கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பல நகரங்கள் முடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் ஒரு சமூகப் பரவலாக மாறிவிடக் கூடாது என்ற காரணத்தால் ஊரடங்கு உத்தரவை அரசு கையிலெடுத்துள்ளது. அத்தியாவசியத் தேவைகள் இன்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் சிலர் முதியவர் ஒருவருக்கு உணவளிக்கும் வீடியோவை முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Also Read: `மனதும் உடலும் திடமாக இருக்க வேண்டும்!” – பிரதமருடனான உரையாடல் குறித்து சச்சின்
சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், “கொளுத்தும் வெயிலில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர் ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிலர் அவரை வழிமறித்து விசாரிக்கின்றனர். அப்போது அந்த முதியவரோ தனக்கு உணவு கிடைக்கவில்லை. நான் இன்னும் சாப்பிடவில்லை என போலீஸாரிடம் கூறுகிறார். இதையடுத்து, தாங்கள் சாப்பிட வைத்திருந்த உணவுகளை டிபன் பாக்ஸ்களைத் திறந்து அவரிடம் அளிக்கின்றனர். அந்த முதியவரும் போலீஸார் கொடுத்த உணவை வாங்கி உட்கொள்கிறார்”
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள யுவராஜ், ‘ கடினமான காலங்களில் போலீஸாரின் மனிதாபிமானமிக்க செயல் இதயத்தைக் கனியச் செய்கிறது. இந்தக் கடினமாக காலத்தில் தங்களுக்காக வைத்திருந்த உணவை மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றனர்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர். மேலும், போலீஸாரின் இந்தச் செயலுக்குப் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.