டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா நடவடிக்கை தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

“இந்தியாவைப் பொறுத்தவரையில், தற்போதைய நிலவரத்தின்படி 2,902 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 601 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 12 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 68 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 183 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 0- 20 வயதுக்குட்பட்டவர்கள் 9 சதவிகிதம், 21- 40 வயதுக்குட்டபட்டவர்கள் 42 சதவிகிதம். 41-60 வயதுக்குட்டபட்டவர்கள் 33 சதவிகிதம். 61 வயதுக்கு மேல் 17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 17 மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் 1,023 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்று இருப்பது தெரியவந்துள்ளது” என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.
`தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்’ என உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் புனியா சலிலா கூறினார்.