கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தினமும் கொரோனா தொடர்பான செய்திகள் நொடிக்கு நொடி வெளியாகி வருகின்றன. இளவரசர் முதல் பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

Also Read: `புதிதாக 29 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..’ – எண்ணிக்கை அதிகரிப்பால் அதிர்ச்சியில் கோவை

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஸ்டேஜ் 2-ல் இருப்பதாக சுகாதாரத்துறையினர் கூறிவருகின்றனர். சமூக பரவலைத் தடுக்க வீடு வீடாகக் கணக்கெடுப்புப் பணி நடந்துவருகிறது. இந்தச் சூழலில் கடந்த 2-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 71 வயது நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், அன்றைய தினமே மரணமடைந்துள்ளார்.

சென்னையில் குடியிருந்த அந்த நபரின் சொந்த ஊர் ராமநாதபுரம், கீழக்கரை. அதனால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து அவரின் சடலம், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதனால், அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஆர்.எம். ஓ-வின் அனுமதி கடிதம்

இதுகுறித்து ராமநாதபுரம் எம்.பி, நவாஸ்கனி கூறுகையில், “சென்னை மண்ணடியில் குடியிருந்து வரும் அந்த நபர், துபாயில் பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 20 தினங்களுக்கு முன்பு துபாயிலிருந்து அவர் சென்னை திரும்பினார். அதனால் அவரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.

ஏப்ரல் 2-ம் தேதி காலையில் அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் வருவதற்கு முன்பே அன்று மாலை அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சடலத்தை அடக்கம் செய்ய ராமநாதபுரம் கீழக்கரைக்கு கொண்டு செல்ல மருத்துவமனை தரப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னையிலிருந்து ராமநாதபுரம் கீழக்கரைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்த பிறகு அவருக்கு கொரோனா உறுதி என்று ரிப்போர்ட் வந்துள்ளது. தற்போது அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தை லாக் டவுன் செய்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மெத்தனபோக்குக் காரணமாக இன்று தேவையில்லாமல் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவு வருவதற்கு முன் உடலை கொடுத்தது தவறு” என்றார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன், ஆர்.எம்.ஓ ஆகியோரிடம் பேச அவர்களைத் தொடர்பு கொண்டோம். ஆனால், இருவரும் பதிலளிக்கவில்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் கூறுகையில்,“வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்துள்ளனர். உடல் நலம் மோசமான நிலையில்தான் 71 வயது நபர், மருத்துவமனையில் 2-ம் தேதி காலை 9.25 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற மருத்துவக்குழு தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். மூச்சுத் திணறல் என்று இறப்புக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவரின் உறவினர்கள் வற்புறுத்தியதால்தான், சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அனுமதியளித்தோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.