கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. சீனாவை அடுத்து அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 7 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவர் பணிக்குத் திரும்புவதாக அறிவித்திருக்கிறார் அயர்லாந்து பிரதமர் லியோ.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக மருத்துவராகப் பணியாற்றி வந்தவர். டப்ளினில் இருக்கும் செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனை மற்றும் கான்னோலி மருத்துவமனை ஆகியவற்றில் சுமார் 7 ஆண்டுகளாக மருத்துவராக அவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர். அவர் அயர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது மருத்துவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
Also Read: கொரோனா வைரஸுக்கு மருந்து பாக்டீரியாவா! – ஆய்வுகள் சொல்வது என்ன?
அயர்லாந்தில் இதுவரை 4,994 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பாதிப்பால் 158 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் அரசுடன் கைகோக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சிமோன் ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். இதற்காக அரசு சார்பில் தனியாக பிரசாரமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று, இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ளனர்.

இந்தநிலையில், மருத்துவராக மீண்டும் தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ள அயர்லாந்து பிரதமர் லியோ, தன்னால் முடிந்த சிறிய உதவியையாவது செய்ய முனைப்புடன் இருப்பதாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். வாரம் ஒருமுறை என அவர் தனது மருத்துவ சேவையைத் தொடர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தோடு அரசைத் தொடர்புகொள்பவர்களிடம் போனில் பேசி, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகள் மற்றும் அவர்களது பயண விவரங்களைக் கேட்டு போன் மூலமே முதற்கட்ட ஆய்வை மேற்கொள்ளும் ஸ்க்ரீனிங் பணியில் அவர் ஈடுபட இருக்கிறார். `இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒரு மருத்துவராகத் தன்னால் இயன்ற சின்ன உதவியையாவது செய்ய வேண்டும்’ என்று பிரதமர் லியோ விரும்புவதாகவும் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Also Read: இம்போர்ட்டட், லோக்கல், கம்யூனிட்டி, எபிடெமிக்… நான்கு வகை கொரோனா கடத்திகள்… மருத்துவர் விளக்கம்!

மருத்துவர்கள் அதிகம் கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்ட லியோவின் தந்தை அஷோக் வரத்கர், மகாராஷ்டிர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 38 வயதில் அயர்லாந்து பிரதமராகப் பதவியேற்று, அந்நாட்டின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேபோல், வெளிப்படையாகத் தன்பாலின ஈர்பாளர் என்று அறிவித்துக்கொண்ட அயர்லாந்தின் முதல் பிரதமரும் அவரே. அவர் தாய் செவிலியராகப் பணியாற்றியவர். அதேபோல், லியோவின் பாட்னர், சகோதரிகள் இருவர் மற்றும் அவர்கள் கணவர்கள் என அவரது குடும்பத்தில் பெரும்பாலானோர் மருத்துவத் துறையிலேயே பணியாற்றி வருகிறார்கள்.