தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர் உட்பட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நபர்கள் வசித்த பகுதிகளான 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஊரணிபுரத்தில் கொரோனா தடுப்புப் பணி

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் கோவிந்தராவ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் மொத்தம் 77 பேர். இதில் அதிராம்பட்டினத்தில் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், இதேபோல் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இந்தோனேசியா, பெங்களூரு, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளிலிருந்து அதிராம்பட்டினம் வந்தவர்கள் என மொத்தம் 38 பேர் இருந்தனர்.

தஞ்சாவூரில் கொரோனா தடுப்புப் பணி

அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரிப்புறக்கரை, ராஜாமடம், தொக்காலிக்காடு மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், நரசிங்கபுரம்,சுந்தரனாயகிபுரம், மாளியக்காடு ஆகிய கிராம எல்லைகள் மூடப்பட்டு கண்காணிக்கபட்டு வருகின்றன.

மேலும், டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, கும்பகோணம் புதுச் சாலையைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், மடத்து தெருவைச் சேர்ந்த 60 வயது நபர், அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்த 61 வயது நபர் என 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் புது சாலை, மடத்து தெரு, அண்ணலக்ரஹாரம் ஆகிய பகுதிகளை பேரிகாட்கள் கொண்டு போலீஸார் சீல் வைத்து தனிமைப்படுத்தினர்.

தடுப்பு அமைக்கப்பட்ட பகுதி

இதையடுத்து திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த 62 வயது நபருக்கும், ஒரத்தநாடு அடுத்த நெய்வாசலைச் சேர்ந்த 46 வயது நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி மற்றும் நெய்வாசல் பகுதிகள் முழுவதும் தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர்.

ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய இளைஞர். இவர் டெல்லியில் இணையதள தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். அந்த இளைஞர் டெல்லியில் உள்ள மாநாட்டில் செய்திகள் சேகரித்துவிட்டு பின்னர் தன் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்துக்குச் செல்வதற்காக மார்ச் 24-ம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தவர், பின்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

போலீஸ்

அப்போது, இவருடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற சிலரும் விமானத்தில் பயணம் வந்துள்ளனர். இதையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அந்தச் செய்தியாளர் தாமாகவே மருத்துவப் பரிசோதனைக்கு முன் வந்தார்.

Also Read: டெல்லி மாநாடு; 18 இந்தோனேசியர்கள் உட்பட 20 பேர் மீது வழக்கு! – காஞ்சி, செங்கையில் தொடரும் அதிரடி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நிருபருக்கு சோதனை செய்யப்பட்டதில், கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், அவர் சார்ந்த கிராமம் மற்றும் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வசித்த பகுதி முழுவதும் வேறு யாரும் உள்ளே செல்லாத வகையிலும், ஊரிலிருப்பவர்கள் வெளியே வராத வகையில் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தஞ்சை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.