வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் `கொரோனா’ லாக்டௌன் காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான வெளிமாநில நோயாளிகள் சொந்த ஊர் திரும்ப வேண்டுமென்று வேலூர் மாவட்ட நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

அதையடுத்து, ஆம்புலன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, லாக்டௌனில் கெடுபிடி அதிகமாக இருந்ததால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைக் கடந்து செல்வதில் வேலூர் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதத்தைக் காட்டிய பிறகும் பல செக் போஸ்ட்டுகளில் உள்ள போலீஸார் கறாராக நடந்துகொண்டனர். சிரமங்களுக்கு நடுவில் நோயாளிகளை அவரவர் ஊர்களில் கொண்டு சேர்த்த வேலூர் ஓட்டுநர்கள் மீண்டும் அங்கிருந்து தமிழகம் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, ஒடிசா மாநிலங்களுக்குள் செல்லவும் அங்கிருந்து வெளியில் வரவும் அனுமதி கிடைக்கவில்லை.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

இதனால், ஒடிசா எல்லையிலேயே வேலூர் ஓட்டுநர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதையறிந்த தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் கடந்த 24-ம் தேதி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், “ஒடிசா மாநில எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தமிழக வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் கடிதம் பெறப்பட்ட சில மணி நேரத்தில், ஒடிசா முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆலோசகர் பாலகிருஷ்ணன் என்பவர் கதிர் ஆனந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “தமிழக ஓட்டுநர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இன்னும் சில மணி நேரத்துக்குள் அவர்களைப் பாதுகாப்பாக ஒடிசா எல்லையைக் கடந்து செல்ல உதவுகிறோம்’’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், நேற்று நள்ளிரவு வரை ஒடிசாவுக்குள் நுழைவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்

ஜார்க்கண்ட்டில் நோயாளிகளை இறக்கிவிட்ட பிறகு, வேலூர் திரும்பிய 10 கார்களின் ஓட்டுநர்கள் ஒடிசா எல்லையிலிருந்து நள்ளிரவு 11 மணியளவில் நம்மைப் போன் மூலம் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறுகையில், “ஜார்க்கண்ட்டிலிருந்து ஒடிசாவுக்குள் நுழைய 2 செக் போஸ்ட்டுகள் உள்ளன. இரண்டு ஆம்புலன்ஸ் உட்பட 10 கார்களில் வந்த ஓட்டுநர்கள் ஜம்சாலா என்கிற செக் போஸ்ட்டில் தவிக்கிறோம்.

கடந்த 5 நாள்களுக்கு முன்பு வேலூரிலிருந்து கிளம்பி வந்தோம். ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் தடுத்து நிறுத்தித் தாமதப்படுத்தினர். கொரோனா பரிசோதனை செய்தனர். எங்களுக்குத் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர். ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் எங்களின் பெயர், செல் நம்பரை எழுதிவிட்டு வந்தோம். நோயாளிகளை ஜார்க்கண்ட்டில் உள்ள அவரவர் ஊர்களில் கொண்டு சென்றுவிட்ட பிறகு வேலூர் புறப்பட்டோம்.

ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள செக்போஸ்ட்

ஆனால், ஒடிசாவுக்குள் நுழையக்கூடிய இரண்டு எல்லைகளிலும் தமிழக வாகனங்களை அனுமதிக்கவில்லை. எங்களைப்போல இன்னொரு எல்லையில் 80 வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் 1,800 கிலோ மீட்டர் தூரத்தில் தவிக்கிறோம். ஒடிசா போலீஸார் ஜார்க்கண்ட்டுக்குள்ளேயே துரத்தியடிக்கிறார்கள். வேலூர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து தகவல் கொடுத்துவருகிறோம். சரியான பதில் கிடைக்கவில்லை.

லாக்டௌனைத் தளர்த்த இன்னும் 3 நாள்கள் ஆகும். அதுவரை எல்லையிலேயே தங்கியிருங்கள் என்று ஒடிசா போலீஸார் கூறுகிறார்கள். இவர்களின் ஊர்க்காரர்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்து விட்டதற்கு எங்களுக்கு அவர்கள் கொடுக்கும் பரிசு இதுதானா… அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். அவசரத் தேவைக்காக வந்த எங்களின் வாகனங்களை மட்டும் நிறுத்தி வைக்கிறார்கள்.

கொரோனா ராட்சச ஓவியம்

சி.எம்.சி மருத்துவமனையிலிருந்து மட்டும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்பதிவின் பேரில் வருகிறது. ஒரே பகுதியிலிருந்து இத்தனை நோயாளிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதாக இங்குள்ள போலீஸார் கூறுகிறார்கள். மறு உத்தரவு வந்தால்தான் அனுமதிப்போம் என்கிறார்கள். எங்களை எப்படியாவது வேலூருக்குக் கொண்டு வந்து சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வருத்தமாகக் கூறியிருந்தனர்.

இவர்களின் குமுறல் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் எம்.பி கதிர்ஆனந்த் ஆகியோருக்கு நள்ளிரவிலேயே நாம் தகவல் தெரிவித்திருந்தோம். “இன்று காலை 10 மணி முதல் ஒடிசா எல்லையில் உள்ள தமிழக வாகனங்கள், பகுதி பகுதியாகப் பிரித்து வழி அனுப்பி வைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஒடிசா முதலமைச்சரின் ஆலோசகர் என்னிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார்’’ என்று எம்.பி கதிர் ஆனந்த் நம்மிடம் கூறினார்.

ஒடிசா எல்லையில் தவித்த வேலூர் ஓட்டுநர்கள்

அதன்படி, ஜார்க்கண்ட் சென்றிருந்த வேலூர் வாகனங்கள் அனைத்துக்கும் இன்று பிற்பகல் 11 மணிக்கு மேல் ஒடிசாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எல்லையிலிருந்து வாகனங்கள் புறப்பட்டு ஒடிசா வழியாக வந்துகொண்டிருக்கின்றன. எனினும், அடுத்தடுத்துள்ள தெலங்கானா, ஆந்திரா மாநில எல்லைகளிலும் கெடுபிடிகள் இருக்கும் என்று தகவல் வருகிறது.

அதே சமயம், அருகில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று திரும்பிய சில வாகன ஓட்டுநர்கள் வேலூரில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்களைப் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். பரிசோதனை முடியும் வரை தனி இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளைத் தொற்று கண்டறியப்பட்டால் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.