கடந்த ஆண்டு ஜூலை மாதம், காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமொன்றில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “சுற்றுச்சூழலா பொருளாதாரமா என்று இந்தியா தேர்வு செய்தாக வேண்டும்” என்று கூறினார். அந்தக் கேள்வியை அவர் முன்வைத்து இரண்டு மாதம் கழித்து, செப்டம்பர் மாதத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ’இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டுமெனில், சூழலியலும் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று உடன்பட வேண்டும்’ என்று கூறினார்.

இந்திய அரசும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் முதலீட்டாளர்களைத் திருப்திபடுத்துவதற்காக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்காகப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்துள்ளன.

பொருளாதார வளர்ச்சி

சுற்றுச்சூழலோடு விளையாடுவது என்ன மாதிரியான விபரீதங்களைக் கொண்டுவரும் என்பதற்கான ஆதாரம்தான், இப்போது உலகளவில் நாம் சந்திக்கும் கொரோனா தொற்று. பல்லுயிரிய வளப் பாதுகாப்புப் பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 2014 முதல் சுமார் 270 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இது நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே, இந்திய அரசும் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகமும் முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்காகப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்துள்ளன. இது, காடுகளை அழிப்பது, சூழலியலைச் சீரழிப்பதோடு நிற்காமல் கொரோனா போன்ற மோசமான தொற்று நோய்ப் பரவலுக்கும் வழிவகுக்கின்றது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்கியல் நோய்கள் அதிகரிக்க, காட்டுயிர்களின் வாழ்விடங்களை அழிப்பது முக்கியக் காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக எச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளாக நிபா, எபோலா, சார்ஸ், மெர்ஸ், கோவிட் 19 ஆகிய நோய்களையும் அவற்றின் பாதிப்புகளையும் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

’இந்தியா ஸ்பெண்ட்’ இதழ் நடத்திய ஆய்வின் அடிப்படையில், ஜூலை 2014 முதல் ஏப்ரல் 24, 2020 வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தன்னிடம் வந்த 2,592 திட்ட முன்மொழிதல்களில் 2,256 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட மொத்தத் திட்டங்களில் 87 சதவிகிதம் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2014-க்குப் பிறகான ஆட்சியில் மத்திய அரசினுடைய அனுமதி வழங்கும் வேகம் அபரிமிதமாக உள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

2019-ல் கொரோனா பிரச்னை வருவதற்கு முன்னால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது. அதை 2024-25ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமென்ற இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்தார். இந்த இலக்கை அடைவதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதைத் தேவையான அளவுக்கு விரைவுபடுத்துவதாக பிரகாஷ் ஜவடேகரும் தெரிவித்தார். அதற்காக, ‘அனுமதி முதலில் கொடுத்துவிட்டு, விளைவுகளைப் பின்னர் கவனித்துக் கொள்வோம்’ என்பது போன்ற அணுகுமுறை கையாளப்படத் தொடங்கியது.

