உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. இன்று உலகின் பல நாடுகளில் லாக் டவுன் உத்தரவுகள் அமலில் இருக்கின்றன. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், சிறிய நாடுகள் எனப் பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரியான தாக்கத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இன்னும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கொரோனா பாதிப்பு

தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அமெரிக்காதான். ஆனால் அதற்கு முன்னதாக, மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய அச்சம் மிகக் கொடியது. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் எனக் கொரோனாவால் பிரிட்டன் கலங்க, மறுபுறம் இத்தாலி நிலை உலக மக்களைக் கலங்க வைத்தது. இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவைப் பெருந்தொற்று என அறிவித்தது.

இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு பெருமளவு ஏற்படுவதற்குக் கால்பந்து ஆட்டங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் நோயின் வீரியத்தை அறியாத இந்த நாடுகள் லாக் டவுன் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தின்போது மைதானத்தில் கூடிய கூட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகப் பரவத் தொடங்கியது. பின்னர் லாக் டவுன் உத்தரவுகள் பிறப்பித்தும், அது பலனளிக்கப் பெரிய கால அவகாசம் தேவைப்பட்டது.

இத்தாலி

ஆம், ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் பிற்பாதி முதல் இந்த நாடுகளில் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது, ஐரோப்பிய மக்களை சற்று நிம்மதி அடைய வைத்திருக்கிறது.

பிரான்ஸ்:

பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் மூன்றாம் தேதி மிக மோசமான நாள். சராசரியாக நாள் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 நபர்களுக்கு புதிதாகத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் ஏப்ரம் 3 -ம் தேதி அன்று மட்டும் ஒரேநாளில் சுமார் 23,000 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தற்போது வரை பிரான்ஸில் 98,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் 8,911 ஆக இருக்கிறது. 17,250 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 2 -ம் தேதி ஒரேநாளில் 1,355 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அதற்கு அடுத்த இரு நாள்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 -க்கு மேல் இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த எண்ணிக்கை முறையே 518 மற்றும் 833 ஆக உள்ளது. இது அதிகம் என்றாலும் அதற்கு முந்தைய நாள்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். இனி வரும் நாள்களிலும் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தினமும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தொட்டிருக்கிறது. எனினும் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இங்கு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன. 1,03,375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,810 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனியில் கொரோனாவால் பலி எண்ணிக்கை

ஜெர்மனியைப் பொறுத்தவரை கடந்த நான்கு நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் புதிய நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும் நேற்று முதல்முறையாக கொரோனாவால் ஒரேநாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 -ஐ தாண்டியுள்ளது. எனினும் இது தொடராது என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டுவருவார்கள் என நம்பலாம்.

இத்தாலி:

சீனாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பின்னர், சீனாவை விஞ்சும் அளவுக்குப் பெரும் பாதிப்புகளை முதலில் சந்தித்தது இத்தாலிதான். இப்போது அந்த எண்ணிக்கையை அமெரிக்காவும், ஸ்பெயினும் முந்திவிட்டது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலிருந்தாலும் கொரோனா ஏற்படுத்திய மரணங்கள் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம் 1,32,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,523 மரணங்கள்.

புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் VS பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள்

கொரோனா பரவும் வேகத்தைக் கண்டு திகைத்த இத்தாலி, நாடு முழுவதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னரும் எண்ணிக்கையில் மாற்றம் தெரியவில்லை. கிட்டத்தட்ட லாக் டவுன் உத்தரவு அமலுக்கு வந்து 20 -க்கும் மேற்பட்ட நாள்கள் கழித்துதான் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தினமும் சராசரியாக 6,000 -க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 4,000 -ஆக குறைந்திருக்கிறது. நேற்று 3,599 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை

மார்ச் மாத இறுதியில் ஒரேநாளில் ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை. தற்போது 24 மணி நேரத்தில் நிகழும் பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேபோன்று கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது மருத்துவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம்.

ஸ்பெயின்:

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இருக்கிறது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 1,36,675 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,341 பேர் பலியாகியுள்ளனர். 40,000 -க்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர்.

ஸ்பெயினில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை

இத்தாலியைப் போலவே ஸ்பெயினிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் குறைய தொடங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்தாலியை ஒப்பிடுகையில் ஸ்பெயினில் மரணங்கள் குறைவாகவும் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.

ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது லாக் டவுன் என்னும் யுத்தி வேலை செய்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த இருநாடுகளிலும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கும் லாக் டவுன் மேலும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சை

குறைந்து வரும் கொரோனா பாதிப்பைக் குறிப்பிட்டு ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ இப்படிச் சொன்னார்… “ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் தூரத்தில் ஒளியைக் காணத் தொடங்கியுள்ளோம்!” என்று!

அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கொரோனா என்னும் பெருந்தொற்றை வென்று மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வருகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.