கடந்த சில மாதங்களில் எப்போதாவது பெரியமேட்டுக்குப் பக்கம் சென்றிருக்கிறார்களா? அப்படிப் போயிருந்தால் நிச்சயம் இந்தப் பெயரைக் கேட்டிருப்பீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் பெயரைக் கொண்டாடுவதைக் காட்டிருப்பீர்கள். சென்ட்ரலிலிருந்து நேரு ஸ்டேடியம் வரைப் பல இடங்களில் இந்தப் பெயர் கொண்ட பேனர்களைப் பார்த்திருப்பீர்கள். எட்வின் சிட்னி… சென்னை சிட்டி அணியிலிருந்து சென்னையின் FC-க்கு வந்தவர், உடனடியாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார். முதல் போட்டியிலிருந்து கடைசிவரை தன் 100 சதவிகிதத்தைக் கொடுத்தார்.

ரைட் பேக், ஹோல்டிங் மிட்ஃபீல்டர் என அணிக்குத் தேவையான பொசிஷன்களிலெல்லாம் தயங்காமல் ஆடினார். ஒவ்வோர் இடத்திலும் அசத்தினார். வல்லுநர்கள் சொல்வதுபோல் களத்திலிருந்த ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய A கேமை வெளிப்படுத்தினார். உள்ளூர் வீரர்களைக் கொண்டாட முடியாமல் தவித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டுக் கால்பந்து ரசிகர்களின் ஆஸ்தான நாயகன் இப்போது எட்வின்தான். பேக் டு பேக் டைட்டில்களை நூழிலையில் தவறவிட்டவர், அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்…

Also Read: கங்குலி, தோனி, கோலி… கேப்டன்களை உருவாக்கும் 183 மேஜிக்! #Nostalgia

ஐ-லீக் டூ ஐ.எஸ்.எல் பயணம் எப்படியிருக்கு? எப்படி இந்தத் தொடரோட எதிர்பார்ப்புகளுக்கு உங்களைத் தயார்படுத்திக்கிட்டீங்க?

“இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஆனா, இது என்னோட மிகப்பெரிய வெற்றினு சொல்ல மாட்டேன். அடுத்தடுத்து சிறப்பா செயல்பட இது ஒரு மிகப்பெரிய உந்துதலா இருக்கும். முதல் சீசன்லயே ஃபைனல் வரை போனது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் டீம் ஆரம்பத்துல இருந்த நிலைமையில, இது ரொம்பப் பெரிய விஷயம். தொடக்கத்துல எல்லோத்துக்கும் செட் ஆகுறது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. தொடர் தோல்விகள். அதுவும் சாதாரண தோல்விகள் கிடையாது, பெரிய பெரிய தோல்விகள். இடையில கோச் வேற டீமைவிட்டுப் போயிட்டார். இப்படி ரொம்ப கஷ்டமான சூழ்நிலைகளைச் சந்திச்சோம். அதெல்லாம் மிகப்பெரிய பாடம்னுதான் சொல்லணும். அதுவுமில்லாமல் புது ரோல் வேற. இது சந்தோஷமும் வருத்தமும் கலந்த ஒரு நல்ல அனுபவம்.”

சென்னை ரசிகர்கள் மத்தியில நேரு ஸ்டேடியம்ல அந்த அனுபவம் எப்படி இருக்கு?

