கொரோனா, கோவிட் 19 என்ற வார்த்தையை உச்சரிக்காத நாடுகளே இல்லை. அந்தளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளை வாங்க வரும் மக்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Cobuddy

Also Read: `கபசுர குடிநீர் #Corona-வைக் கட்டுப்படுத்துமா?!’ -தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பதில்

இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்துதான் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்ததால் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை அடையாளம் கண்ட அரசு, அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீடுகளை விட்டு வெளியில் வர அனுமதியில்லை. அதனால் அவர்களை அடையாளப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுதந்திரமாக வெளியில் சுற்றுபவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ, தமிழகத்திலேயே முதல்முறையாக திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி.அரவிந்தன், Cobuddy என்ற செயலியை வடிவமைத்தார். இந்தச் செயலி, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அவசர தேவைகளுக்கு உதவும் நண்பனாக இருக்கும் என கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்தனும் இந்தச் செயலியை வடிவமைக்க உறுதுணையாக இருந்த இன்ஜினீயர் விஜய் ஞானதேசிகனும் தெரிவித்தனர்.

அரவிந்தன் ஐ.பி.எஸ்

Also Read: “தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி தப்பமுடியாது” – திருவள்ளூர் எஸ்.பி வடிவமைத்த செயலி #Corona

அவர்கள் கூறியது இன்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட முகவரியில் பாஸ்போர்ட் எடுத்த 25 வயது இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவர், கடந்த 11.3.2020ல் ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்தார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது சென்னை வேளச்சேரி 100 அடிசாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருகிறார். திருவள்ளூர் மாவட்ட முகவரியில் பாஸ்போர்ட் இருந்ததால் எஸ்.பி.அரவிந்தனின் வழிகாட்டுதலின்படி அந்த இளைஞரும் Cobuddy என்ற செயலியை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் செல்போனிலிருந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தன்னால் மூச்சுவிட முடியவில்லை. தொண்டை வலிக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அரவிந்தன் ஐ.பி.எஸ் இந்தத் தகவலை வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தெரிவித்தார். தகவல் கிடைத்த 5 நிமிடத்துக்குள் போலீஸார் அங்கு சென்றனர். அதே சமயத்தில் சுகாதாரத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் அந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த இளைஞருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துவருகிறது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Cobuddy செயலி

இதுகுறித்து அரவிந்தனிடம் பேசினோம். “இந்தச் செயலி மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தட்டவர்களைக் கண்காணித்துவருகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்துவருகிறோம். மேலும், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமலிருக்கிறார்களா என்பதையும் தினமும் ரேண்டமாக செக் செய்துவருகிறோம். இந்தச் சமயத்தில்தான் வேளச்சேரியில் குடியிருக்கும் அந்த இளைஞர், தனக்குத் தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி எங்களின் உதவியை நாடினார். உடனே அந்த இளைஞர் குறித்த தகவல் காவல்துறை, சுகாதாரத்துறையினருக்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் 5 நிமிடத்துக்குள் உதவி கிடைத்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக இருக்கிறார். எனவே, இந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் எந்த நேரத்திலும் காவல்துறையினரின் உதவியைப் பெறலாம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.