எதுவும் நமக்கு நல்ல தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.