கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் வேலு (41). இவருக்கு செல்வி என்ற மனைவி மற்றும் 12- ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் உள்ளனர். வேலு -க்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்துள்ளார். வேலுவின் மனைவி செல்வி, செங்கல்சூளைக்கு வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.

இப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21- நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செங்கல்சூளை வேலைக்கும் செல்வி செல்ல முடியவில்லை. அன்றாடம் உணவுக்கே கஷ்டப்பட்டுவந்தார். இந்த நிலையில், வேலு தினமும் வீட்டில் பிரச்னை செய்துவந்துள்ளார். இன்று அதிகாலை, வீட்டில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட வேலு

இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி சப்-,இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த குடும்பத்தினர் வேலுவின் இறுதிச் சடங்கு செய்யக்கூட பணம் இல்லாத நிலையில் இருந்ததை சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் புரிந்துகொண்டார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராபர்ட் சிங், பக்கத்தில் இருந்த ஏ.டி.எம்மில் தன் சொந்தப் பணத்தில் 5000 ரூபாயை எடுத்து, இறுதிச்சடங்குக்கு வைத்துக்கொள்ளுங்கள் என வேலுவின் குடும்பத்தினரிடம் கொடுத்தார்.

மேலும், அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். உதவி ஆய்வாளரின் மனிதாபிமான செயல், அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இதை குமரி மாவட்ட காவல்துறை பாராட்டி, முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் ராபர்ட் செல்வசிங்கிடம் பேசினோம், “வேலு மனநலம் பாதித்தது போன்று ஊர் சுற்றி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று இரவு மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரைத் தடுத்துநிறுத்த, இரவு தூங்காமல் இருந்துள்ளனர்.

சப் இன்ஸ்பெக்டரை பாராட்டிய குமரி காவல்துறை

அதிகாலை மூன்று மணியளவில் இவர்கள் கண் அசந்த சமயத்தில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் செங்கல்சூளை இயங்காத நிலையில், செல்வி வேலை இல்லாமல் இருக்கிறார். இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்ததை என்னால் உணர முடிந்தது. அந்தக் குடும்பத்தின் நிலையைப் புரிந்துகொண்டு நான் இந்த உதவியைச் செய்தேன். வெளியே யாருக்கும் தெரியாமல்தான் இதைச் செய்தேன். ஆனால் இதை அறிந்துகொண்டு பலர், என்னை போனில் அழைத்து பாராட்டுவதுதான் சங்கடமாக இருக்கிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.