கடந்த ஏப்ரல் 1-ம் தேதியன்று, பிரேஸில் சுகாதாரத் துறை அமேசான் காட்டிற்குள் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை உறுதிசெய்துள்ளது. வடக்கு அமேசானிலுள்ள கொகாமா என்ற பூர்வகுடியைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதை பிரேஸில் நாட்டின் பூர்வகுடி மக்களுக்கான மருத்துவ சேவைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
சாவோ ஜோஸ் என்ற கிராமத்தில், சுகாதாரத் துறையின் ஏஜென்ட்டாகப் பணிபுரிகிறார் அந்தப் பெண். சோலிமோயெஸ் நதியின் மேல்நிலைப் பகுதி வரையிலான அவருடைய வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகே, அவருக்கு அதற்குரிய அறிகுறிகள் தெரிந்துள்ளன. தலை, தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் கடுமையான வலியோடு கூடிய காய்ச்சல் அவருக்கு இருக்கவே, பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா இருப்பதை உறுதிசெய்தனர். அவருடைய பதிவுகளின்படி, “மார்ச் 18-ம் தேதி, உடன் பணிபுரிபவர் ஒருவரோடு நான் இருந்தேன். அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்து தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த மூன்று நாள்களில், எனக்கு நுகர்தல் குறைபாடும் இருமலும் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

மேத்யூஸ் ஃபெயிடோஸா என்ற மருத்துவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த பிறகு, அவரோடு தொடர்பிலிருந்த 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அந்த 27 பேரில் கொகாமா இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபெயிடோஸா டிகுனா என்ற கிராமத்திலிருந்த 10 பூர்வகுடி மக்களுக்கு சிகிச்சையளித்துள்ளார் என்று பழங்குடிகளுக்கான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
ஃபெயிடோஸா, தெற்கேயுள்ள சான்டா காடரினா மற்றும் பரானா என்ற மாகாணங்களுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வந்தவுடனேயே தன் பணியைத் தொடங்கியிருந்தார். அவரிடம் கொரோனாவுக்கான எந்தவித அறிகுறியுமே தொடக்கத்தில் தெரியவில்லை. அவர் வந்து 7 நாள்கள் கழித்து அறிகுறிகள் தெரிய வரவே, பரிசோதித்துப் பார்க்கையில் கொரோனா இருப்பது உறுதியானது. விடுமுறையின்போதோ, திரும்பி வரும்போதோ செய்த படகுப் பயணத்தின் போதோதான் இந்தத் தொற்று தனக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஃபெயிடோஸா தெரிவித்துள்ளார்.
ஃபெயிடோஸா மூலம், இந்தச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கலாம் என்று அஞ்சுகிறார், ஆஸ்வால்டஓ க்ரூஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான ஆன்ட்ரே மொரெய்ரா கார்டோசா. பொதுவாக, வெளியுலகோடு அதிகத் தொடர்பின்றி குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே வாழும் பூர்வகுடி மக்களுக்கு அந்தப் பகுதியைத் தாண்டிய நோய்களுக்கு, தேவைப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது. அவர்களுடைய எதிர்ப்புத் திறன் குறைபாடு காரணமாக, இதுபோன்ற தொற்று நோய்களுக்கு எளிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய உடல்நலம் மற்றும் பொருளாதார நிலை, இந்தப் பிரச்னையை மேலும் பெரிதாக்கிவிடும்.

பூர்வகுடியின மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, உடனடி நடவடிக்கைகளை பிரேஸில் அரசு எடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் குழு நேற்று கோரிக்கை வைத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதேநேரம், பூர்வகுடி மக்கள் வாழும் அனைத்துக் கிராமங்களுக்கும் தேவையான உணவு, சுத்தம் செய்வதற்கான பொருள்கள் ஆகியவற்றைக் கொடுக்கவும் பிரேஸில் அரசு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது.
அமேசான் காட்டின் உள்பகுதிக்குள், இன்னும் தனிமைப்பட்டு வாழ்கின்ற பூர்வகுடிகள் மத்தியில் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. பிரேஸில் எல்லைக்குள் வருகின்ற அமேசான் வனப்பகுதிக்குள் 107 பூர்வகுடியினக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெரும்பாலும், அருகருகே சின்னச்சின்ன குக்கிராமங்களில் பிரிந்தே வாழ்கிறார்கள். இது பரவினால், அவர்கள் அனைவரையும் எளிதில் பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதை அவசரகால நடவடிக்கையாக முன்னெடுக்க, பிரேஸில் அரசாங்கத்தின் பூர்வகுடிப் பாதுகாப்பு அமைப்பு முயல்கிறது.