`நோயிலும் அரசியல் செய்கிறார் தி.மு.க தலைவர்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேட்டி தட்டிய அடுத்த சில தினங்களிலேயே, `அம்மா உணவங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’ என சூடாக அறிக்கை கொடுத்து பரபரப்பை பற்றவைத்தார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அம்மா உணவகங்களில், அ.தி.மு.க சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டுவருவதையடுத்தே இப்படியொரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளது தி.மு.க. இதுகுறித்துப் பேசும் தி.மு.க முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன், “சேலம் மாவட்டத்திலுள்ள அம்மா உணவகங்களில், மாவட்ட அ.தி.மு.க சார்பில் நிதியளித்து இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வரே அறிவிக்கிறார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க ஆங்காங்கே ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க சார்பிலிருந்தும் இதுபோல் இலவச உணவு கொடுக்க, மாவட்ட நிர்வாகத்தில் பணம் கட்டிவருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின்

`அம்மா உணவகம்’ என்பது தமிழக அரசு நிறுவனம். அந்த நிறுவனம் மூலமாக தனிப்பட்ட கட்சிக்காரர்கள் எப்படி இலவச உணவு கொடுக்கலாம்? அம்மா உணவகம் என்ற அரசு நிறுவனத்தில், தனிப்பட்ட இவர்களது கட்சி விளம்பர பேனர்களை வைத்து சொந்தக் கட்சி வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி நியாயமாகும்? இதே, `இலவச உணவை அம்மா உணவகங்கள் மூலமாக நாங்களும் தருகிறோம்’ என்று மற்ற கட்சிக்காரர்கள் கேட்டால், அதற்கு சம்மதிப்பார்களா? ஆக, இவர்கள் செய்துவருகிற இந்த அரசியலைத்தான் எங்கள் தலைவரும் அறிக்கைவாயிலாக தட்டிக்கேட்டார். உடனே, இப்போது `தன்னார்வலர்கள் அளிக்கும் பண உதவியில், சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்’ என்று அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்.

Also Read: `கொரோனா நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்தது யார்?’ -சினிமா மோகத்தால் விபரீதத்தில் முடிந்த நட்பு

இப்போதும்கூட, மாவட்ட நிர்வாகத்திடம் தன்னார்வலர்கள் முன்வந்து கொடுக்கும் நிவாரணப் பொருள்களில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்களைப் பிரின்ட் செய்து அ.தி.மு.க-வினர் மூலமாக மக்களுக்குக் கொடுத்துவருகிறார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்த அரசியலை ஏன் செய்கிறீர்கள்? ஏற்கெனவே, கடந்த 2015 வெள்ளப்பெருக்கின்போதும் இதே `ஸ்டிக்கர் ஒட்டும் வேலை’யைத்தான் அ.தி.மு.க-வினர் செய்துவந்தார்கள்” என்றார் காட்டமாக.

மா.சுப்பிரமணியன்

ஏற்கெனவே, `தி.மு.க சார்பில், கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருவதை ஆளும் அ.தி.மு.க அரசு விரும்பவில்லை. எனவே, எங்கள்மீது வீண் புகார்கள் கூறுவதோடு, நிவாரணம் வழங்கவும் தடை விதிக்கின்றனர்’ எனக்கூறி நீதிமன்றப் படியேறியிருந்தது தி.மு.க. இதையடுத்து, `தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கத் தடையேதும் இல்லை. அதேசமயம், அரசின் அனுமதியோடு, `தனிமனித இடைவெளி’யைக் கடைப்பிடித்து நிவாரணம் வழங்கலாம்’ என்று உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில், நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை எனக்கூறி, சில இடங்களில் தி.மு.க-வினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன.

சேலம் மாநகர முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றுகூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசும் ரேகா பிரியதர்ஷினி, “கொரோனாவைவிட கொடிய நோய் பசி. சேலம் மாவட்டத்தில், பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்காக தி.மு.க சார்பில் மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களைத் தொடர்ந்து கொடுத்துவருகிறோம்.

ரேகா பிரியதர்ஷினி

ஆனால், `அரசு அனுமதி வாங்கவில்லை; தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டமாக கூடியிருந்தீர்கள்’ என்றெல்லாம் சொல்லி என் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்குப் பதிவுக்குக் காரணமாக சொல்லப்பட்ட தினத்தன்று, கெங்கவல்லி ஊராட்சியில் ஆரம்பித்து தலைவாசல் வரை நிவாரணப் பொருள்களை வழங்கியிருக்கிறோம். இதற்காக, மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியிருப்பதோடு, காவல்துறை அனுமதியும் வாங்கியுள்ளோம். நிவாரணம் வழங்குகிற நிகழ்ச்சியில், ஆரம்பத்திலிருந்து எங்களோடு காவல்துறை அதிகாரிகளும் வி.ஏ.ஓ., பி.டி.ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடன் வந்து கலந்துகொண்டுள்ளனர். ஆக, அரசிடம் அனுமதியே வாங்கவில்லை என்று எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள் என்றே தெரியவில்லை.

நிகழ்ச்சிகளின்போது, நாங்கள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று இப்போது குற்றம் சொல்கிறவர்கள், அப்படி நடந்திருந்தால்… அன்றைக்கே எங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து வழக்குப்பதிவு செய்திருக்கலாமே… ஆக, எங்களை முடக்க நினைத்து, திட்டமிட்டே வீண் பழியைச் சுமத்துகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது” என்றார் கொதிப்பாக.