“ஒவ்வொருத்தரோட கால்பந்து வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய கனவு இருக்கும். பெரும்பாலானவங்களுக்கு நேஷனல் டீமுக்கு ஆடுறதுதான் லட்சியமா இருக்கும். அந்த மாதிரி, ஹோம் டீமுக்கு, ஹோம் கிரவுண்ட்ல, நம்ம ரசிகர்கள் முன்னாடி ஆடணும்கிறதுதான் என்னோட ஆசையா இருந்துச்சு. ஐ-லீக், ஐ.எஸ்.எல் மாதிரி டோர்னமென்ட்லாம் ஆரம்பிச்சப்ப அதுல விளையாடணும்னு நினைச்சிருக்கேன். அது இப்ப நடந்திருக்கு. நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நேரு ஸ்டேடியம்ல விளையாடுறதைப் பத்தி என்ன சொல்றது… அந்த சத்தம்…. ப்பா. அவ்ளோ எனர்ஜடிக்கா இருக்கும். நம்ம ஒரு கோல் அடிச்சதும் அந்த ஸ்டேடியமே அதிரும் அந்தத் தருணம்… சொல்ல முடியாத சந்தோஷம் கொடுக்கும். நம்மள ஒவ்வொரு நொடியும் உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. ஒவ்வொரு நொடியும்! பயங்கர மோடிவேஷனலா இருக்கும். அவங்களுக்காக நல்லா விளையாடணும்னு தோணிட்டே இருக்கும். உள்ள ஒரு ஃபையர் கிளம்பும். ரிட்டையர் ஆகும்போது அதப்பத்தி இன்னும் நிறையப் பேசலாம்!”

தொடர் தோல்வி, பயிற்சியாளர் மாற்றம்… இதுக்கெல்லாம் மத்தியில டீமோட மனநிலை எப்படி இருந்துச்சு?

“டீம்ல யாருமே அப்ப நல்ல மனநிலையில இல்ல. டிரெய்னிங் செஷன்லாம் ரொம்ப மோசமா இருந்துச்சு. நமக்கே தெரியும், எதுவும் சரியா இல்லைனு. என்னனு யாராலும் சரியா கணிக்க முடியல. யாரும் சரியா பேசிக்க மாட்டோம். போட்டியோட முடிவெல்லாம் நமக்கு எதிரா வரும்போது யாரால நிம்மதியா இருக்க முடியும். எந்த ஃபன்னும் இருக்காது. ஒருத்தருக்கொருத்தர் நல்லா பழகவும் முடியல. எல்லோரும் புரொஃபஷனல் பிளேயர்ஸ். அதிலிருந்து வெளிய அவ்ளோ சீக்கிரம் வர முடியல. ஹைதராபாத் மேட்ச்ல ரிசல்ட் மாறுச்சு. ஆனா, கோச் வெளிய போறேன்னு சொல்லிட்டார். அந்த சில மணி நேரங்கள் இன்னும் மோசமா இருந்துச்சு.”

Edwin Sydney

எப்படி அந்த அதிரடி கம்பேக் சாத்தியமாச்சு?

“கஷ்டம் வரும்போது மெச்சூரிட்டி வரும்னு சொல்வாங்க. கோச் கிரகரி டீமைவிட்டுப் போனப்ப அத நாங்க உணர்ந்தோம்னு நினைக்கிறேன். எல்லோருமே ரொம்பத் தரமான வீரர்கள். ஆனா, யாராலும் அந்தச் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஸ்டெப்அப் பண்ண முடியல. சில நல்ல வாய்ப்புகளப் பயன்படுத்த முடியாம தவறவிட்டுட்டே இருந்தோம். `நான் கிளம்பறேன்’னு கோச் எங்ககிட்ட சொன்னப்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ஏன்னா, அவர் வெளிய போறதுக்கானக் காரணம் நாங்கதான். ஒரு டீம் நல்லா ஆடலைன்னா எப்பவுமே பயிற்சியாளர் மேலதான் விமர்சனம் வைப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தப்பு பிளேயர்ஸ் மேலதான் இருக்கு. நாங்கதான் விளையாடுறவங்க. ஆட்டத்தோட முடிவுக்கு நாங்கதான் பொறுப்பேத்துக்கணும். ஏன்னா, இதே கிரகரிதான் சென்னைக்குக் கப் வாங்கிக் கொடுத்தவர்.

