“எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் தி.மு.க வின் தலைவர் பதவியைப் பிடித்தது போல அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று முதல்வராக ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஆனால், அழகிரி மீண்டும் அரசியல்களத்தில் தனக்குச் சிக்கலை ஏற்படுத்திவிடுவாரோ என்கிற எண்ணம் இப்போது ஸ்டாலினிடம் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள் தி.மு.க-வுக்கு நெருக்கமானவர்கள்.

கருணாநிதி-ஸ்டாலின்

கருணாநிதி இருந்தவரை தி.மு.க வின் தலைவர் பதவியில் ஸ்டாலின் வருவதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்று அழகிரியை மையப்படுத்தி செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. ஆனால் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அழகிரியைக் கட்சியை விட்டு நீக்கி அதிரடி காட்டினார் கருணாநிதி. மேலும் தனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான் என்று அறிவித்தார் கருணாநிதி. அதன்பிறகு அமைதியாக இருந்த அழகிரி கருணாநிதி மறைவுக்குப் பிறகு தி.மு.க வில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. இதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மதுரையில் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்துவருகிறார்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியை அழகிரி சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானதும் மீண்டும் அழகிரி அரசியலில் காலடி எடுத்து வைக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் அழகிரியின் ஆதரவாளர்கள பலரும் அழகிரியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஏதாவது முடிவெடுங்கள் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். அதேநேரம் அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் சத்தமில்லாமல் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டதால் அழகிரியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்கிற செய்திகள் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் உலவின.

அழகிரி குடும்பத்தினருடன்

அதற்கேற்ப அழகிரியின் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் “அனைத்துக் கட்சி கூட்டத்தை வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் முதல்வர் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். தன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்த விஷயம் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றதும் ராமலிங்கம் வகித்து வந்த விவசாய அணிச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஸ்டாலின். இதற்குப் பிறகு ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய அழகிரி `அமைதியாக இருங்கள்; நேரம் வரும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளான வரும் ஜூன் 3-ம் தேதியன்று அழகிரி கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்கிற செய்தி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் அழகிரியின் ஆதரவாளரான மதுரை முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் கட்சித்தலைமைக்குப் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் “கே.பி.ராமலிங்கம் விடுவிக்கப்படுவதாக தளபதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் மிகுந்த கட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் அந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். எனவே கே.பி.ராமலிங்கம் மீதான நடவடிக்கையைத் திரும்பப்பெறவேண்டும். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கட்சித் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

கே.பி ராமலிங்கம்

இது ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க வில் யார் மீதாவது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கும்போது அதை எதிர்த்து யாரும் இவ்வாறு வெளிப்படையாகக் குரல் கொடுக்கமாட்டார்கள். ஆனால், ராமச்சந்திரன் வெளிப்படையாகக் கடிதம் எழுதியதை அடிப்படையாக வைத்து நாளை வேறு சில நிர்வாகிகளும் கூக்குரல் கொடுத்தால் என்ன செய்வது என்கிற அச்சம், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அழகிரியின் அமைதிதான் ஸ்டாலினை இதுவரை உற்சாகமாக வைத்திருந்தது. ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக ஒருபுறம் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் இதுபோன்று கட்சித்தலைமைக்கு எதிராக கருத்துச்சொல்ல பலரும் கிளம்பியிருப்பது அவரை அதிர வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “இவ்வாறு ஒவ்வொன்றாக எழுப்பும் எதிர்ப்புக்குப் பின்னால் அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் இருக்கலாம் என்கிற சந்தேகம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டப்படவில்லை. பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறவேண்டியுள்ளது. ஏற்கெனவே அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட வீரபாண்டி ராஜா, காந்தி செல்வன் உள்ளிட்டவர்கள் ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் அழகிரிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தவர். இப்போது அவருடைய மகன் ராஜாவுக்கும் அழகிரிக்கும் நல்ல புரிதல் உள்ளது. அதேபோல் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இருவர், வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், தற்போது கட்சிப் பொறுப்பில் உள்ள மூத்த நிர்வாகி எனப் பலரும் அழகிரியுடன் சமீபத்தில் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார்கள். கட்சியில் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்களை வைத்து பொதுக்குழுவில் ஏதாவது சிக்கலை ஏற்படுத்திவிடுவாரோ என்று எண்ணுகிறார் ஸ்டாலின்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

Also Read: அழகிரி அசைன்மென்ட், தடைபோடும் தமிழருவி, `ஆப்சென்ட்’ விஜயபாஸ்கர்… கழுகார் அரசியல் அப்டேட்ஸ்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் தி.மு.க தோல்வியடைய அழகிரியும் ஒருகாரணம் என்ற கூறப்பட்டது. அதேநேரம் இப்போது தனது அரசியல் விளையாட்டை அழகிரி ஆட ஆரம்பித்தால் மீண்டும் தென் மாவட்டங்களில் தி.மு.க சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் நினைக்கிறார். பி.ஜே.பி தரப்பில் அழகிரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியை உடைக்க முயன்றதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் அதை அழகிரி ஆதரவாளர்களே மறுத்து விட்டனர். அழகிரி தனிக்கட்சியைத் தொடங்கினாலும் தொடங்குவாரே தவிர, பி.ஜே.பியுடன் இணைந்து செயல்படமாட்டார் என்று சொன்னார்கள். இப்போதைக்கு அழகிரியின் சாய்ஸ் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி வைத்துச் செயல்படலாம் என்பதே. அதற்காகவே இப்போது தனது பழைய ஆதரவாளர்களுக்கு இவரே போன் செய்து பேசிவருகிறார். ஒருவேளை தான் கட்சி ஆரம்பிக்கும் நிலை வந்தால் அப்போது இவர்கள் தன் பின்னால் வருவார்கள் என்று அழகிரி கணக்கு போடுகிறார்’’ என்று விரிவாக விளக்கினார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தென்மாவட்டங்களில் தி.மு.க வாக்குவங்கி குறைந்ததற்கு அழகிரி–ஸ்டாலின் இடையிலான மோதலும் முக்கியக் காரணமாயிருந்தது. இந்த முறை அழகிரி நேரடியாக அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதால் அதற்கு முன்பாகக் கட்சிக்குள் உள்ள கலகங்களை முடிவுக்குக் கொண்டுவர தலைவர் ஸ்டாலின் நினைப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்கள்.

அண்ணன்–தம்பி இடையிலான இந்த மோதலை, தி.மு.க.வினரை விட ஆளும்கட்சிகளான அ.தி.மு.கவினரும், பா.ஜ.க.வினரும்தான் இன்னும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். கொரோனா அச்சம் முடிவுக்கு வந்ததும் அழகிரியின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.