விஜயபாஸ்கருக்கு எதிராக சீனியர் ஐ.ஏ.எஸ்-கள்!

ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்து சுகாதாரத்துறை அமைச்சரானவர் விஜயபாஸ்கர். குட்கா வழக்கு, வருமானவரித் துறை ரெய்டு, சி.பி.ஐ விசாரணை எனப் பல பிரச்னைகளை சமாளித்து அவர் இப்போது `ஓவர் பில்ட் அப்’ பிரச்னையில் திணறிவருகிறார். விஜயபாஸ்கரை திடீரென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டியதன் பின்னணியில் இன்னும் சில சங்கதிகள் இருப்பதாகச் சொல்கின்றனர்.

பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்

இதுவரை விஜயபாஸ்கருடன் இணக்கமாக இருந்து சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தரப்பிலிருந்து சொன்ன சில தகவல்கள்தான் விஜயபாஸ்கருக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக முன்பு சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் தரப்பிலிருந்து சிலர் கூறியுள்ள தகவல்களும் முதல்வர் தரப்பை கடுப்பாக்கிவிட்டதாம். தவிர, சில சீனியர் ஐ.ஏ.எஸ்-களும் இப்போது அமைச்சர் விவகாரத்தில் அவருக்கு எதிராக ஓரணியாகச் சேர்ந்திருக்கிறார்களாம்.

‘முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா?’

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் என தி.மு.க-வினர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகின்றனர். ஆனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கொரோனா அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கட்சி நிர்வாகிகள் அழைத்தால்கூட, ஏதாவதொரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து விடுகின்றனராம். `முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா?’ என்று கடுப்பான அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர், `எங்கே எம்.எல்.ஏ-க்கள்?’ என்று சுவரொட்டி அடித்து ஒட்டுங்கள் என்று எதிர்க்கட்சி நண்பர்களிடம் சொல்லி வருகின்றார்களாம்.

நாராயணசாமி Vs ஜான்குமார்!

புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியில் அமர்ந்த நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்தார் ஜான்குமார். அதற்கு நன்றிக் கடனாக காமராஜர் நகர் இடைத்தேர்தலில் ஜான்குமாரை நிற்க வைத்து எம்.எல்.ஏ ஆக்கினார் நாராயணசாமி. அதன் பிறகு அவர்களுக்குள் அடிக்கடி ஈகோ மோதல்கள் ஏற்பட்டு எதிரும்புதிருமாக நிற்கிறார்கள்.

நாராயணசாமி

இந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கைமீறி நெல்லித்தோப்பு மக்களுக்கு இலவசமாகக் காய்கறிகளை விநியோகம் செய்தார் ஜான்குமார். ஊரடங்கை மீறியதாக அவர்மீது வழக்கு பதிவானது. “கொரோனா நிவாரணத் தொகையாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்’’ என அறிவித்திருந்தார் நாராயணசாமி. தன்மீது வழக்கு பாய்ந்த கடுப்பில் ஜான்குமார், “மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் எப்படி போதும்? யார் தடுத்தாலும் மக்களுக்குப் பொருள்களைக் கொடுப்பேன்” என அதிரடி கிளப்பினார். “நம்ம கட்சி எம்.எல்.ஏ-வே நம்ம ஆட்சியை விமர்சிக்கிறாரே…’’ என நாராயணசாமியிடம் கட்சிக்காரர்கள் சொல்ல… “அவரோட தொகுதியை வாங்கிட்டோம். சகிச்சிக்கிட்டுத்தான் போகணும். ஆட்சி முடியும் வரை அமைதியாக இருங்க’’ என முகம் சிவக்கக் கூறியிருக்கிறார் நாராயணசாமி.

உற்சாகமூட்டிய கனிமொழி!

கனிமொழி

மார்ச் 31-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலிருந்து காரில் தூத்துக்குடிக்குப் புறப்பட்ட தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி இரவு 9 மணிக்குத் தூத்துக்குடி வந்தார். காரில் N-95 மாஸ்க்குகள், சானிடைசர் ஆகியவற்றை எடுத்து வந்திருக்கிறார். சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான அத்தனை சுங்கச்சாவடிகளிலும் அவரது கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுத்ததிலும் பொறுமையாக பதில் சொல்லிவிட்டே கிளம்பினாராம். பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் திருவாகசமணியிடம் அந்தப் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்திருக்கிறார் கனிமொழி. அப்போது, “மேடம், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி தேவைப்படுகிறது” என டீன் கூறியுள்ளார். ஏற்கெனவே தொகுதி நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான அனுமதி கடிதத்தையும் தயார் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்தார் கனிமொழி. இது மட்டுமல்லாமல் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 லிட்டர் பாமாயில் அடங்கிய பையுடன் பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுத்து தொகுதி முழுவதும் மூன்று நாள்களாகச் சுற்றி வந்திருக்கிறார் கனிமொழி. இதனால், உற்சாகத்தில் இருக்கிறார்கள் தூத்துக்குடி உடன்பிறப்புகள்!

