கொரோனா – பரவும் விதமும் பெருகும் முறையும்…

கோவிட்-19… கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் மிரட்டி வீட்டுக்குள்ளேயே சுருட்டி வைத்திருக்கும் வைரஸ். இதற்கு இன்னும் சரியான மருந்து அறியப்படாத நிலையில் ‘சமூக விலகல்’ என்ற ஒன்றையே ஆயுதமாக ஏந்திப் போராடி வருகிறோம்.

விலகி இருத்தல் Social Distancing

கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளவரிடமிருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல், தொடுதல் மூலம் வைரஸ் எளிதாகப் பரவும் என்பதால், சமூக விலகலும் தனிமைப்படுத்திக்கொள்ளுதலும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. கொரோனா பரவல் A, B, C, D என்று நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.

A (Imported Cases) – நோய்த்தொற்று உள்ள பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் நம் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவது.

B (Local Transmission) – பாதிப்போடு வரும் பயணிகள் தங்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியாமல், கூட்டமாக இருக்கும் பொது இடங்களில் நடமாடும்போது அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தொற்றைப் பரப்புவது.

நான்கு நிலை

C (Community Transmission) – பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து நோய்த் தொற்றைப் பெற்றவர்கள், தங்கள் குடும்பம், நண்பர்கள் என அடுத்தடுத்த நபர்களுக்கு அதைப் பரப்புவது.

D (Epidemic) – மேற்கண்ட மூன்று வகையினரால், மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதிலும் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவுவது.

இந்த நான்கு நிலை நோய்ப் பரவலைத் தடுப்பதற்காகவே, பாதிப்பு ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதலும், நோய்த் தொற்று இல்லாதவர்கள் வீட்டுக்குள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுதலும் அறிவுறுத்தப்படுகிறது.

விலகி இருத்தல்ocial Distancing

வைரஸ் தொற்றால் நம் உடல் பாதிக்கப்படும் விதம் பற்றியும், தனித்திருத்தலின் முக்கியத்துவம் பற்றியும் நுண்ணுயிரியல்துறை பேராசிரியர் டாக்டர். அருண் பிரசாத்திடம் பேசினோம்.

Also Read: அடுத்த ஒரு மாதம் தனித்திருக்காவிட்டால், என்ன ஆகும் தெரியுமா? – எச்சரிக்கும் மருத்துவர்கள்! #LongRead

“கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளவரின் இருமல், தும்மலின் வழியே லட்சக்கணக்கான வைரஸ்கள் வெளிப்படும். இது, அவரின் இருமல், தும்மல் நீர்த் திவலைகளில் குறிப்பிட்ட நேரம்வரை உயிர்வாழும் என்பதால் அதன் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர். அருண் பிரசாத்

எனவே, பாதிப்பு உள்ள ஒருவரைத் தொட்டுவிட்டோ, அவரிடமிருந்து இருமல், தும்மல் மூலம் வெளிப்பட்ட நீர்த் திவலைகளைத் தெரியாமல் தொட்டுவிட்டோ கைகளைக் கழுவாமல் முகத்தில் வைக்கும்போதோ கண், மூக்கும், வாய் துவாரங்கள் வழியே வைரஸ் நம் உடலில் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, 14 நாள்கள் வரை பெரிதாக அறிகுறிகள் எதுவும் இருக்காது. காரணம், இது வைரஸின் இன்குபேஷன் (Incubation) காலம். அதாவது ஒரு விதை செடியாக மாற குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்வதுபோல நம் உடலுக்குள் நுழையும் ஒரு வைரஸ், பல்கிப் பெருகிட குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்ளும்.

மரபு மூலக்கூறு

வைரஸ் என்பது மரபு மூலக்கூறு கொண்ட (DNA or RNA) புரத மூலக்கூறு. கோவிட்-19 வைரஸ் RNA-வை மரபு மூலக்கூறாகக் கொண்டது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் நம் உடலுக்குள் நுழையும் இது, நம் உடல் செல்களில் ஊடுருவி அவற்றை அழித்துவிட்டு பல்கிப் பெருகுகிறது.

ஒருவேளை, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில், உடலுக்குள் சென்ற வைரஸ் 14 நாள்களுக்குள் பேகோசைடாசிஸ் (Phagocytosis) செயல் மூலம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

ரத்த வெள்ளையணுக்கள்

பேகோசைடாசிஸ் என்பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களான ரத்த வெள்ளையணுக்கள் (White Blood Cells), உடலுக்குள் நுழைந்த நோய்க்கிருமிக்கு எதிராகப் போரிட்டு அவற்றை அழித்து ஜீரணிக்கும் முறை.

Also Read: “கொரோனா வைரஸ்களிலிருந்து தற்காக்க… காரத்தன்மை உணவுகள்!” – ஊட்டச்சத்து நிபுணர்

ஆனால், நாம் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவராகவோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவராகவோ இருந்தால், உடலுக்குள் சென்ற 15-வது நாளில் வைரஸ் தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தும். நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளைப் பாதிக்கும். ஏற்கெனவே நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கம் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

Disease carrier

சிலர், நோய்க் கடத்திகளாக (Disease carrier) மட்டும் செயல்படுவார்கள். அதாவது, இவர்களின் உடலில் வைரஸ் தொற்று இருந்தாலும் அது இவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், இவர்களுடன் தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்குப் பரவி நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற காரணங்களால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது அவசியமாகிறது. நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம்” என்றார் அருண் பிரசாத்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.