உலகம் முழுக்கக் கொரோனா பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் மாஸ்க், அடிக்கடி கைகழுவுதல், தனிமைப்படுத்ததுதல் எனத் தற்போது நடந்துவரும் சம்பவங்களை 2019-ம் ஆண்டு வெளியான ‘வைரஸ்’ எனும் மலையாளப் படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ், பார்வதி, குஞ்சாக்கோ போபன், மடோனா செபாஸ்டின், செளபின் சாஹிர், ரேவதி எனப் பல நடிகர்கள் நடித்து வெளியான படம், ‘வைரஸ்’. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸின் தாக்கம் மக்களை எந்தளவுக்குப் பாதிக்கிறது, அவர்கள் எப்படி இறக்கிறார்கள், எப்படி ‘பேஷன்ட் ஜீரோ’வை கண்டறிகிறார்கள், அந்த வைரஸ் தாக்கத்திலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் அப்படம் பேசியிருந்தது. அதில் பணியாற்றிய அனுபவத்தையும், தற்போது நிலவிவரும் கொரோனாவின் தாக்கம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், அப்படத்தின் கதையாசிரியர்களுள் ஒருவரரான ஷர்ஃபு.

Also Read: `Money Heist’, `Sex Education’, `Queen’… க்வாரன்டீனைக் கடக்க உதவும் வெப் சீரிஸ் லிஸ்ட்!
‘வைரஸ்’ கதையைப் படமாக்குற எண்ணம் எப்படி வந்தது?
“2018 மே மாசம் கேரளாவுல நிபா வைரஸ் பரவி எல்லோரையும் பயமுறுத்துச்சு. முதல்ல ஒருத்தருக்கு வந்து, அப்புறம் அவர் மூலமா அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்த நிறைய பேருக்குப் பரவிடுச்சு. 19 பேருல 17 பேர் இறந்துட்டாங்க. ரெண்டு பேர் மட்டும்தான் உயிர் பிழைச்சாங்க. கேரளாவே குறிப்பா, கோழிக்கோடு முழுக்க அப்ப மரண பயத்துல இருந்தது. இது இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. ஒரு நாள் இயக்குநர் ஆஷிக் அபு இந்த நிபா வைரஸ் வெச்சு ஒரு கதை பண்ணலாமானு கேட்டார். அப்படிதான் அந்தக் கதையில வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். நான், சுஹாஸ், முஹ்சின் பராரி எல்லோரும் இதைப் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சோம். ஒவ்வொரு விஷயமா தேடத்தேட ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. 80 சதவிகிதம் உண்மைச் சம்பவத்தையும் 20 சதவிகிதம் கற்பனையையும் சேர்த்துதான் ‘வைரஸ்’ உருவாச்சு.”
இந்தக் கதைக்கு எவ்ளோ நாள் வொர்க் பண்ணீங்க, யாரெல்லாம் சந்திச்சீங்க?

“ஆஷிக் அபு சார் எங்ககிட்ட சொன்னதிலிருந்து ஆறு மாசம் இந்தக் கதைக்காக அலைஞ்சு ஆராய்ச்சி பண்ணோம். அப்ப இந்த நிபா வைரஸால் இறந்தவங்க வீட்டுக்குப் போய் அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். அப்ப இருந்த கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், மெடிக்கல் காலேஜ் புரொஃபெசர்கள், பாதிக்கப்பட்டவங்களுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள், அந்த மருத்துவமனையில் வேலை செஞ்சவங்க, லேப் டெக்னீஷியன்கள்னு நூற்றுக்கணக்கான நபர்களை நேர்ல சந்திச்சு தகவல்கள் சேகரிச்சோம். ஒவ்வொருத்தரும் சொல்லச் சொல்ல அவ்ளோ ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாகவும் இருந்துச்சு.”
இப்ப நம்ம ஊர்ல நடக்குற எல்லா விஷயங்களையும் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே படத்துல தத்ரூபமா காட்சிப்படுத்திருக்கீங்களே!
“நிபா வந்தப்ப என்ன நடந்ததுனு நாங்க எல்லோரும் நேர்ல பார்த்தோம். படம் வெளியாகும்போது டாக்டர்கள் போட்டிருக்க காஸ்ட்யூம் பரவலா பேசப்பட்டது. உண்மையாவே, அந்த நேரத்துல மக்களுக்காக தன்னுடைய உயிரைப் பணயம் வெச்சு வேலை பார்த்த டாக்டர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். இப்ப அரசாங்கம் ஸ்ட்ரிக்டா சொன்ன மாதிரி அப்ப லாக் டவுன் பண்ணச் சொல்லலை. கேரளா அரசாங்கம், ‘இந்த மாதிரி ஒரு வைரஸ் கோழிக்கோடுல பரவிக்கிட்டு இருக்கு. இத்தனை பேர் இறந்திருக்காங்க, அதனால் மக்கள் யாரும் கொஞ்ச நாளைக்கு வெளியே வரவேண்டாம்’னு சொன்னாங்க. அப்ப அவங்கவங்க உயிருக்குப் பயந்து வெளில வராம இருந்தாங்க. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, உண்மைச் சம்பவங்களைக் கொஞ்சம் கற்பனை சேர்த்துதான் கதையை எழுதினோம். ஆனா, ஒரு சிலரைத் தவிர, படத்துல வர்ற எல்லா கேரக்டரும் நாங்க சந்திச்ச மனிதர்கள்.”
கொரோனா வைரஸ் வந்த பிறகு, அமேசான் ப்ரைம்ல நிறைய பேர் ‘வைரஸ்’ படம் பார்த்துட்டு சோஷியல் மீடியாவுல அதைப் பத்திப் பேசுறதைப் பார்க்குறீங்களா?