“அமைச்சர், கலெக்டர்னா கொரோனா வராதா?’’

“சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கொரோனா தொடர்பான கூட்டங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முக கவசம் அணியவில்லை’’ எனச் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதில் கலெக்டருக்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை அமைச்சர் ஜி.பாஸ்கரன். இருவருமே அச்சமின்றி கூட்டங்களில் பங்கேற்று, சர்வசாதாரணமாக பலருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதைப் பார்க்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள், “அமைச்சர், கலெக்டர்னா கொரோனா பக்கத்துலயே வராதுன்னு நினைக்கிறாங்களோ?’’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.

ஊரடங்கிலும் விளம்பரம் தேடும் மா.செ.!

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமே மூன்று தொகுதிகள்தான். அதிலும் இரண்டு பேர் எதிர்க்கட்சிக்காரர்கள். அதனால் மாவட்டத்துக்கென்று அமைச்சரும் இல்லாததால், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான புத்திச்சந்திரனின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாயை இவரே ரேஷன் கடைகளுக்கு வாலன்டியராகச் சென்று வாங்கிக்கொடுத்து வருகிறார். நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

போன் அடித்து விளையாடிய வட மாநில இளைஞர்கள்!

“பெருந்துறை சிப்காட்டில் ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவுங்கள்’’ என ஒடிசா தலைமைச் செயலகத்திலிருந்து ஈரோடு கலெக்டருக்கு தகவல் வந்திருக்கிறது. உடனே கலெக்டர் கதிரவன் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதிகாரிகள் பதறியடித்து அங்கே சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கே கம்பெனி சார்பாக எல்லோருக்கும் உணவு, இருப்பிட வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது. 15 வட மாநில இளைஞர்கள் எந்த கவலையுமின்றி அங்கே ஜாலியாக இருந்திருக்கின்றனர். இதையடுத்து, ஒடிசாவுக்குப் புகார் கொடுத்த திரிநாத் ரூட், சுனில் ஜெனா ஆகிய இருவரையும் போலீஸார் விசாரித்தனர். “சாப்பாடு, அறை என எந்தக் குறையும் இல்லை. 21 நாள் லீவுக்கு ஊருக்குப் போகணும்னு ஆசைப்பட்டோம். எங்க ஊர் கவர்மென்ட்டுக்கு தகவல் கொடுத்தா ஊருக்கு அனுப்பி வெச்சிடுவாங்கன்னு நினைச்சு விளையாட்டா போன் போட்டோம்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த போலீஸார் பின்பு அவர்களை எச்சரித்து ஜாமீனில் விட்டிருக்கின்றனர்.

“கொரோனோ தயவால் நீ கதாநாயகனாக முடியாது!’’

பொள்ளாச்சி ஜெயராமன்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாஸ்க், சானிட்டைஸர் கொடுப்பது, வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது எனத் தீவிரமாக களப்பணி செய்துவருகிறார். இவற்றை எல்லாம் சமூக ஊடகங்களில் வீடியோ, போட்டோக்களாக அனுப்பிவருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இத்துடன் நிற்காத பொள்ளாச்சி ஜெயராமன் “கொரோனாவால் தி.மு.க-வினர் வீதிக்கு வரத் தயாராக இல்லை. உயிர் ஆசையால் வீட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்’’ என்று கருத்து தெரிவித்து தி.மு.க-வினரைச் சீண்டியிருக்கிறார். இதற்கு `தம்பி ஜெயராமா எங்களுக்கு மக்கள் பிரச்னை இருக்கு. கொரோனோ தயவுல நீ கதாநாயகனாக முடியாது’ என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ்.

ஜக்கையனை ஓரம் கட்டுகிறாரா ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ்

கம்பம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி. ஜக்கையனின் மகன் தேனி மாவட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதில் கடுப்பாகிவிட்டது ஓ.பி.எஸ் தரப்பு. தனது சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடிக்கு ஆதரவுக் குரல் எழுவதை விரும்பாத ஓ.பி.எஸ் தரப்பு, ஜக்கையன் கைவசம் இருந்த மாநில அளவிலான தொழிற்சங்கப் பதவியைப் பறித்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ரவீந்திரநாத் குமாரும் அரசு அதிகாரிகளுடன் இருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகிய இருவரும் ஆஜராகியிருந்தனர். ஆனால், ஜக்கையனுக்கு அழைப்பு இல்லை!

காலாவதியான பரிசோதனை கிட்!

திருச்சி அரசு பொது மருத்துவமனை

டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்க எச்சில் மற்றும் சளி ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டதாம். தற்போது, எச்சில் மற்றும் சளி எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அந்தக் கருவிகள் 2012-ம் ஆண்டே காலாவதியானதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.