ஏப்ரல் 2, 2011… ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கையில் டைம் மெஷின் கிடைத்தால் நொடிப்பொழுதும் தாமதமின்றி அந்த நாளுக்குத்தான் பயணப்பட விரும்புவான். உலகக்கோப்பை வின்னிங் ஷாட்டாக தோனி அடித்த சிக்சர், ரவிசாஸ்திரியின் `இந்தியா லிஃப்ட் தி வேர்ல்டு கப் ஆஃப்டர் 28 இயர்ஸ்’ கமென்ட்ரி என உணர்வுபூர்வமான தருணங்களை மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து வாழ்ந்துவிட்டு ரிட்டன் ஆவான்.

இந்தியாவில் கிரிக்கெட் இந்தளவுக்கு வெறித்தனமாக ஊறிப்போவதற்கு விதை போட்ட கபில்தேவே, `இந்தியாவுக்கு 1983 உலகக்கோப்பை வெற்றியை விட இந்த வெற்றிதான் மிகவும் சிறப்பானது’ எனக் கண்ணீர்விட்டு சிலாகித்துக் கூறும்வகையில் அமைந்த வெற்றி அது.

இந்த சரித்திர வெற்றி அவ்வளவு எளிதாக இந்தியாவுக்குக் கைகூடிவிடவில்லை. 1983 வெஸ்ட் இண்டீஸ் எனும் லெஜண்டுகள் சூழ் அணியை கபில்தேவ் தலைமையிலான கத்துக்குட்டி இந்தியா வென்று உலகக்கோப்பையுடன் க்ரூப் ஃபோட்டோ எடுத்த பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் வேரூன்ற ஆரம்பிக்கிறது. வேரூன்றியதுதான் தாமதம். ஆனால் அதன்பிறகு இந்திய மக்கள் மனங்களில் வேறெந்த ஸ்போர்ட்ஸை விடவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றது கிரிக்கெட். இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவை விஞ்சும் அளவுக்கு கிரிக்கெட்டின் மீதான ஈர்ப்பும், வியாபாரமும் இந்தியாவில் உண்டானது. எதிரி நாட்டு வீரருக்குக்கூட ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுக்கும் பக்குவப்பட்ட ஆஸ்தான இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாடுவதை மற்ற நாட்டு வீரர்கள் கொண்டாட்டமாகக் கருதினர். பிசிசிஐ-யும் விளம்பரதாரர்களுக்கும் வீரர்களுக்கும் பணமழை கொட்டினர். இருப்பினும் 83 போன்ற ஒரு சரித்திர வெற்றியை அதன்பிறகு இந்தியாவால் சாத்தியப்படுத்தவே முடியவில்லை.

உலகளவில் கிரிக்கெட்டுக்குப் பிறகு ஒரு ஸ்போர்ட்ஸில் இந்திய அணி முன்னணியில் இருக்கிறதென்றால் அது ஹாக்கிதான்.1975-க்குப் பிறகு அதிலும் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதில்லை. கிரிக்கெட்டில் ஆஸி அணியால் தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது. ஆனால், பேச்சு… மூச்சு… விளம்பரம்… வியாபாரம் என சகலமும் கிரிக்கெட் மயமாகிப் போன ரசிகர்களையும், வீரர்களையும்கொண்ட இந்தியாவால் 1983-க்குப் பிறகு ஒரு முறைகூட உலகக்கோப்பையை வெல்லவே முடியவில்லை. அதிலும் 6 முறை உலகக்கோப்பையில் ஆடியும் சச்சினால் அந்தக் கோப்பையைக் கையிலேந்த முடியவில்லையே என்பது இந்திய ரசிகர்கள் மனதிலிருந்த பெரும் சோகம். விளையாட்டு ரீதியில் உலக அரங்கில் இந்தியா தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா – வங்கதேசம் – இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து நடத்தின.

கிரிக்கெட் உலகக்கோப்பை 2011

தென்னாப்பிரிக்க ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கியது. சச்சின், ஷேவாக், யுவி, ஜாகிர் எனப் பல வீரர்கள் இருந்தாலும் லீக் சுற்று, நாக்-அவுட் என எல்லாவற்றிலும் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியே வெற்றி பெற்றிருந்தது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என மூன்று அணிகளுக்கு எதிராகவும் இந்தியா முழுமையாக 50 ஓவர்கூட பேட்டிங் செய்யமுடியவில்லை. இதில் ஒரு பாசிட்டிவ் விஷயமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அணி எந்த ஒரு தனிப்பட்ட வீரரை மட்டும் நம்பும்படி இல்லாமல் எல்லா வீரர்களும் ஏதோ ஒரு வகையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றினர். ஷேவாக் சொதப்பும்போது சச்சினும், சச்சின் சொதப்பும்போது ஷேவாக்கும், இறுதிப்போட்டியில் இருவரும் சொதப்பியபோது கம்பீரும் என ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை முழுமையாக உணர்ந்திருந்தனர். எல்லாரையும்விட யுவி கூடுதல் பொறுப்போடு விளையாடினார்.

அந்தப் பக்கம் இலங்கை… 1996-ல் இந்தியாவில் ஈடன்கார்டன் மைதானத்தில் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை மிக ஈஸியாக ஊதித்தள்ளியிருக்கும் இலங்கை. சச்சின் மட்டும் கொஞ்சம் இழுத்துப் பிடித்துப் போராடினார். அன்று மட்டும் சச்சின் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் 96 இந்திய ரசிகர்களுக்கு ஒரு எமோஷனலான ஆண்டாக மாறியிருக்கும்.

