தஞ்சாவூரில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக முகக்கவசம் அணிந்தபடி சைக்கிளில் வந்த 5 வயதுச் சிறுவனை பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன்

தஞ்சாவூர் மேற்குக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் செங்குட்டுவன். இவர் அய்யங்கடைத்தெருவில் கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பலரும் மாஸ்க் அணியாமல் வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த வழியாக சைக்கிளில் வந்த சிவகார்த்திகேயன் என்ற 5 வயதுச் சிறுவன் மாஸ்க் அணிந்தபடி வர, சிறுவனை நிறுத்திய இன்ஸ்பெக்டர், முகக்கவசத்தைக் காட்டி இது என்வென்று கேட்க, மாஸ்க் எனப் பதிலளித்ததுடன் கொரோனா வைரஸ் வராமல் இருப்பதற்காக இதைப் போட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு உற்சாகமடைந்த இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிவகார்த்திகேயனிடம், `பெரியவர்களே கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மாஸ்க் அணியாமல் வெளியே வருகின்றனர். அவர்களிடம் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியே வரச் சொல்கிறோம். இந்தச் சின்ன வயசுல அக்கறையோடு மாஸ்க் அணிந்து வந்த உன்னை வாழ்த்துகிறேன். இதேபோல் அவசியம் இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும்’ என அவன் கைகளைக் குலுக்கி `வெரிகுட்’ என வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, `நீ போய் எல்லோரிடத்திலும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் எனச் சொல்ல வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

இன்ஸ்பெக்டருக்கும் சிறுவனுக்கும் நடந்த உரையாடல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், “கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு பிறபிக்கப்பட்டு 9 நாள்கள் ஆகின்றன. கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றால் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. அப்படியே அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தாலும் மாஸ்க் அணிந்துகொண்டு பாதுகாப்பாகத்தான் வர வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இதை மக்களிடம் வலியுறுத்தவும், கூட்டம் கூடாமல் இருப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறோம். இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் உள்ளிட்ட எதையும் அணியாமல் அஜாக்கிரதையாக வருவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். இந்த வைரஸ் உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தாது. சுற்றியுள்ள அனைவரையும் பாதிப்படையச் செய்யும். எனவே, அரசு சொல்வதைத் தயவுசெய்து கடைப்பிடியுங்கள் என அவர்களிடம் எடுத்துக் கூறுவோம்.

முகக் கவசத்துடன் சிறுவன்

இதுபோன்ற மக்களுக்கு மத்தியில் இந்தச் சிறுவனைப் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது இரவுபகல் பாராமல் பணியிலிருக்கும் எங்களைப் போன்ற காவதுறையினருக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது” என்றார் உற்சாகத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.