அவர் போன அப்புறம் நாங்க எங்களுக்குள்ள நிறைய பேச ஆரம்பிச்சோம். எங்களோட பொறுப்புகளை உணர ஆரம்பிச்சோம். அடுத்த மேட்ச் என்ன பண்ணணும்னு மட்டும் யோசிச்சோம். எல்லோரும் அவங்களோட சிறப்பான பெர்ஃபாமன்ஸக் கொடுத்தோம். ஜெயிக்க ஆரம்பிச்சோம். ஒரு மேட்ச் தோத்தாக்கூட எல்லாம் காலின்றது மட்டும் ஓடிட்டே இருந்துச்சு. ஒவ்வொரு மேட்சையும் ஃபைனலா நினைச்சிக்கிட்டு ஆடுனோம். மேட்ச் அப்ப மட்டும் தோத்துடுவோமோகிற எண்ணமே இருக்கக்கூடாதுனு முடிவு பண்ணோம். எல்லாம் சரியாச்சு. பெங்களூர் மேட்சுக்கு அப்புறம் எல்லாம் மாறுச்சு.”

அவன் காயல் – வந்தவுடனேயே ரிசல்ட் மாறுச்சே! என்ன மாயம் பண்ணாரு?

“நம்மளோட தப்ப உணர்ந்தா மட்டும் போதாது. அதைச் சரியா மாத்த ஒரு உந்துதல் தேவை. எங்களுக்கு அது காயல் கோச் மூலமா கிடைச்சது. பயங்கரமா எங்களை மோட்டிவேட் பண்ணுவார். சாப்பிடுற இடத்துல பார்த்தாக்கூட மோட்டிவேட் பண்ற மாதிரி பேசுவார். எந்த நேரமும் எங்களை புஷ் பண்ணிட்டே இருப்பார். அவர் பேசுனாலே செமயா இருக்கும். அதே மாதிரி, ஒரு பிளேயர் தப்பு பண்ணாக்கூட மத்தவங்க இருக்கும்போது எதுமே சொல்லமாட்டார். தனியா கூப்பிட்டுதான் பேசுவார். செம கூல். எல்லோரையும் அவ்ளோ கம்ஃபர்ட்டா உணர வெச்சார். அதுதான் அவரோட மேஜிக்னு நினைக்கிறேன்.”

அந்த இறுதிப் போட்டி… ரசிகர்கள் இல்ல, திடீர்னு நீங்க ஸ்டார்ட்டிங் லைன் அப்ல இல்ல, முடிவும் எதிர்பார்த்த மாதிரி இல்ல. அந்த ஃபைனல் அனுபவம் எப்படி இருந்துச்சு. வழக்கமா நீங்க உள்ள இறங்கும்போது ஆட்டம் சமநிலையில் இருக்கும். ஆனால், அப்ப அப்படி இல்ல. இறங்கும்போதே நெருக்கடி. தொடர் வெற்றிகள், ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, எவ்ளோ வித்தியாசமா இருந்துச்சு அந்த நாள்?

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வெற்றிக்காத்தான் அவ்ளோ உழைச்சோம். ஆனா, அதை எட்ட முடியல. சொல்றதுக்கு வேற எதுவும் இல்ல. ஆனா, அதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். சில தவறுகள் செஞ்சோம். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கத் தவறிட்டோம். என்னைப் பொறுத்தவரைக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு. அவங்க மூணாவது கோல் அடிச்சதும் பெருசா கவுன்டர் பண்ணவேயில்ல. அவங்க ஹாஃப்லயே டிஃபண்ட் பண்ணிட்டுத்தான் இருந்தாங்க. முதல் பாதில கொஞ்சம் நெருக்கடி கொடுத்தாங்க. ஆனா, இரண்டாவது பாதியில பெருசா ஏதும் இல்ல. நிறைய ஷாட்ஸ் போஸ்ட்ல பட்டு மிஸ் ஆகிடுச்சு. ஆண்ட்ரே (ஷெம்ப்ரி) அடிச்ச ஷாட்லாம் கோல் ஆகியிருந்ததுன்னா மேட்ச் மாறியிருக்கலாம்.