ஆசியப் பிராந்தியத்தில் செம க்ளாஸான ஒரு அணி இலங்கை. அதிலும் 2011 உலகக்கோப்பையில் களமிறங்கிய சங்ககரா தலைமையிலான அணி வேறு லெவல். தில்ஷன், ஜெயவர்த்தனே, தரங்கா, முரளிதரன், மலிங்கா எனத் தரமான வீரர்களை உள்ளடக்கிய அணி. லீக் மேட்ச்களில் எதிரணிகள் போட்ட அத்தனை ஸ்கெட்சையும் தவிடுபொடியாக்கி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிகளைக் குவித்தது. காலிறுதிப் போட்டியில் தில்ஷனும், தரங்காவும் அடித்த டபுள் சென்சரி பார்ட்னர்ஷிப் க்ளாஸ் தாண்டவம். அரை இறுதியிலும் பெரிய அலட்டல்கள் இல்லாமல் நியுசியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

MS Dhoni and Yuvraj Singh in 2011 WC

ஆஸி இல்லாத ஒரு உலகக்கோப்பை ஃபைனலை யாரும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்கள். கடைசிவரை போராடிய ஆஸியைக் காலிறுதியில் மூச்சிறைக்க முட்டி மோதி காலி செய்தார் யுவி. அரையிறுதியில் பாசமிகு எதிரி பாகிஸ்தானைச் சந்தித்தது இந்தியா. இதிலும் இந்திய மிடில் ஆர்டர் சொதப்ப, கடைசியில் ரெய்னா கொஞ்சம் நின்று டீசன்டான ஸ்கோரை எட்ட வைத்தார். சேஸிங்கில் கடைசிவரை மிஸ்பா விடாமல் துரத்த இந்திய ரசிகர்கள் திக்திக் மூடுக்குச் சென்ற தித்திப்பான மேட்ச் அது. இந்தியா உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. அதுவும் பாகிஸ்தானை வீழ்த்தி!

சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் சச்சின் கையில் உலகக்கோப்பையைக் கொடுத்தே ஆக வேண்டும் என இந்திய வீரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டனர். இலங்கை மீண்டும் ஒரு 96 சம்பவத்தை நிகழ்த்த தயாராகியிருந்தனர். 96 என்ன… அதை விட பெரிய சம்பவத்தை நிகழ்த்தும் அளவுக்குக் கெத்தான அணியாகத்தான் இலங்கை இருந்தது. இந்தியாவில் வைத்து பழக்கப்பட்ட சீதோஷ்ண நிலையில் வழக்கமான பிட்ச்சில் போட்டி நடைபெறுவதால் இரு அணிகளுமே இந்த வாய்ப்பைத் தவறவிடுவதற்குத் தயாராக இல்லை.

Yuvraj singh and MS Dhoni

கடைசியாக க்ளைமேக்ஸ். ஏப்ரல் 2, 2011… பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சினிமா பிரபலங்களும் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகளும் வான்கடேயில் விஜபி சீட் பிடித்து ஆஜராகியிருந்தனர். ஹவுஸ்ஃபுல் மைதானத்தில் ஹைடெசிபிலில் ரசிகர்கள் உற்சாகக் கூச்சல்களை வெளிப்படுத்த தோனி டாஸ் காய்னைப் பறக்கவிட்டார். இலங்கை கேப்டன் சங்ககாரா ஹெட்-டெயில்ஸ் கூறியது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தில் அம்பயருக்குக் கேட்காமல் போக மீண்டும் தோனியை டாஸ் போடச் சொன்னார் நடுவர். அந்த ஒரு நொடி, தோனி மனதில் பல பழைய விவகாரங்கள் ஃப்ளாஷ் அடித்துவிட்டுச் சென்றிருக்கும். 2007 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா நாக்-அவுட் போட்டிக்குத் தகுதிபெறாமல் இந்தியா திரும்பியபோது தோனி வீட்டைக் கல்லெறிந்து சூறையாடினர் ரசிகர்கள். “அந்த நாள் நாங்கள் போலீஸ் வேனில் சென்றதும், மக்களின் எதிர்ப்பும் எங்களை ஏதோ தீவிரவாதிகள் போல உணரச் செய்தது” எனத் தோனியே வேதனை தெரிவித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸில் விளையாடிவிட்டு இந்தியா வரும்போதே இவ்வளவு எதிர்ப்புகள் இருந்ததென்றால் இந்தியாவில் சொந்த மைதானத்தில் 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் மத்தியிலும் அதீத மீடியா கவனிப்புகளுக்கு மத்தியில் விளையாடும்போது இந்திய வீரர்களுக்கு ஏகத்துக்கும் ப்ரெஷர் இருந்திருக்கும். ஆனால், இறுதியில் கோப்பையை வென்று சச்சினின் கையில் கொடுக்கும்போது அந்த ப்ரெஷர் அனைத்தும் ஆனந்தக் கண்ணீராகக் கரைந்தோடியது.

கபில்தேவ் ஏன் இந்தியாவின் இந்த 2011 வெற்றி `83 வெற்றியை விட மிகச் சிறப்பானது எனக் கூறினார் என்பதை இப்போது உணரமுடிகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.