உலகப் பணக்காரர்களில் ஒருவரும், உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவருமான வாரன் பஃபெட், தான் கைவசம் வைத்திருந்த ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ எனும் நிறுவனத்தின் 314 மில்லியன் டாலர் விலை கொண்ட பங்குகளையும், ‘சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் 74 மில்லியன் டாலர் பங்குகளையும் விற்றிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வாரன் பஃபெட்டின் பெர்க்ஷெர் ஹாத்வே நிறுவனம், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கின் விலை 46.40 டாலர் எனும் விலையில் 71.9 மில்லியன் பங்குகளை வாங்கியது. இது, டெல்டா நிறுவனத்தின் மொத்தப் பங்கு விகிதத்தில் 11.2 சதவிகிதம். தற்போது இந்தப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முக்கியக் காரணம் விமானத் துறையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாரன் பஃபெட் விற்பனை செய்த இந்த இரு விமான நிறுவனங்களாலும் கொரோனா பாதிப்பால் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க இயலவில்லை. இதனால் சம்பள மானியம் பெற அமெரிக்காவின் கேர்ஸ் (cares act ) திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. மேலும், டெல்டா மற்றும் இதர விமான நிறுவனங்கள் அரசின் உதவிகிடைக்கவில்லை எனில் பெரும்பாலான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.

ஏற்கெனவே டெல்டா நிறுவனம், தனது இரண்டாவது காலாண்டு முடிவில் வருமானம் 90 சதவிகிதமாகக் குறைந்தே காணப்படும் எனத் தெரிவித்திருந்தது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே ஹாத்வே நிறுவனம் தனது விமானப் பங்குகளை விற்றுள்ளது. பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்திருந்தாலும் ஹாத்வே நிறுவனத்திடம் டெல்டா விமான நிறுவனத்தின் 59 மில்லியன் பங்குகளும், சவுத்வெஸ்ட் விமான நிறுவனத்தின் 51.3 மில்லியன் பங்குகளும் மிச்சம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் 650க்கும் மேற்பட்ட வணிக விமானங்கள், தனியார் ஜெட்கள் செயல்படாமல் உள்ளன. கொரோனா தொற்றால் ஒட்டு மொத்த விமானத் துறையே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து இந்திய மதிப்பீடு நிறுவனமான ICRA கூறுகையில், “மற்ற துறைகளைப் போல இந்திய விமானத் துறையின் செயல்பாடும் கொரோனாவால் எதிர்மறையாகத்தான் உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட எல்லா நாடுகளிலும் விமானத் துறை பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. அதில் இந்தியாவும் அடக்கம். உலகளாவிய விமானத் துறையின் பாதிப்பு உலகப் பொருளாதாரச் சரிவில் நிச்சயம் வெளிப்படும்” என்று கூறியுள்ளது.
Also Read: `கொரோனாவால் விமான வருவாய் 44 சதவிகிதம் குறையும்..!’ – IATA கணிப்பு
இந்திய விமானத் துறை இதற்கு முன்பு பொருளாதார ரீதியாகச் சற்று சரிந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சீர்செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விமானத் துறை சார்ந்த வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.