அதற்குரிய வகையில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜவடேகர் மேற்கூறிய ‘பொருளாதார வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பு ஒன்றியிருக்க வேண்டும்’ என்ற கருத்தை வெளியிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்னர், ஒரு திட்டத்திற்குச் சூழலியல் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான கால அவகாசம் 640 நாள்கள். திட்டம் குறித்துத் தீர ஆய்வு செய்து அதன் சூழலியல் சமநிலையில் அது ஏற்படுத்தும் சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்டு முடிவெடுக்க இந்தக் கால அவகாசம் தேவைப்பட்டது. அதைத் தற்போதைய பா.ஜ.க அரசு, வெறும் 108 நாள்களாக மாற்றியது. இதற்கும் பொருளாதாரத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் வேகம் 87 சதவிகிதம் அதிகமானதற்கும் தொடர்பு உள்ளதாகச் சூழலியல் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான அவகாசம் குறைக்கப்படும்போது, அதுகுறித்து முழுமையான தரவுகள் சேகரிக்க முடியாமல் போகின்றது. அதோடு, நெடுஞ்சாலையிலுள்ள டோல்கேட் போல அனுமதி கேட்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ரசீது கொடுத்து, கதவைத் திறந்துவிடுவதைப் போல் விரைவில் அனுமதியும் வழங்கப்பட்டு விடுகின்றது.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியினால் சுற்றுச்சூழல் சீரழிந்துவிடாமல் தடுப்பதில், முக்கியமான அரணாக விளங்குவது சூழலியல் தாக்க மதிப்பீடு. அதையும் நீர்த்துப்போகச் செய்வதற்குரிய மாற்றங்களை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. சூழலியல் அனுமதி வழங்குவதற்குமுன், குறிப்பிட்ட திட்டம், குறிப்பிட்ட இடத்தில் வருவது சரியாக இருக்குமா, இல்லையா, அதனால் அந்தப் பகுதியில் ஏற்படப் போகும் சேதங்கள் என்னென்ன, அதைச் சரிசெய்ய முடியுமா அல்லது அந்தச் சேதங்கள் நிரந்தரமானதா என்பன போன்ற தகவல்களைத் தரவுகளோடு எடுத்துக்கூறும் மதிப்பீட்டு ஆய்வுதான் சூழலியல் தாக்க மதிப்பீடு. அத்தகைய மதிப்பீட்டில், குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு அந்தத் திட்டத்தினால் ஏற்படும் எதிர்வினைகள் உட்பட அனைத்துமே அலசி ஆராயப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும். இப்படிப் பல அம்சங்கள் சூழலியல் பாதுகாப்பிற்காக உள்ளன. அத்தகைய அரணை உடைத்தெறியும் நோக்கத்தில் புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை வரைவு உள்ளதாகச் சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேசிய வனவிலங்குப் பாதுகாப்பு வாரியம், 11 மாநிலங்களில் முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், நீர்மின் திட்டங்கள் ஆகிய பல திட்டங்களுக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சூழலியல் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “இதற்கு முன்னர், ஒரு திட்டத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சூழலியல் அனுமதிக்கு எதிராக நீங்கள் மேல்முறையீடு செய்யவேண்டுமெனில், அந்த அனுமதி வழங்கப்பட்டு அடுத்த 30 நாள்களுக்குள் செய்யலாம். அது முடியாமல் போனால், பசுமைத் தீர்ப்பாயமாகப் பார்த்து மேலும் 30 நாள்கள் அவகாசம் கொடுக்கலாம். ஆனால், இந்தத் திருத்தத்தில் அந்தக் கால அவகாசம் குறைக்கப்படுகிறது.

இதைவிட முக்கியமாக, சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதற்கு முன்னர் மக்கள் கருத்து கேட்கவேண்டும் என்ற விதி. இது, 1994 விதிமுறைகளில் யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதை, 2006-ம் ஆண்டில், குறிப்பிட்ட திட்டம் வரவுள்ள குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்தான் கருத்து தெரிவிக்க முடியுமென்று மாற்றினார்கள். அதுவே, தற்போதைய திருத்தத்தில் குறிப்பிட்ட திட்டம் வரவுள்ள குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள்தான் கருத்து தெரிவிக்க முடியுமென்று மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கும் சூழலியல் ஆர்வலர்களோ சமூக ஆர்வலர்களோ அதுகுறித்து விவரமறிந்த வல்லுநர்களோ கூட கருத்து தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம், மக்கள் நேரடியாகப் பங்கு வகிக்கக்கூடிய ஓர் அம்சத்தையே அகற்றுகிறார்கள்” என்று கூறினார்.

சூழலியல் தாக்க மதிப்பீடு

நாடே கொரோனா பாதிப்புகளில் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாற்றம் நடந்துள்ளது, இந்திய அரசு பொருளாதாரரீதியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நீர்த்துப்போகச் செய்யும் விதிமுறைகளும் என்ன மாதிரியான எதிர்வினைகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது. இதேநேரத்தில் தேசிய வனவிலங்குப் பாதுகாப்பு வாரியம், 11 மாநிலங்களில் முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், நீர்மின் திட்டங்கள் ஆகிய பல திட்டங்களுக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக அனுமதி வழங்கியுள்ளது.

நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015-16-ல் 8 சதவிகிதமாக இருந்தது. அது, 2017-18ல் 7.2 சதவிகிதமாகக் குறைந்தது. 2019-20ல் இன்னும் குறைந்து 7 சதவிகிதமாகும் என்று கூறப்படுகிறது. சூழலியல் சீரழிவுகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் இழப்புகளின் விகிதம் வருகின்ற 2050-ம் ஆண்டுக்குள் 1.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது, உலகக் காட்டுயிர் நிதியம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை. அதில் நீர்ப் பற்றாக்குறையால் மட்டுமே சுமார் 9.2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இந்தியா, சூழலியல் பேரிடர்களை மட்டுமல்ல, அவற்றின் விளைவாகத் தொடர்ந்து பொருளாதாரப் பேரிழப்புகளையும் இப்போதே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தற்போதைய பா.ஜ.க ஆட்சியில், ஜனவரி 2015 முதல் மார்ச் 2020 வரை, இந்தியாவில் 40,926 ஹெக்டேர் காட்டு நிலப்பகுதி மற்ற திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

