திருவையாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் ரேஷன் கடைக்கு வரும்போது மஞ்சள் பை ஒன்றை முகக்கவசமாக மாட்டிக்கொண்டு வந்திருந்தார். `கிராமப்புறங்களில் முகக்கவசம் கிடைக்கவில்லை, அதன் விலையும் வாங்குகிற நிலையில் இல்லை’ என்கிறார் இந்தப் பெரியவர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு வயது 78. இவருடைய மகன்கள் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில், விவசாய வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா பரவாமல் இருப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் வருமானத்தை இழந்துள்ள மக்களுக்காக ரூ.1,000 மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை அரசு வழங்கி வருகிறது. தன்னுடைய கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இதை வாங்கவந்த சிவராமனை ரேஷன் கடை ஊழியர் தொடங்கி அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்த்துள்ளனர்.
நீளமான மஞ்சள் பை ஒன்றை முகக்கவசமாக அவர் அணிந்து வந்ததே அதற்குக் காரணம். ரேஷன் கடை ஊழியர், `என்ன பெரியவரே பையை மாஸ்க்காக மாட்டிக்கிட்டு வந்திருக்கீங்க?’ என கேட்க, ` அரசு 1,000 ரூபாய் தருவதோடு நிற்காமல் முகக்கவசத்தையும் தந்தால் கிராம மக்களுக்கு வசதியாக இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

முதியவர் சிவராமனிடம் பேசினோம், “ கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்றால் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என அரசும் மற்றவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்றைக்கும் கிராமங்களுக்கு முகக்கவசம் ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. விவசாய வேலை செய்பவர்கள் முகத்தில் துண்டை சுத்திக்கொண்டு வேலை பார்ப்பதைக் கிராமங்களில் பார்க்க முடியும்.
Also Read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா – 411 ஆக உயர்ந்த பாதிப்பு! #NowAtVikatan
முகக்கவசம் தட்டுப்பாட்டால் அதன் விலையும் எகிறிவிட்டது. நான் முகக்கவசம் வாங்கச் சென்றேன். 50 ரூபாய் தொடங்கி 300 வரையில் விலை போகுது என மருந்துக் கடைகளில் கூறினர். நான் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அரசு அறிவித்திருக்கிற ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து வருகிறேன். இன்றைக்குப் பணம் வாங்க வெளியே வர வேண்டியிருந்தது. நம்மால் யாரும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பையை முகத்தில் மாட்டிக்கொண்டு வந்தேன். இதைப் பார்த்த எல்லோரும் செல்போனில் போட்டோ எடுத்தனர்.

அவங்ககிட்ட சொன்னேன், `கிராம மக்களின் நிலையை உணர்ந்து எங்களைப் போன்றவர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானடைஸர் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே பையை மாட்டிக்கொண்டு வந்தேன்’ எனக் கூறினேன். எனக்கு இப்போதைக்கு இதுதான் மாஸ்க்” என்றார் சிரிப்புடன்.