இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 485 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் 306 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 50 பேர் கொரோனா தொற்று குணமாகி வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இரண்டுபேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் தமிழக எல்லையில் கேரளா மண்ணைக் கொட்டி மூடுவதாகத் தகவல் பரவியது. ஏற்கெனவே கர்நாடக மாநிலம் கேரள எல்லையில் மண்ணைக் கொட்டி மூடிய சம்பவம் கோர்ட் வரைக்கும் சென்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக எல்லையை கேரள அரசு மூடப்போவதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் கேரள மாநிலம் தனது எல்லைகளில் உள்ள சாலைகளை மண் போட்டு அடைத்துள்ளது என பொய்யான செய்தி வந்தவண்ணம் உள்ளது. நமக்கு அப்படி ஓர் எண்ணமே இல்லை. நம் மாநிலத்தைத் தொட்டு அடுத்துள்ள சகோதரர்கள், அவர்களைச் சகோதரர்களாகத்தான் நாம் பார்க்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
கேரள முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், பினராயி விஜயன் பேசுவதன் தமிழாக்கமும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள மாநிலம் தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாசாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள்தான் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம்” என தமிழில் ட்விட்டியுள்ளார்.