கடந்த 1920-ம் ஆண்டு இதே தினத்தில், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், கைரேகைச் (குற்றப் பரம்பரை) சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றாண்டைக் கடந்த அந்த வரலாறு குறித்த சிறு தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

அதென்ன குற்றப்பரம்பரைச் சட்டம்?

குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில் இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்றப்பட்ட நாளிலிருந்தே பல சட்டத் திருத்தங்களுக்கு உள்ளாகி, கடைசியாக குற்றப்பரம்பரைச் சட்டம் (1924-ம் ஆண்டின் VI-வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக அமல்படுத்தப்பட்டது.

குற்றப்பரம்பரைச் சட்டம்

இந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் எந்தவொரு சாதியையும் ‘குற்றப்பரம்பரை’ என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ‘குற்றவாளி – நிரபராதி’ என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்றது அந்தச் சட்டம். தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் இருந்தனர். சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். பட்டியலில் இருந்த சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும்கூட விதிவிலக்கு கிடையாது.

பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், ஊர்த் தலையாரிகூட அவரைக் கைதுசெய்யலாம். அதேபோல, சந்தேகப்படும்படி ஒருவர் நடந்து கொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு. காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும்வரை அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறு எங்காவது போகவேண்டுமானால், கிராமத் தலைவரால் வழங்கப்படும் ராதாரி சீட்டு எனும் அனுமதிச் சீட்டைப் பெறவேண்டும்.

துப்பாக்கிச்சூடு

1920-ம் ஆண்டு, உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், இச்சட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ‘மாயாக்காள்’ என்ற பெண் உட்பட 16 பேர் மரணம் அடைந்தனர். இது, குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய போராட்டம்.

அந்தப் போராட்டம் மற்றும் அப்போது நடந்த துப்பாகிச்சூடு குறித்து தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவிடம் பேசினோம்.

”பெருங்காமநல்லூர் விபத்து நடந்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.1920-ம் ஆண்டில், பெருங்காமநல்லூரில் இதே நாளில் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிறமலைக்கள்ளர் என்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது சாதிய போராட்டமல்ல,வெள்ளையனின் காலனியாதிக்கத்தின் ரேகைச் சட்டத்தை எதிர்த்த போராட்டம். குறிப்பிட்ட சமூகத்தினரை பிறப்பின் அடிப்படை கொண்டு குற்றப்பரம்பரையினர் என கருதக்கூடிய அந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்தான் அது.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை அடுத்து, அதேபோன்று நிகழ்ந்த கசப்பான நிகழ்ச்சிதான் பெருங்காமநல்லூரில் நடந்ததும். ஜாலியன் வாலாபாக் படுகொலை தெரிந்த அளவுக்கு பெருங்காமநல்லூர் தெரியாமல் இருப்பது மற்றொரு கொடுமையாகும். இதேபோன்ற ரேகைச் சட்டத்துக்கு எதிராகத்தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியும் போராடினார். எனவே, இதுவும் சர்வதேச நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய ஒன்று.

கைரேகை

Also Read: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70,000 குற்ற வழக்குகள் அதிகம்.. எங்கே செல்கிறது நாடு? #VikatanInfographics

குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே இந்தச் சட்டத்தின்கீழ் சேர்த்திருந்தார்கள். ஆனால், அதை எதிர்த்து அனைத்து சமூகத்தினரும் குரல்கொடுத்துவந்தனர். இந்நிகழ்வே, இது சாதியம் சார்ந்த போராட்டம் இல்லை என எடுத்துரைக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 16 பேரில், மோசமாகக் கொல்லப்பட்டவர், மாயாக்காள் என்ற பெண். அவர் பெருங்காமநல்லூரை சொந்த ஊராகக் கொள்ளாதவர். பெருங்காமநல்லூருக்கு வாக்கப்பட்டு வந்தவர்தான் மாயாக்காள். கைரேகை சட்டத்தை எதிர்த்து, ஆண்களுக்கு மத்தியிலும் தைரியமாகக் குரல்கொடுத்துவந்தார்.

எப்படி கீழவெண்மணி போராட்டம் இனத்தின் சமத்துவத்திற்கான போராட்டமாக அமைந்ததோ, பெருங்காமநல்லூரும் சமத்துவம் சார்ந்த போராட்டமாகும். ஆட்சியாளர்களை எதிர்த்து, துணிந்து குரல்கொடுக்க நமக்குக் கற்றுத்தருகிறது, இந்த பெருங்காமநல்லூர் நிகழ்வு. நான் இது தொடர்பாக பாடல் வரிகளையும் எழுதியுள்ளேன். ‘கொடுங்கோலுக்கு அடங்காத பெருங்காமநல்லூர்…’ என்ற வார்த்தைகளோடு தொடங்கும் அந்தப் பாடல். கைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஜோசப் குரல் கொடுத்துவந்தார். ஜோசப்பின் பெயர் மக்களின் வாயில் நுழையாததால், மக்கள் அனைவரும் இவரை ரோஜாப்பூ என்று அழைத்துவந்தனர். இன்றும் அவ்வூர் மக்களிடையே அவர் ஹீரோவாகத்தான் திகழ்கிறார்.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு

பின்னாட்களில் ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர், ராமமூர்த்தி ஆகியோர் மக்களைத் திரட்டி குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். தேர்தல் நேரம் அது. ராஜகோபாலச்சாரியார் வாக்குறுதி கொடுத்தார். ”நான் தேர்தலில் வெற்றியடைந்தால், குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குகிறேன்” என்று. அவரின் வாக்குறுதியை ஏற்று முத்துராமலிங்கத் தேவரும் காங்கிரஸுக்கு ஆதரவளித்தார். ராஜகோபாலச்சாரி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தவில்லை.

பின்னாளில் பல போராட்டங்களுக்குப் பின் தங்களின் மீது எறியப்பட்ட அச்சட்டத்தை தகர்த்தெரிந்தார்கள் மக்கள். பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை அப்பாவி விவசாயிகளின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி, நலத் திட்டங்களைத் தொடங்க ஆங்கில அரசு வழிசெய்தது. அதிகாரம் செய்த தவற்றுக்கு பிரிட்டிஷ் அரசும், பிரிட்டிஷ் பாராளுமன்றமும் தேடிய பிராயச்சித்தம்தான் இது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.