“பார்த்துட்டுதான் இருக்கேன். நிபா வைரஸுடைய தாக்கம் 2018 ஜூன்ல முடிஞ்சது. உடனே ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணி மொத்தமா 52 நாள்கள்ல ‘வைரஸ்’ படத்துக்கான ஷூட்டிங்கை முடிச்சு 2019 ஜூன்ல படம் ரிலீஸாச்சு. கேரளாவுல படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஏன்னா, எல்லோரும் இந்தச் சூழலை நேர்ல பார்த்திருந்தாங்க. இப்ப உலகம் முழுக்க இந்தச் சூழலைச் சந்திக்கிறதுனால அவங்களுக்கு இந்தப் படம் ஆச்சர்யமாதான் இருக்கோ என்னவோ?”
வெளவால் மூலமாதான் நிபா பரவுச்சுனு படத்துல வரும். கொரோனாவும் வெளவால் கறி சாப்பிட்டதுதான் காரணம்னு சொல்றாங்களே!
“ஆமா. நிபா வைரஸ் பழங்களைச் சாப்பிடுற வெளவால்கள் மூலமாதான் பரவுச்சு. ஆனா, அது எப்படி பரவுச்சுனு யாருக்குமே தெரியலை. கொரோனாவும் அப்படிதான் பரவுச்சுனு முதன்முதல்ல கேட்கும்போது ரொம்ப ஷாக்கா இருந்தது.”
Also Read: கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே… உண்மையா?
#DoubtOfCommonman
படத்துல நடிச்சிருந்த முன்னணி நட்சத்திரங்கள் எல்லோருக்குமே குட்டிக் குட்டி கேரக்டர்கள்தான். எப்படி அவங்க இந்தக் கதையில நடிக்க சம்மதிச்சாங்க?
“இது ஆஷிக் அபு சார் தயாரிச்சு இயக்குற படம். அவர் மேல எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. தவிர, இது ஒரு உண்மைச் சம்பவமா இருக்கிறதுனால ஒரு சமூக அக்கறையில அவங்க எல்லோரும் படத்துல நடிக்க சம்மதிச்சிட்டாங்க. எல்லோர் கூடவும் சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்பத் திருப்தியா இருந்தது.”
கொரோனா வைரஸை எப்படிப் பார்க்குறீங்க?

“நிபா வைரஸுக்கு இறப்பு விகிதம் அதிகம். அதனாலதான் பாதிக்கப்பட்ட 19 பேர்ல 17 பேர் இறந்துட்டாங்க. ஆனா, கொரோனாவைப் பொறுத்தவரை பரவும் விகிதம் அதிகம். அதனாலதான் அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. ரொம்ப ஈஸியா பரவிடுது. ஒருத்தருக்கு நிபா வைரஸ் இருக்கிற அறிகுறிகள் வெளிப்பட்ட பிறகுதான், மத்தவங்களுக்குப் பரவும். ஆனா, கொரோனா நம்மளை அந்த வைரஸ் பாதிச்சிருக்கா இல்லையானு தெரியறதுக்குள்ள பல பேருக்குப் பரவிடும்னு சொல்றாங்க.”
படத்துல நிபாவை எப்படி குணப்படுத்தினாங்கன்னு சொல்லவேயில்லையே!
“ஒண்ணு சொல்லவா? இன்னும் நிபா வைரஸுக்கு மருந்தே கண்டுபிடிக்கல. அதுக்கான ஆராய்ச்சிகள் போயிட்டுதான் இருக்கு. அதுக்குத் தனிமைப்படுத்துதல்தான் ஒரே வழி. அப்பதான் அந்த வைரஸ் பரவுறதையாச்சும் நிறுத்த முடியும். படத்துலயும் ரெண்டு பேர்தான் உயிர் பிழைப்பாங்க. அவங்களையும் மருத்துவமனையில ரொம்ப காலமா தனிமைப்படுத்திதான் வெச்சிருப்பாங்க. அது மாதிரிதான் கொரோனாவும். இந்த மாதிரி ஒரு சூழலைச் சந்திக்கிறது எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. இதுக்கும் இப்போதைக்குத் தனிமைப்படுத்துதல்தான் ஒரே வழி. அதனால அரசாங்கம் சொல்றபடி கேட்டு அதை மக்கள் கடைப்பிடிக்கணும். சீக்கிரம் நிபாவுக்கும் கொரோனாவுக்கும் மருந்து கிடைக்கும்னு நம்புவோம்.”
கார்த்திக் நரேன் இயக்கத்துல தனுஷ் நடிக்கிற படத்துல வொர்க் பண்றீங்க. அந்த வேலைகள் எப்படி போயிட்டிருக்கு?

“இப்பதான் ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். அதுக்குள்ள கொரோனா வந்துடுச்சு. ஸ்கிரிப்ட் வொர்க் நல்லபடியா போயிட்டிருக்கு.”
நிபா வந்து கொஞ்ச நாள்லேயே, அது பத்தி படம் வந்துடுச்சு. கொரோனா பத்தியும் படம் வரும்னு எதிர்பார்க்கலாமா?
“நிச்சயமா எதிர்பார்க்கலாம். நீங்க வேணா பாருங்க. எதாவது ஒரு மொழியில கொரோனா, இந்த லாக் டவுன் இதை எல்லாம் வெச்சு நிச்சயமா படம் உருவாகும். ஏதாவது ஒரு புது விஷயத்தை நோக்கி பயணிச்சுக்கிட்டே இருக்கிறதுதானே கிரியேட்டர்களுடைய வேலை.”
Also Read: நியூயார்க்கில் புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி… எப்படி இருக்கிறது வண்டலூர் பூங்கா?