பிரேஸில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ, கொரோனா தொடர்பாகப் பதிவிட்ட சர்ச்சையான பதிவை, ட்விட்டர் கடந்த வாரம் நீக்கியது. பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து அவரது வீடியோக்கள் மற்றும் சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் கொள்கைக்கு எதிராகவும் மக்களிடம் தவறான தகவலைக் கொண்டு சேர்ப்பதால் அவரது பதிவு நீக்கப்பட்டதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டு உலக நாடுகளே அஞ்சி வருகின்றன. இதில் விதிவிலக்காக இருந்துவருகிறார் ஜெய்ர் பொக்சொனாரோ.

WHO | கொரோனா

`உலக சுகாதார நிறுவனம் கூறுவதைக் கேட்பதில்லை. பிரேஸில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுவதையும் கேட்பதில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தேர்தலை மனத்தில் வைத்து வேலை செய்கிறார்’ என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், `நாட்டுக்கு தீவிரமான, பொறுப்பான தலைமை தேவை. உலக சுகாதார நிறுவனம் கூறுவதை மற்ற நாடுகள் பின்பற்றுகின்றன. அதற்கு நேர்மாறாக இங்கு நடக்கிறது. மக்களை ஆபத்தில் தள்ளுகிறார்’ என எதிர்க்கட்சிகள் ஆதங்கப்படுகின்றன.

Also Read: `வயிற்றில் 6 மாத கரு; மூச்சுவிடுவதே போராட்டம்தான்!’– கர்ப்பிணியின் கொரோனா நாள்கள்

அதிபர் ஜெய்ர் பொல்சொனாராவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா எனக் கடந்த மாதம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்தது. `கொரோனாவைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். அது சாதாரண காய்ச்சல்தான். லாக்-டவுண் கொண்டுவந்தால், நாட்டின் பொருளாதாரம் என்னவாவது. நாட்டில் வேலையின்மை ஏற்பட்டு பெரிய பிரச்னையாகிவிடும். அதெல்லாம் பெரிய பிரச்னையில் முடிந்துவிடும்’ என்றே பேசி வருகிறார் அதிபர். சீனா, இத்தாலி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாக்-டவுணை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ்

பிரேஸிலில் மார்ச் மாதமே கொரோனா அறிகுறியுடன் ஏராளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வேளையிலும் லாக்-டவுண் குறித்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளைக் கூறிவந்தார், ஜெய்ர் பொல்சொனாரா. இது, சாதாரண காய்ச்சல், மக்கள் தங்களது பணிகளைத் தொடங்கலாம் என்கிறார். கொரோனா சமூகப் பரவலாக மாறாமல் இருக்கவே பல்வேறு நாடுகள் லாக்-டவுணைக் கொண்டுவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இதைத்தான் கூறுகிறது. ஆனால் பிரேஸில் அதிபரோ, கொரோனாவுக்காக மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் உங்களின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என ட்விட்டரில் பதிவிட்டார். இந்த பதிவைதான் ட்விட்டர் கடந்த வாரம் நீக்கியது.

Also Read: `மனதும் உடலும் திடமாக இருக்க வேண்டும்!” – பிரதமருடனான உரையாடல் குறித்து சச்சின்

பிரேஸ்லைப் பொறுத்தவரையில் இதுவரை 9,216 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 365 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிபரின் உத்தரவை மீறியும் பல மாநிலங்களில் லாக்-டவுண் அமல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாநில ஆளுநர்களின் உத்தரவின் பேரில் இந்த லாக்-டவுண் அமல்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்ட பின்னர், `இந்த நோய்த் தொற்று நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது’ என ஏப்ரல் 2-ம் தேதி கூறினார்.

பிரேஸில்

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆங்கில ஊடகங்களில் பிரேஸிலின் சாவோ பாலோ நகரத்தில் உள்ள மிகப்பெரிய கல்லறைத் தோட்டம் ஒன்றில் நூற்றுக்கணக்கில் வெட்டிவைக்கப்பட்டுள்ள சவக்குழிகள் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புக் கவசங்களை அணிந்த கல்லறைத் தோட்ட தொழிலாளர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக ஏராளமான சவக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இறுதிச்சடங்குகள் 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே முடிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா எச்சரிக்கையாக புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள், `கடந்த சில நாள்களாக இங்கு ஏராளமான சடலங்களைப் புதைத்துள்ளோம். இந்த அரசு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறதா?’ என்று சந்தேகிக்கின்றனர்.

பிரேஸிலில் கொரோனா ஆய்வு மேற்கொண்டு, அதை உறுதிப்படுத்த இரண்டு வார காலம் ஆகிறது. இந்த இடைவெளியில், உயிரிழப்பவர்களை கொரோனாவினால் இறந்தவர்கள் என அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.