சீனாவின் வுஹான் நகரிலிருந்து மொத்த உலகத்துக்கும் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கனவிலும் எதிர்பார்க்காத அளவு மிக அதிகமாக உள்ளது.

கொரோனா பரிசோதனை

முதன்முதலில் சீனாவில் வைரஸ் உறுதியானதும், பிற நாடுகளில் தாமதமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவே, உலக அளவில் வைரஸின் வீரியம் அதிகரிக்கக் காரணமாக கூறப்படுகிறது. இப்படி கொரோனா வைரஸுக்கு எந்தெந்த நாடுகள் எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்து, கண்டிப்புடன் செயல்பட்டது என 73 நாடுகளில் ஆய்வு நடத்தியுள்ளது ஆக்ஸ்ஃப்போர்டு பல்கலைக்கழகம். அதன் முடிவில், இந்தியா 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

ஆக்ஸ்ஃப்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளேவட்னிக் பள்ளியின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ட்ராக்கர், உலக அளவில் இருக்கும் அனைத்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் வெளியிடும் அறிவிப்புகளை முறையாகப் பதிவு செய்து, ஒருங்கிணைத்து, அதற்கு பொதுவான மதிப்பீட்டை வழங்குகிறது. பள்ளிகள் மூடல், பயணத் தடைகள், சுகாதாரத் துறையில் அவசர முதலீடு, நிதி நடவடிக்கை மற்றும் தடுப்பூசிகளில் முதலீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்த ட்ராக்கர் கண்காணித்துள்ளது. அதில்தான் இந்தியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

ஆக்ஸ்ஃப்போர்டு

இது தவிர, இஸ்ரேல், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அதேபோல் இத்தாலி, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கிட்டத்தட்ட 90 மதிப்பெண்களையும் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் 80-க்குக் குறைவாகவும், இங்கிலாந்து 70 -க்குக் குறைவான மதிப்பெண்களையும் பெற்றுள்ளன. இருப்பினும் இந்த மதிப்பீடு, நடவடிக்கைகளின் செயல் திறனைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வைரஸ் பரவல் சங்கிலியை வெற்றிகரமாக உடைத்துள்ளன. அதனால் அந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறவில்லை.

அரசாங்கம் எடுத்த 11 முக்கிய நடவடிக்கைகளை மட்டும் வைத்தே இந்த மதிப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது. இது, கீழ் மட்ட அளவில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ட்ராக்கரின் பின்னால் இருந்து செயல்பட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்ஸ்ஃப்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழுவினரால் சேகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முழுத் தகவலையும் வழங்க முடியாது. ஆனால், நாங்கள் சேகரித்த தரவுகள், நாட்டின் நிலையை அறியவும், பொதுச் சுகாதார நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.