சென்னையில், தி.மு.க தலைவர் தலைமையில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை எனக்கூறி, மு.க.ஸ்டாலின் மீதும் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசும் தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு, “சாலையோரம் வசிக்கிற ஏழை – எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க தலைவர் தலைமையில் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின்

உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற உதவி பெறுபவர்கள் அனைவருக்கும் 6 அடி இடைவெளிவிட்டே சேர்கள் போடப்பட்டிருந்தன. மேலும், அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமுன்னரே, அவரவர் சேர்களில் உதவிப் பொருள்களையும் வைத்துவிட்டோம். மேடையில், குறிப்பிட்ட பத்து பேருக்கு, அதுவும் உதவித் தொகையை மட்டுமே மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மறுநாள், இந்நிகழ்ச்சி குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. இதையடுத்தே ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடிகொடுத்து, புகார் கொடுக்க வைத்துள்ளனர். எந்த வகையில் பார்த்தாலும் எங்கள்மீது குறைசொல்லி வழக்குப் பதிய வழியே இல்லை. எனவே, வேறு வழியில்லாமல் இப்போது, எங்கள் தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்று பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார் விளக்கமாக.

தி.மு.க தரப்பிலான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனிடம் பேசினோம். “மிக மிகக் குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கோடு கொண்டுவரப்பட்டது `அம்மா உணவகம்’ திட்டம். இதன்மூலம் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடைபெற்றுவருகின்றன என்பதை உணர்ந்துதான், மற்ற மாநிலங்கள்கூட இதே மாதிரியான திட்டத்தை அவர்களது மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

இப்படி, அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தி.மு.க-வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், கொரோனா ஊரடங்கில் சாப்பிட வழியின்றி சிரமப்பட்டுவரும் மக்களுக்காக, நாங்கள் முற்றிலும் இலவசமாக உணவு வழங்கிவருவதைக்கூட குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னார்வலர்கள் மற்றும் எங்கள் கட்சிக்காரர்களின் உதவியோடு, தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுகளை அ.தி.மு.க சார்பில் வழங்கிவருகிறோம். தி.மு.க-வினரும் இதுபோல் மக்களுக்கு உதவிசெய்து பெயர் வாங்கலாம். அதை யாரும் தடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகள் கொடுக்கிறார் என்றால், ஒரே இடத்தில் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு நிவாரணப் பொருள்கள் பரவலாகக் கொடுக்கப்பட வேண்டும். தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தக் காரணங்களுக்காகத்தான் அரசு அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து, அவர்களோடு இணைந்து நிவாரணப் பொருள்களைக் கொடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை எனக்கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அன்றைய நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்.

`கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேண்டும். பசியால் வாடும் மக்களுக்கு இலவசமாக உணவு கிடைக்க வேண்டும்’ என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும். எனவே, இலவச உணவை வழங்க தன்னார்வலர்கள் முன்வருவதை யாரும் தடுக்கவில்லை. `அம்மா உணவகங்கள் மூலமாக நாங்களும் இலவச உணவு வழங்குகிறோம்’ என்று தி.மு.க-வினரும்கூட பணம் கட்டினால், அதை வேண்டாம் என்று யாரும் சொல்லப்போவதில்லை.

மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க தொண்டர்கள், தங்களின் சொந்தக் காசை செலவழித்து இலவச உணவு வழங்கிவருகிறார்கள். இதுகுறித்து பேனர் எதுவும் வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் என்றுதான் அரசும் சொல்லியிருக்கிறது. ஆர்வத்தின் பேரில் சிலர் எங்காவது பேனர் வைத்திருந்திருக்கலாம். ஆனால், அதை மேலிடம் விரும்பவில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்” என்றார் விளக்கமாக.

இதற்கிடையே, `அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அ.தி.மு.க-வினருக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது’ என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட, அவரிடம் பேசினோம். “சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் தன்னார்வலர்கள் நிதியளிப்போடு இலவச உணவு வழங்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 14-ம் தேதியே கொளத்தூர் தொகுதியில் இதுபோல் மக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு நிதி வழங்க அனுமதி கோரியிருந்தார். இன்றைய (24-4-2020) தேதி வரை அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆர்.எஸ்.பாரதி

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 20-ம் தேதி சேலத்தில், இந்த இலவச உணவுத் திட்டத்தை அறிவித்த உடனேயே அவரது நிதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு என அடுத்தடுத்து அ.தி.மு.க-வினர் கொடுக்கும் நிதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த அரசியல் இப்போது வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்குவது மட்டும் போதாது. தமிழ்நாடு முழுக்க எண்ணற்ற விவசாயிகள் மற்றும் ஏழைகள் சாப்பிட வழியின்றி சிரமப்பட்டுவருகிறார்கள். எனவே, தமிழ்நாடு முழுக்க உள்ள அம்மா உணவகங்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை தன்னார்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகோரி, தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு அளித்திருக்கிறோம்” என்றார்.

பிரகாஷ்

சென்னையில், தி.மு.க-வினர் நடத்திய நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட என்ன காரணம், அம்மா உணவகங்களில் இலவச உணவுக்கான நிதி உதவியை அ.தி.மு.க தவிர ஏனைய கட்சிகளும் வழங்கலாமா என்ற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் செல்பேசியைத் தொடர்புகொண்டோம். நம் அழைப்பு ஏற்கப்படாததையடுத்து, மின்னஞ்சல் வழியே கேள்விகளை அனுப்பிவைத்துள்ளோம். ஆணையர் பதில்தரும்பட்சத்தில், அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.