சொன்ன மாதிரி ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆச்சு. செமி ஃபைனல்ல கொஞ்சம் நல்லா ஆடல. அதனால பெஞ்ச்ல ஸ்டார்ட் பண்ண வேண்டியதா இருந்துச்சு. ஆனா, ரெடியா இருக்கச் சொல்லி கோச் சொன்னார். எப்படியும் ரெண்டாவது பாதியில வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். இருந்தாலும் திடீர்னு ஜெர்மன் வெளிய வந்ததால உள்ள போக வேண்டியதாப்போயிடுச்சு. வார்ம் அப் பண்ணி ரெடியாகூட இல்ல, முதல் சில நிமிஷம் கொஞ்சம் பதற்றமாதான் இருந்துச்சு. அப்றம் செட் ஆகிடுச்சு. கடைசி வரை நம்புனேன். ஆனா, ஆட்டம் மாறல. மாத்த முடியல.”

ரசிகர்களே இல்லாம ஒரு பெரிய ஃபைனல் விளையாடினது எப்படி இருந்துச்சு?

“உண்மையைச் சொல்லணும்னா, பிராக்டீஸ் மேட்ச் விளையாடுற மாதிரி இருந்துச்சு. ஃபைனல் இப்படியொரு சூழ்நிலையில நடக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்ல. ஆனா, அந்த முடிவு நல்லதுதான். எல்லாத்தயும்விட நம்ம உயிர்தானே முக்கியம். இந்த மாதிரி முடிவுகளுக்கு நாம ஒத்துழைப்பு கொடுத்துத்தான் ஆகணும். இருந்தாலும் நிறைய ரசிகர்கள் சென்னையில இருந்து கோவாக்கு வந்தாங்க. ஸ்டேடியம் வரலைனாலும் எப்படியாவது சப்போர்ட் பண்ணணும்னு நினைச்சு வந்தாங்க. அதுவே பெரிய விஷயம்.”

Jerry & Edwin Sydney

ரைட்பேக் டூ ஹோல்டிங் மிட்ஃபீல்ட்… எப்படி உங்கள் தயார்படுத்திக்கிட்டீங்க?

“ஏற்கெனவே அந்த பொசிஷன்ல ஆடிருக்கேன். ஆனா, அதுவும் ஆரம்ப காலத்துலதான். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உடல் அளவுல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. டெக்னிக்கலா ரொம்ப சவாலாவும் இருந்துச்சு. முதல் மேட்ச்ல கொஞ்சம் தடுமாறுனேன். கொஞ்சம் தப்பும் பண்னேன். ஆனா, கோச்சுக்கு என் ஆட்டம் பிடிச்சிருந்துச்சு. என்னென்ன தப்புப் பண்றேன்னு தனியா கூப்பிட்டுச் சொன்னார். அப்புறம் தாபா, ஜெர்மன்ப்ரீத் ரெண்டு பேரும் நல்லா சப்போர்ட் பண்ணாங்க. அவங்க மட்டுமில்ல, எல்லோருமே நல்லா சப்போர்ட் பண்ணாங்க. சீக்கிரமே செட் ஆகிட்டேன்.”

ஃபைனல்ல உங்க பழைய டீம்மேட்ஸுக்கு எதிரா விளையாடினது எப்படி இருந்துச்சு. உங்கள ஃபவுல் பண்ணதுக்கு ரெஜின் வேற ரொம்ப வருத்தப்பட்டாரு!

“நம்ம ஆளுங்க 4 பேரு ஃபைனல்ல விளையாடுறோம்னு நினைச்சப்பவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இது நிறைய பேருக்கு நம்பிக்கை கொடுக்கும். `நம்ம ஊர் பசங்க ஆடுறாங்க’னு அவங்களும் புரொஃபஷனலா ஆடத் தொடங்குவாங்க. பெற்றோர்களும் நல்லா ஆதரிப்பாங்க. இது நல்ல விஷயம். ரெஜின் அண்ணா, சூசை ரெண்டு பேரும் ஜெயிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆரம்பத்துல இருந்தே ரொம்ப நல்லா விளையாடினாங்க. ரெஜின் அண்ணா கிரவுண்ட்லயே அவ்ளோ ஃபீல் பண்ணார். சாரிலாம் வேற கேட்டார். `கேம்ல இதெல்லாம் இருக்கிறதுதானே. ஒண்ணும் இல்லணா’னு சொன்னேன். அப்பவும் அவர் கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டு இருந்தார். அவர் இடத்துல நான் இருந்திருந்தா, நானுமே அதைத்தான் செஞ்சிருப்பேன். ஆனா, அவர் ஃபீல் பண்ற அளவுக்கு எங்களுக்கு நல்ல புரிதல் இருக்கு. அதை நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.”

