திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று 17 நபர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில், திண்டுக்கல் நகரில் பேகம்பூர் பகுதியில் நத்தர்சா தெரு, மக்கான் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி மற்றும் ரவுண்டோடு ராம்நகர், பிஸ்மி நகர், தோமையார்புரம், நிலக்கோட்டையில் கோடாங்கிநாயகன்பட்டி, ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி, மாணிக்கம்பிள்ளை பேட்டை ஆகிய 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகள் நேற்று இரவு முதல் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ராம்நகர்

இந்தப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களான மளிகைப்பொருள்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்துகள் ஆகியவை நடமாடும் வாகனங்கள்மூலம் மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது. மேற்கண்ட பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு தூய்மைப் படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள். இந்நிலையில் நேற்று (01.04.2020) மேலும் 31 நபர்களின் ரத்தமாதிரி ஆய்வுக்காக எடுத்து அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பூங்கோதை,“31 நபர்களில் 28 பேர் டெல்லிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். 3 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இது தவிர நிலக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் இன்று ஆய்வுக்காக எடுக்கப்படும். மொத்தம் 69 நபர்கள், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 17 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

நிலக்கோட்டை அருகே உள்ளது கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமம். இக்கிராமத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய இரண்டு பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 250 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், இக்கிராமத்திற்கு அருகே 100 பேர் வசிக்கும் புதூர் கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வேன் மற்றும் வண்டிகள் மூலம் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றுவர ஆர்வம் காட்டினர். அவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோடாங்கிநாயக்கன்பட்டி சுற்றுப்பகுதி முழுவதும் முழுக் கண்காணிப்பில் இருப்பதாக நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜின் தெரிவித்தார்.

நிலக்கோட்டை கோடாங்கி நாயக்கன்பட்டி

இந்நிலையில், திண்டுக்கல் அரசுத் தலைமை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக வார்டை விட்டு வெளியில் உலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. அங்குள்ள மருத்துவப் பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உடைகள் தரப்படவில்லையென்றும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “வெளியில் சுற்றுவது நோயாளிகள் இல்லை. அவர்களுக்கு உதவியாக வந்துள்ள அட்டெண்டர்கள். பாதுகாப்பு உடைகள் தரப்பட்டிருக்கின்றன. மேலும் தரப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.