கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவால் அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, காய்கறி, மளிகைக்கடைகளும் குறிப்பிட்ட நேரம் வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நகர்ப்பகுதியில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் அனைத்தும் வீட்டிலேயே இருந்தபடி கிடைக்கும் வகையில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கிராமங்களில் பொதுமக்கள் தங்களது தேவைகள் அனைத்தையும் தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைதான் உள்ளது.

தயார் நிலையில் உள்ள காய்கறிப் பைகள்

பெரும்பாலான கிராமங்களில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள் சரிவரக் கிடைக்கவில்லை என்று புலம்பி வருகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தீயத்தூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். இங்குள்ள இளைஞர்கள் தங்களது சொந்தப் பணத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி வந்து தொகுப்புகளாகப் பிரித்து தங்களது கிராமத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் காய்கறிப் பைகளை இலவசமாக வழங்கி அசத்தியுள்ளனர்.

தீயத்தூர் கிராமத்து இளைஞர்களிடம் பேசினோம். “எங்கள் கிராமத்தில் தீயத்தூர் கிராம நலச்சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து, கிராம நலனுக்காகவே செயல்பட்டுக்கிட்டு வர்றோம். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்தான் எங்க சங்கத்தோட கெளரவத் தலைவராக இருக்காரு. இப்போ, கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டு வருது. அரசுக்கு நம்ம முழு ஒத்துழைப்பு கொடுக்கணும். அதே நேரத்தில நம்முடையே தேவையையும் பூர்த்தி செய்துகொள்ளணும்.

காய்கறிகளை பேக் செய்யும் இளைஞர்கள்

காய்கறி வாங்கணும்னா 20 கி.மீ வரைக்கும் டவுனுக்குப் போய் தான் வாங்கிக்கிட்டு வரக்கூடிய நிலை இருந்துக்கிட்டு இருக்கு. இப்போ, ஊரடங்கு நேரத்துல எல்லாராலயும் டவுனுக்குப் போயிட்டு வர முடியாது. கிராம மக்களும் காய்கறிகள் கிடைக்கலைன்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க. நலச்சங்கம் மூலமாகக் கிராம மக்கள் வீடுகளுக்கு காய்கறிப் பைகளைக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க சங்கத்துல உள்ள இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்தோம்.

சுமார் 50,000 வரையிலும் வசூலானது. அந்தப் பணத்தை வச்சு, காய்கறிகளை விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியாக வாங்கிவந்து ஒரு மண்டபத்தில் வச்சுக்கிட்டோம். அதற்கப்புறம் மாஸ்க், க்ளௌவ்ஸ் அணிந்தவாறு பாதுகாப்போடு சரிசமமாக 150-க்கும் மேற்பட்ட காய்கறி பைகளாக மாற்றினோம். அனைத்தையும் மிகவும் பாதுகாப்புடன் வீட்டுக்கு வீடு சென்று வழங்கினோம். எங்க ஊர் மக்களுக்கு இன்னும் ஒரு 10 நாளைக்குக் காய்கறிகள் பிரச்னை இருக்காது.

கிராமத்து இளைஞர்கள்

எங்க கிராம மக்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. இதேபோல தொடர்ந்து, எங்க கிராம மக்களுக்கு எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அரசே அனைத்தையும் செய்யும் என்று காத்திருக்காமல், ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊர் இளைஞர்கள் இந்த நேரத்தில் தன்னார்வமாக முன்வந்து கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கணும்” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.