சென்னையின்ல உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள்?

“சாங்டே, தாபா ரொம்ப க்ளோஸ். அவங்களை பயங்கரமா கலாய்ச்சிட்டே இருப்பேன். இந்தியன் பிளேயர்ஸ் எல்லோருமே நல்லா க்ளோஸா பழகுறாங்க. புது ஆளுனு யாரும் நினைக்கில. ரொம்பவே நல்லாப் பழகுறாங்க. எல்லார்கிட்டயுமே ரொம்ப வருஷம் பழகின ஃபீல் வந்திடுச்சு. வெளிநாட்டு வீரர்களும் அதே மாதிரிதான். சின்னப்பசங்க மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருப்பாங்க. எல்லோருக்கும் இங்க நான்தான் கைட். யாருக்கு என்ன வாங்கப் போகணும்னாலும் நான்தான் கூட்டிட்டுப் போவேன். ரிசல்ட் மாற ஆரம்பிச்சதும் எல்லாமே மாறுச்சு.”

இந்தியன் டீம் கால் அப் வந்திருக்கு. இதை எதிர்பார்த்தீங்களா? உங்களோட Versatility உங்களுடைய மிகப்பெரிய பலமா இருக்கும்னு நினைக்குறீங்களா?

“எல்லோரும் சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா, நான் எதிர்பார்க்கவே இல்ல. சூசையைக்கூட நான் கலாய்ச்சிட்டு இருப்பேன். இதை நான் உண்மையாவே எதிர்பார்க்கல. ஒரு இன்டர்வ்யூல இருந்தப்பதான் லிஸ்ட் வந்திருக்கு. என் மீடியா மேனேஜர் சொன்னப்ப அவ்ளோ ஷாக்கிங்கா இருந்துச்சு. நிறைய நல்ல பிளேயர்ஸ் இருக்கும்போது இந்த வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்ல. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய பொசிஷன்ல விளையாடுறது எனக்கு நிச்சயமா ப்ளஸ்தான். கோச்சுக்குத் தேவையானதை, டீமுக்குத் தேவையானதை எந்த நேரமும் நம்மால கொடுக்க முடிஞ்சது நல்லதுதானே! விங், விங்பேக், ஃபுல்பேக், மிட்ஃபீல்ட்னு எந்த பொசிஷன்லனாலும் விளையாட ரெடியா இருக்கேன்!”

உங்களோட ரோல் மாடல்?

“நிறைய பேர் இருக்காங்க. என் வாழ்க்கைல நிறைய கட்டத்துல நிறைய பேர் உதவி பண்ணிருக்காங்க. அவங்க எல்லோரையுமே நான் ரோல் மாடலாத்தான் பார்க்குறேன். அதைத்தாண்டி ஃபுட்பால்ல சொல்லணும்னா, கிறிஸ்டியானோ ரொனால்டோ.”

Also Read: தோனி சிக்ஸ், கம்பீர் ஃப்ளிக்ஸ், யுவி மாஸ்..! – 2011 ரீவைண்ட் #VikatanPhotoCards #WC2011

இப்ப இந்த சூழ்நிலைல எங்க இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

“நான் உடனே ஊருக்கு வந்துட்டேன். நெய்வேலிலதான் இருக்கேன். அப்பப்போ வீட்டு வேலை, தோட்ட வேலைலாம் செய்றேன். ஸ்கூல் படிக்கும்போது என்ன பண்ணிட்டு இருந்தேனோ, அதைத்தான் இப்பவும் பண்ணிட்டு இருக்கேன்!”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.