கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறிப் பலரும் வெளியில் நடமாடி, காவல்துறைக்குத் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் தனது நண்பரோடு சேர்ந்த ஊடங்கை சரியாகக் கடைப்பிடிப்பதோடு, வீட்டுக்குள் இருந்தபடி செய்தித்தாள்களில் கவர் செய்து, லாக் டவுனைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தி வருவது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கவர்கள் செய்யும் குணசீலன், திருமூர்த்தி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதல், இன்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் அது பரவ, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது. மாநில அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைத்துள்ளது.

Also Read: `கட்டுச்சோறு; பல்லடம் டு சிதம்பரம்!’ – 320 கிலோமீட்டர் கணவரோடு நடந்தே செல்லும் பெண்

‘அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டாலும், பலரும் வெளியில் சாதாரணமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தித்தாள்கள்

ஆனாலும், அதன் வீரியம் புரியாமல் பலரும் வெளியில் நடமாடுவது மத்திய, மாநில அரசுகளைக் கவலைப்பட வைத்துள்ளது. இந்த நிலையில், குளித்தலையைச் சேர்ந்த குணசீலன் என்ற இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர், தனது நண்பரோடு சேர்ந்து வீட்டைவிட்டு வெளியே போகாமல் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பபோடு வீணாக இருக்கும் செய்தித்தாள்களில் கவர்கள் செய்து ஊரடங்கு உத்தரவைப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக மாற்றிக்காட்டி அசத்திக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து, குணசீலனிடம் பேசினோம். “நான் நாமக்கலில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்கிறேன். கொரோனா வைரஸ் பரவலால், எனக்கும் விடுமுறை விட்டாங்க. அன்றுமுதல் குளித்தலையில் உள்ள எங்க வீட்டைவிட்டு வெளியே வரலை. ஆன்லைன், டி.வியில் கொரோனா வைரஸின் கொடூரத்தையும், பரவும் வேகத்தையும் பார்த்தபிறகு, அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் 100 சதவிகிதம் உறுதியாகக் கடைப்பிடிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தேன். செல்போன், டி.வி, புக் படிக்கிறதுனு பொழுதைக் கழித்தேன். ஆனால், எனக்கும் போர் அடிக்கவே செய்தது. வெளியிலும் போக பயம். அதனால், வேற ஏதாவது பயனுள்ளதாக இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்த முடியுமானு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போதான், குளித்தலையைச் சேர்ந்த விருட்சம் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஓர் அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது. அதாவது, ‘வீட்டில் இருக்கும் பயனற்ற செய்தித்தாள்களில் கவர்கள் செய்து, ஊரடங்கு காலம் முடிந்தபிறகு கொடுத்தால், தான் வாங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தார். உடனே ஆர்வமான நான் அவருக்கு போன் செய்து விவரம் கேட்டேன். ‘இப்போ செய்தித்தாள் கிலோ ரூ.10 என்ற அளவில் விலை போகுது.

குணசீலன்

அதையே கவர்களாகச் செய்து கொடுத்தால், கிலோ ரூ.60 வரை விலை வைத்து வாங்கிக்கொள்வேன்’னு சொன்னார். குறிப்பாக, கொரோனா சம்பந்தமான ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்கவும், அந்த நேரத்தில் மக்களைப் பயனுள்ள விஷயத்தில் ஈடுப்படுத்தவுமே இந்த முயற்சியை மேற்கொள்வதாக அவர் சொன்னார். ரொம்ப நல்ல விஷயமா தெரிஞ்சுச்சு. உடனே, பக்கத்து வீட்டில் வசிக்கும் எனது நண்பர் திருமூர்த்தியோடு சேர்ந்து, எங்க வீட்டுக்குள் செய்தித்தாள்களில் கவர்கள் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். முதல்நாளே நூறு கவர்கள் வரை செய்து முடித்தோம். அடுத்த நாள்ல இருந்து, நான் என் வீட்டிலும், திருமூர்த்தி அவர் வீட்டிலும் இருந்து செய்தித்தாள்களில் கவர்கள் செய்ய ஆரம்பித்தோம். 500-க்கும் மேற்பட்ட கவர்களைச் செய்துவிட்டோம். மொத்த ஊரடங்கையும் இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்து கடைப்பிடிப்பதோடு, தொடர்ந்து கவர்கள் செய்து, லாக்டவுனைப் பயனுள்ளதாக்குவேன். கொரோனா வைரஸின் வீரியம் புரியாமல் பலரும் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு, ‘இதுபோல் வீட்டுக்குள்ளேயே இருந்து பயனுள்ள விஷயங்களை செய்ய வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.