நிறைய கனவுகளோடும் லட்சியங்களோடும் பிளஸ் 2 தேர்வை முடித்துவிட்டு, ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக, மே9 10 தேதிகளில் ஆனந்த விகடன் `மெகா டிஜிட்டல் எஜுகேஷன் எக்ஸ்போ’வை நடத்துகிறது. ’எந்தப் படிப்பை தேர்வு செய்வது,’ ’எதிர்காலம் உள்ள படிப்பு எது…’, நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி… என பல்வேறு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதிலளிக்கும் வகையில் வெபினாரும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வெபினாரில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோரும் முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு செய்யாமலும் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விகடன் கல்வி எக்ஸ்போ

சரியாகக் காலை பத்து மணிக்கு வெபினார் தொடங்கியது. முதலில், ‘YOU CAN DO IT ’ என்ற தலைப்பில் ரயில்வே டி.ஜி.பியும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் இயக்குநருமான டாக்டர் சைலேந்திர பாபு உரையாற்றினார்.

”கொரோனா லாக்டௌனால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மாணவர்களே… தற்போதைய நிலையால் கலங்கிவிடாதீர்கள்…’இதுவும் கடந்து சென்றுவிடும்’ எனும் ஹேமில்டன் ஹைட்னியின் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த நிலை நிச்சயமாக மாறும். வீட்டில் முடங்கிக் கிடப்பது சிரமாம இருக்கிறதா மாணவர்களே, வீடே இல்லாத மக்கள் நம் நாட்டில் பலகோடிப்பேர் இருக்கிறார்கள். நண்பர்களைப் பார்க்க வெளியில் போக முடியவில்லை, வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம் என வருந்துகிறீர்களா…பல நூறு கி.மீ நடந்தே தங்களின் ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை நினைத்துப் பாருங்கள் ” என உற்சாகம் தரும் டானிக் வார்த்தைகளோடு பேசத் தொடங்கியவர். சிந்தனை மாற்றம் குறித்து மிகத் தெளிவாகப் பேசினார்.

‘எதுவும் தற்போது உங்களிடம் இல்லை என நினைக்காதீர்கள்…பொன்னான நேரமும் திறமையும் உங்களிடம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதே தற்போது முக்கியம். 8 மணி நேர தூக்கம், 2 மணி நேர உடற்பயிற்சி. 2 மணி நேரம் பத்திரிகை படித்தல், 2 மணி நேரம் புத்தகம் படித்தல், இரண்டு மணி நேரம் பிடித்ததை எழுதப் பயன்படுத்துங்கள். மீதி எட்டு மணி நேரம், உங்கள் கல்விக்காகப் பயன்படுத்துங்கள். எஜுகேஷன் அன்ட் இமேஜினேஷன் ஆகிய இரண்டும் உங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் துறையில் உலகின் மிக சிறந்த அறிவியலாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைப் படியுங்கள். உலக மனிதனாக மாறுங்கள்…உலகத்தோடு போட்டி போடுங்கள். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்” என பல உற்சாக வார்த்தைகளை மாணவர்களுக்கு வாரி வழங்கினார். அதோடு, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்தார்.

விகடன் கல்வி எக்ஸ்போ

அவரைத் தொடர்ந்து. ஹெ.சி.எல் நிறுவனம் மதுரை மையத்தின் தலைவர் சுப்பாராமன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது குறித்துப் பேசினார். ஆய்வுப் படிப்புகள் குறித்தும் நடைமுறை வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் படிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். ”நாம் எந்தப் படிப்பில் சேரப் போகிறோம் என்பதற்கு முன்பாக நமக்கு அதைக் கற்றுக்கொள்வதற்கான திறன் இருக்கிறதா என்பதை மாணவர்கள் முதலில் கண்டறிய வேண்டும்” என்பதோடு ஐ.டி துறை சார்ந்த தகவல்களையும் மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். ஐ.டி வேலையில் சேர்வதுதான் விருப்பம் என்றால் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருக்காமல் 12-ம் வகுப்பு முடித்தவுடனே ஐ.டி நிறுவனப் பயிற்சிகளில் வேலைகளில் எப்படி சேர்வது ” என்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக விரிவாகப் பதிலளித்தார்.

அடுத்ததாக, கல்வியாளர் நெடுஞ்செழியன், ‘கல்வியும், கொரோனாவும்’ என்கிற தலைப்பில் உரையாடினார். பழங்கால தமிழ் மன்னர்களின் ஆட்சி நிர்வாகம், கலைகளின் சிறப்புகளோடு, மிகவும் சுவாரஸ்யமாக தனது உரையைத் தொடங்கினார். நாம் கண்டுகொள்ளாத எண்ணற்ற படிப்புகள் குறித்தும், கல்வி நிலையங்கள் குறித்தும், நுழைவுத் தேர்வுகள் குறித்தும் மிக விரிவாக விளக்கினார். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக விளக்கினார். ”கல்வி நம், தமிழ்ச்சமூக மரபில் இருக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்தவேண்டும்” என்றவர், கொரோனா நமக்கு உணர்த்திச் சென்ற விஷயங்கள் குறித்தும் உலகம் தற்போது சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் நடைமுறைக் கல்வியின் அவசியம் குறித்தும் மிகத் தெளிவாக உணர்த்தினார். நல்ல கல்வி நிலையத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்…இத்தனை வாய்ப்புகளா என நாம் ஆச்சர்யப்படத்தக்கவகையில் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் கல்வி எக்ஸ்போ

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநர், கல்வியாளர், டாக்டர் சங்கர சரவணன் ‘கல்லூரிச் சாலை’ எனும் தலைப்பில் உரையாடினார். ‘எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரிக் காலம் மாணவர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் பயன்படும் என்பது குறித்தும் பேசினார். ‘COLLEGE ROAD’ எனும் வாசகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். விருப்பப்பட்ட கல்லூரி, கோர்ஸ் கிடைக்காவிட்டாலும் எப்படி மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார். ’’இலக்கைத் தீர்மானித்து, ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் பயணித்தால் நிச்சயம் இலக்கை அடையமுடியும்” என்றார்.

“B-Arch எதிர்காலத்தில் இருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிகள்” என்ற தலைப்பில், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணை பேராசிரியர் காசிராஜன் பேசினார். ஆர்க்கிடெக்ட் படிப்ப்புக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து மிக விரிவாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு விளக்கினார். அவரைத் தொடர்ந்து, “என்ஜினீயரிங் படிப்பில், கல்லூரி மூலம் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?” என்ற தலைப்பில், சாய்ராம் பொறியியல் கல்லூரியின், ட்ரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் துறைத்தலைவர், அருணாச்சலம் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், ஐ.டி துறை வேலையில் சேர என்னமாதிரியான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார்.

விகடன் கல்வி எக்ஸ்போ

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும், பயனுள்ள வகையில் இந்த வெபினார் நடைபெற்றது. மே 10ம் தேதியும் கல்வியாளர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்களும் பங்குகொண்டு தங்களின் கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். இன்று கலந்துகொள்ள முடியாத மாணவர்களும் நாளை கலந்துகொள்ளலாம்.

உங்கள் வீட்டில் மட்டுமல்ல, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, கல்லூரியில் சேரக் காத்திருக்கும் உங்களுக்குத் தெரிந்த மாணவச் செல்வங்களுக்கு இந்தத் தகவலைக் கொண்டு சேருங்கள்… நிச்சயமாக அவர்களுக்குப் பயனுள்ள ஒரு பொழுதாக இருக்கும்..

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.