கொரோனா பரவுவதை தடுப்பதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அரசு வழங்கும் ரூ.1,000 மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை கும்பகோணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகள், வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு ஏற்பாடு

மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் பணி செய்துவிட்டு இங்கு வந்த நபர்களின் எண்ணிக்கை மட்டும் 6,500 பேர். இவர்களும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் மேற்கிந்தியத் தீவிலிருந்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் வசித்த பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளோம். அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ரேஷன் கடைகளில் மக்கள்

இந்தநிலையில் அந்த நபர் வசித்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள மொத்தம் 6 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை ரூ.1,000 மற்றும் அரிசி உள்ளிட்ட இலவசப் பொருள்கள் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படுகின்றன. இதேபோல் வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களின் குடும்பத்திற்கும் டோர் டெலிவரி செய்கிறோம்.

இதற்காகக் கூட்டுறவு, வருவாய், உள்ளாட்சித்துறைகளைச் சேர்ந்தவர்களைக்கொண்டு குழு அமைக்கபட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலேயே இங்குதான் பொருள்கள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகின்றன.

Also Read: `ஆர்டர் செய்தால் மளிகைப் பொருள்கள் ரெடி!’ – திருப்பூர் கலெக்டரின் புது ஐடியா #SocialDistancing

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியே வந்தால் அவர்களுக்கும் ரிஸ்க், மற்றவர்களுக்கும் ரிஸ்க் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தோட்டக்கலைத்துறை மூலம் 100 ரூபாய்க்குக் காய்கறிகள் கொண்ட தொகுப்பு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் வெளியே வந்து செல்வதாகத் தகவல்கள் வருகின்றன. இதைத் தடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கையில் எச்சரிக்கைக்காக முத்திரை வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கையில் மஞ்சள் நிற டேக் ஒன்றையும் வாட்ச் போல் கட்டிவிடத் தொடங்கியுள்ளோம்.

கலெக்டர் கோவிந்தராவ்

மஞ்சள் நிற வளையம் கட்டியவர்கள் வெளியே திரிந்தால் பொதுமக்கள் தகவல் கொடுக்கவே இந்த ஏற்பாடு. அப்படியும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் செங்கிப்பட்டியில் உள்ள அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வார்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.

மக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக என்னென்ன சர்வீஸ் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறோம். ஆனால், மக்களுக்குக் கொரோனாவின் தாக்கம் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் எனப் புரியவில்லை. ரிஸ்க் ஜோன் வளையத்திற்குள் நாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தயவு செய்து மக்கள் நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்” என்றார் உறுதியாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.