டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திரும்பி வந்த 50 பேரை அதிகாரிகள் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் 16 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த 16 பேரில் ஒருவருக்கு கொரானோ தொற்று இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், தீவிர கண்காணிப்பிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸார், ரயில்களில் பயணம் செய்தவர்களின் பட்டியலை வைத்து இவர்களை அசுர வேகத்தில் பிடித்திருக்கிறார்கள்.

டெல்லியில், கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லீக் மாநாட்டில் காஞ்சிபுரத்தை அடுத்த மொலச்சூரில் ஒருவர், சாலவாக்கில் ஒருவர், ஒலிமுகமது பேட்டையில் இரண்டு பேர், பெரியகாஞ்சிபுரத்தில் 3 பேர், குன்றத்தூரில் 6 பேர் உள்ளிட்ட 13 பேர் கலந்துகொண்டது தெரியவந்தது.
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 886 பேர் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

அதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேரில் 9 பேருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரானோ பரிசோதனைக்காக 45 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை 2 பேர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மொத்தம் 47 ஆக உயர்ந்துள்ளது.
Also Read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா – 411 ஆக உயர்ந்த பாதிப்பு! #NowAtVikatan
இதேபோல், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய மதுராந்தகம், மாமண்டூர், கருங்குழி, மேலவலம்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரில் 6 பேருக்கு கொரானோ அறிகுறி இருந்ததால் அவர்கள் வியாழக்கிழமை இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களோடு ஐந்து ரயில்களில் பயணம் செய்தவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அதிகாரிகள் மற்றும் போலீஸார் தேடியிருக்கிறார்கள்.

ரயில்களில் பயணித்தவர்களின் விவரங்களை ரயில்வே நிர்வாகம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் அளித்துள்ளது. அவர்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் யார் யார் என்பதை அதிகாரிகள் தங்களிடம் உள்ள பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.