நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகி வருவது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, இந்தியாவில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக அரசு மக்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்… `வீட்டிலே இருங்கள்’ என்பதுதான் அது.

கொரோனா

எனினும், அனைவராலும் வீட்டிலே இருக்க முடியாது. குறிப்பாக, மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளிலும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக டிராக்கிங் பணியிலும் செயல்பட்டு வருகிறர்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

டெல்லியில் மட்டும் இதுவரை கொரோனா காரணமாக 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில மருத்துவமனைகளை மூடும் சூழலும் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் பாதிக்கப்பட, அந்த மருத்துவமனை தூய்மைப்பணிக்காக மூடப்பட்டது.

Also Read: `மருத்துவருக்கு கொரோனா; மூடப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை!’ -டெல்லியில் தொடரும் சோகம்

கொரோனா

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறியப்படும் சில பகுதிகளில் மருத்துவப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் பணிகளும் நடக்கிறது. மத்திய பிரதேசத்திலும் கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்தூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 76% பேர் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களை டிரேஸ் செய்யும் பணியில் இரண்டு பெண் மருத்துவர்கள் ஈடுபட்டு இருந்தனர். தங்களை கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் உடைகளுடன் அவர்கள் குறிப்பிட்ட தெருவில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்தத் தெருவைச் சேர்ந்த மக்கள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா

தொடர்ந்து சிலர் மோசமாகத் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அந்தப் பெண் மருத்துவர்கள் மீது அந்தத் தெருவில் இருப்பவர்கள் கற்களைக் கொண்டும் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்தார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த தாசில்தாரின் வாகனத்தில் ஏறி தப்பி வந்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுக்க தற்போது பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற டாத்பட்டி பகால் பகுதி மக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தப்பித்து வந்த பெண் மருத்துவர்களில் ஒருவர், நாங்கள் காவலர்களின் உதவியுடன் தப்பித்து வந்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர், “குறிப்பிட்ட ஒரு நபரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்கையில்தான் எங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் கற்களைக்கொண்டு தாக்கினர். நல்ல வேலை போலீஸாரின் உதவி கிடைத்தது” என்றார்.

டாத்பட்டி பகால் பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஹைதராபாத் காந்தி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உறவினர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு திரும்பும்போது சொந்த பகுதியில் கடுமையான வசைகளுக்கு ஆளானார். அப்பெண் மருத்துவர் வீட்டுக்குச் செல்லும் வழியை மறித்த சிலர், `தொடர்ந்து இந்தப் பணியைச் செய்தால் அதற்கான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும்’ என எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மருத்துவர்கள்

ஏ.எஃப்.பி ஊடகத்திடம் பேசிய அப்பெண் மருத்துவர், “இந்த மக்கள் அனைவரும் என்னிடம் அன்பாகப் பேசியவர்கள். அவர்களுக்கு பிரச்னை என வந்தபோது, நான் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். அவர்களிடம் ஒருவித அச்ச உணர்வு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அது இப்போது தீண்டாமைபோல் ஆகிவிட்டது” என்றார் வருத்தத்துடன்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிலர், தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதால், தாங்கள் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்தனர். மேலும், அத்தனை நாள்கள் உடன் இருந்த சமூகம் திடீரென தங்களை ஒதுக்குவதாக வேதனை தெரிவித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவ பணியாளர்கள், ஒருவேளை பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அப்போது அவர், “மருத்துவப் பணியாளர்களின் சேவை நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்களின் சேவைக்கு ஒப்பானது” என்றார்.

Also Read: ‘வீட்டிலேயே இருங்கள்; வாடகையை நாங்கள் தருகிறோம்!’ – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

பிரதமர் மோடி வாரணாசி மக்களிடம் பேசுகையில், “வெள்ளை கோட் அணிந்த மக்கள் (மருத்துவர்கள்) கடவுளின் அவதாரம். இன்று அவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மக்களை காக்கின்றனர்” என்றார்.

மோடி

இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பால்கனி கைதட்டல்கள் மட்டும் போதாது. அவர்கள் மீது உண்மையான அக்கறையும் பெருமையும் கொள்ள வேண்டும். தன் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள் தாக்கப்படுவது கொரோனாவைவிடவும் கொடியது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.