கொரோனா என்ற ஒற்றை வார்த்தை, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் இந்த வைரஸ், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம்

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் நிலைகுலைந்து நிற்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துவருகிறார்கள்.

அனுமதிச்சீட்டு

ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனைகள் கொடுத்துவருகிறார்கள். அப்படியிருந்தும் பொதுமக்கள் காய்கறி மற்றும் மருந்துப் பொருள்கள் வாங்கப்போவதாகச் சொல்லி சாலைகளில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க முடியாமல் பல மாவட்ட அதிகாரிகள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.

அரியலூர் ஆட்சியர் ரத்னா உத்தரவின்படி, 201 கிராமப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் 1,97,614 குடும்பங்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காகச் செல்வோருக்கு நீலம், பச்சை, ரோஸ் என மூன்று நிறங்களில் கிராமப் பஞ்சாயத்து அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா

பச்சை வண்ண அட்டை வைத்துள்ளவர்கள், திங்கள் மற்றும் வியாழன் அன்றும், நீலவண்ண அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி அன்றும், ரோஸ் வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை வெளியே வந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்லலாம். இதிலிருந்து மருந்து மற்றும் அவசர காலத் தேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக அரியலூர் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த அனுமதிச் சீட்டு முறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

இதுகுறித்து ஏடி பஞ்சாயத்து செயல் அலுவலர் பழனிசாமியிடம் பேசினோம். ”ஆதார் அட்டை எப்படி முக்கியமோ அது போலத்தான் அரியலூர் மாவட்டத்திற்கு இந்த அட்டை மிக அவசியம். இது, கொரோனா விவகாரத்திற்காக மட்டும். பச்சை, நீலம், ரோஸ் என மூன்று வண்ணங்களில் உள்ள அட்டையை ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கொடுத்திருக்கிறோம்.

கிருமி நாசினி தெளிப்பு

அவர்கள், அந்தந்த நாள் மட்டுமே இந்த அட்டையை எடுத்துவந்து பொருள்களை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். அதுவும் வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி. வெளியில் வந்தவர்கள் மதியம் ஒரு மணிக்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும். அப்படி வீட்டுக்குப் போகாமல் சும்மா சுற்றித்திரிபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதையும் மீறி மக்கள் கூடினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை போலீஸாரின் உதவியோடு எடுக்க இருக்கிறோம். வீட்டைவிட்டு வெளியே வரும்போது மாஸ்க் எப்படி முக்கியமோ அதுபோலத்தான் இந்த அட்டையும். ஆட்சியரின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.