திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 13 பேர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களுடைய தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்தநிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில், ஆம்பூர் நகரம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`கழுகு’ பார்வையில் வாணியம்பாடி

இதுதொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆம்பூர் நகரில், நோய்த் தொற்று பரவாமல் பொதுமக்களைப் பாதுகாக்கவும், சமூக விலகலைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கிச் செல்லவும் நான்கு இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறி, மளிகைப் பொருள்கள் வீடுகளுக்கே சென்று விற்பனைசெய்யப்படுகிறது.

இறைச்சியையும் வீடுகளுக்கே சென்று விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சத்துணவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குழுக்களாக இணைந்து, வீடு வீடாகச் சென்று உடல் பரிசோதனை செய்து, வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தடுக்க நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், ஆம்பூரைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

‘கழுகு’ பார்வையில் ஆம்பூர்

அதனடிப்படையில், நோய் பரவலைத் தடுக்க ஆம்பூர் நகரம் முழுவதும் நாளை (13-ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. அனைத்து மக்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் வரவேண்டாம். ஆம்பூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வயதானவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள், கட்டாயமாக வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். நகருக்குள் வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.

‘கழுகு’ பார்வையில் ஆம்பூர்

நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத்துறை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும். ஆம்பூர் மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசரமான தேவைகளுக்கு, கட்டுப் பாட்டு மையத்தில் இயங்கும் 9585776095, 9585776096, 9585775654 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்புகொள்ளலாம். மேலும், 9585775653 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல்களைத் தெரியப்படுத்தலாம்’’ என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.