கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன.

அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்துகளுக்கும் பாதுகாப்புக் கவசங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தங்கள் பகை அனைத்தையும் மறந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமும் இந்தியா, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறார் அதிபர் ட்ரம்ப். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட சீனா தற்போது அதிகளவில் முகமூடிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
Also Read: `சொர்க்கத்திலிருந்து வந்த பரிசு’ -கொரோனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்கும் அமெரிக்கா!
அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது.
அதனால் தாய்லாந்திலிருந்து ஜெர்மனி செல்லவேண்டிய விமானம் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறந்தது. இதை நவீன திருட்டு, கடல் கொள்ளையாகவே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். உலகளாவிய நெருக்கடிக் காலத்தில்கூட இத்தகைய நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது” என ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோல் பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், `நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகமூடிகளுக்குப் பாதி விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும் அதனால் பொருளைக் கண்ணில் பார்த்துவிட்டு மீது பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால் அமெரிக்கா, நாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மாஸ்க்குகளைப் பார்க்காமல் மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் பார்க்க நினைக்கிறது’ எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அமெரிக்க அதிகாரிகளா, பிராந்திய நிறுவனங்களா அல்லது தனியார் நபர்களா என எந்தத் தகவலையும் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும், இதுபோன்ற செயல்களில் நிச்சயம் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று பாரிஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.