கொரோனா வைரஸ் தாக்கத்தில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
முக்கியமாக, கோவை மாநகராட்சி முழுவதும் கொரோனா அறிகுறி குறித்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அங்கன்வாடி மைய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் சளி, இருமல் உள்ளதா என்ற கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று கோவை கரும்புக்கடை அருகே சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்புக்குச் சென்றனர்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர், “காய்ச்சல், சளி இருக்கானு மட்டும் கேளுங்க. பெயர், முகவரி எல்லாம் நீங்க கேட்கக் கூடாது. முதல்ல இத எல்லாம் கேக்க உங்களுக்கு உரிமை இல்ல.
நீங்க பேசவே கூடாது. உங்களோட உயர் அதிகாரிங்க நம்பர் கொடுங்க. டாக்டர் இல்லாம நீங்க எல்லாம் வரவே கூடாது. இங்க இருந்து கிளம்புங்க” என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கன்வாடி ஊழியர் போத்தனூர் போலீஸில் அளித்த புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், நோயைப் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இஸ்மாயில் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.