காடுகள்

Also Read: ‘கொரோனா வைரஸை அழிக்க வீதிகளில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் பயனில்லை!’ – உலக சுகாதார நிறுவனம்

இருப்பினும், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில், ஜனவரி 2015 முதல் மார்ச் 2020 வரை, இந்தியாவில் 40,926 ஹெக்டேர் காட்டு நிலப்பகுதி மற்ற திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டிலிருந்து இதுவரை 409 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்ற திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கொல்கத்தாவைவிட இரண்டு மடங்கு அதிகமான பரப்பளவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பல திட்டங்கள் மக்கள் எதிர்ப்புகளையும் தாண்டி, மக்களுடைய கருத்துகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, சத்தீஸ்கரில் சூரஜ்பூர் மற்றும் சுர்குஜா மாவட்டங்களில் சுரங்கத்திற்கான அனுமதி கோரி நடத்தப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீட்டின் கீழ் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில், அந்த நிறுவனம் குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அந்த மக்கள் சமர்ப்பித்தும்கூட, அதை மறைத்துவிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் நிமிடங்கள் குறித்த விளக்கத்திற்குள் ஆதாரங்களைப் புதைத்துவிட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சூழலியலைப் பாதுகாப்பதில் அக்கறையோடு செயல்படாதது மட்டுமல்ல, சூழலியல் ஆர்வலர்களின் பாதுகாப்பிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியான குளோபல் விட்னஸ் ஆய்வறிக்கைப்படி, சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக விளங்கும் 10 சூழலியல் ஆர்வலர்கள் இந்தியாவில் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். 2018-ம் ஆண்டின் அறிக்கைப்படி, இந்தியாவில் 23 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் சூழலியல் ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ், கொலம்பியாவுக்கு அடுத்ததாக, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அழிக்கப்பட்ட காடுகள்

கர்நாடகாவிலுள்ள காலி புலிகள் காப்பகத்தை ஊடுருவிச் செல்லும் ரயில்வே பாதைக்கு மாநில வனவிலங்கு வாரியம் கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்தது. அதில் தன்னால் எதுவும் செய்யமுடியாமல் போனதால், மாநில வனவிலங்கு வாரியத்திலிருந்து தன்னுடைய உறுப்பினர் பதவியைச் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா ரெட்டி ராஜினாமா செய்தார். அதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், “நான் வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல. அதேநேரம், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் ஒரு திட்டத்திற்கும் என்னால் ஆதரவளிக்க முடியாது. என்னுடைய மனசாட்சி அதற்கு அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

சூழலியல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி இரண்டையுமே சமநிலையில் வைத்திருப்பது இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருந்துவருகிறது. ஆனால், கனடா, நியூசிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் எப்படி நீர்ப் பாதுகாப்பு, பசுமைக் கட்டுமானம், கரிமச் சட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கிச் செயல்படுத்தியுள்ளதோ அதே அளவுக்கு, இந்தியாவையே பெரும்பான்மையாகச் சார்ந்துள்ள, இமயமலையில் அமைந்துள்ள நாடான பூட்டானும் செய்கின்றது. அந்நாட்டின் நிலப்பகுதி கரிம வாயுவை வெளியிடுவதைவிட அதிகமாகக் கிரகித்து வைப்பதால், பூட்டான் தன்னுடைய 51 சதவிகித நிலப்பகுதியைப் பாதுகாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

தற்சார்புப் பொருளாதாரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய எளிய மக்கள்கூட, அவர்களுடைய சமூக வளர்ச்சியையும் சூழலியல் பாதுகாப்பையும் சமநிலையில் பேணுகிறார்கள். ஆனால், அரசு நிர்வாகம் அதைச் செய்வதைக் காட்டிலும் மக்களைச் சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு அந்த மக்களுடைய இயற்கை வளங்களைச் சுரண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டபோது, “இப்போதிருந்து 50 ஆண்டுகள் கழித்துப் பிறக்கக்கூடிய குழந்தையைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அந்தக் குழந்தைக்குச் சொந்தமான வளத்தை நுகர்ந்து தீர்க்க, நமக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கூறியிருப்பார்.

உண்மைதான். அதை அவர்தம் ஆட்சியிலும் நினைவுகூர்ந்து சூழலியல் பாதுகாப்பை அணுகியிருந்தால் இப்போது இந்தக் கட்டுரைக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.