கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதைத் தவிர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

கிருமிநாசினி பாதை அமைப்பு

இந்நிலையில், திருப்பூர் உழவர் சந்தையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் `கிருமி நாசினி பாதை’ ஒன்றை அமைத்து அசத்தியுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

கிருமி நாசினி பாதையை உருவாக்க, மெலிதான ஸ்டீல் ஃபிரேம் மூலம் 16 அடி நீளத்துக்கு சுரங்கம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, இருபுறமும் பேனர்களை வைத்து சுவர்போல கட்டமைத்துள்ளனர். ஸ்டீல் ஃபிரேமின் மேல்பகுதியில் நுண்துளைகள் கொண்ட குழாய் ஒன்று இருக்கிறது. அந்தக் குழாயின் வழியே அதிக அழுத்தத்தில் தண்ணீருடன் கிருமிநாசினியைச் சேர்த்து பனிப்புகை போல பொழிய வைக்கின்றனர்.

கிருமிநாசினி பாதையில் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன்

இந்தப் பாதையைக் கடந்து செல்பவர்கள் மீது, கிருமிநாசினி கலந்த இந்தப் பனிப்புகை படும்போது உடைகள் மற்றும் உடலிலுள்ள நுண்கிருமிகள் அழிந்துவிடுகின்றனவாம். இந்த சுரங்கப் பாதையை ஒருவர் 3 – 5 நொடிகளுக்குள் கடந்துவிட முடியும். இதனால், ஒரு மணிநேரத்துக்கு சுமார் 650 பேர் வரை இதனால் பயனடைய முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: `கிருமி நாசினி சுரங்கம்’ – திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

கிருமி நாசினி சுரங்கப் பாதையை உருவாக்கிய டபிள்யூடிடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.வெங்கடேஷிடம் பேசினோம். “கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்தும் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவில்லையே என்ற வருத்தத்துடன் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

15 ஆண்டுகளாகத் தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களைத் தயார் செய்து இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறேன். அப்படியிருக்க, இந்தக் கிருமிநாசினி பாதையை நம்மால் செய்ய முடியுமென நினைத்து, கலெக்டரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவரும் முயற்சி செய்யுங்கள் என உற்சாகம் கொடுத்தார். இரண்டே நாளில் இதைச் செய்து முடித்து கொடுத்துவிட்டோம்.

இதையடுத்து, நம்மால் முடிந்த உதவி ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தேன். அந்த நேரத்தில்தான் துருக்கியில் `கிருமிநாசினி பாதை’ போன்ற அமைப்பு இருப்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன்” என்றவர், தொடர்ந்து பேசுகையில்,

மோட்டார் மூலம் அழுத்தத்துடன் அனுப்பப்படும் கிருமிநாசினி

“16 அடி நீளம் 5 அடி அகலம் கொண்ட இந்த சுரங்கப் பாதையின் வழியே பொதுமக்கள் செல்லும்போது, தண்ணீருடன் கலக்கப்பட்ட கிருமிநாசினியானது மேலிருந்து பனிப்புகை போல பொழியும். இதனால் நோய்த்தொற்று பரவுவது வெகுவாகக் குறையும். காய்கறிச் சந்தை போன்று மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இது நல்ல பயனைக் கொடுக்கும்.

20 லிட்டர் கிருமிநாசினியை வைத்து இந்த மெஷினை 18 மணிநேரம் வரை இயக்க முடியும். ஆட்டோமேட்டிக் சென்சார் இருப்பதனால், மனிதர்கள் இந்த சுரங்கப் பாதையினுள் நுழையும்போது மட்டும்தான் இது இயங்கும். இதனால் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் உறுதிப்படுத்தப்படும். இந்த மெஷினை செய்ய சுமார் ஒரு லட்சம் வரை செலவானது. திருப்பூர் மக்களுக்காக என்னுடைய சார்பில் இதை மாவட்ட நிர்வாகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன்” என்றார் உற்சாகத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.