சாமானியர்கள் முதற்கொண்டு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரையும் கொரோனாதான் ஆட்டுவிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் தினமும் 50 பேரிடமாவது தொலைபேசி மூலம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தை நடத்தி வருகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Also Read: தப்லீக் ஜமாஅத் அமைப்பும் கொரோனா பாதிப்பும்… அக்கறையா… அரசியலா?

கொரோனா விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

இவ்விவகாரத்தில் தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. கொரோனாவைத் தடுப்பதற்கு அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்துவருகிறார்கள். ஆனால், ஒரே நாளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு செய்ததுதான் தவறு. சென்னையில் பகுதி பகுதியாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் குழுமியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இந்த அதிரடி அறிவிப்பு மக்களை பதற்றப்படுத்திவிட்டது. பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே வந்தவர்கள் பற்றிய செய்தியெல்லாம் வருகிறது. மோடியைப் போல எடப்பாடியும் மக்களைத் திணறடித்துவிட்டார். இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் அமைதி காக்கிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

இதை நானும் ஆமோதிக்கிறேன். கூட்டம் நடத்த முடியாவிட்டால், தொலைபேசியிலாவது பேசியிருக்க வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டது என்று அரசு மருத்துவமனைக்குச் சென்றால், வெறும் பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இரண்டு நாள் காய்ச்சல் குறைந்து மீண்டும் அதிகரித்துவிடுகிறது. நோயை உடலில் தங்க வைக்கும் வேலையைத்தான் பெரும்பாலான மருத்துவமனைகளில் பார்க்கிறார்கள். கொரோனாவை எதிர்கொள்வதற்கு அரசிடம் போதுமான உபகரணங்கள் இல்லை. நமது மரபணுவிலேயே மலேரியா எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பு இருப்பவர்களுக்குக் கொரோனா பாதிப்பு இருக்காது என்று ஒருசாரார் கூறுகிறார்கள். ஆனால், வெறும் அனுமானத்தில் முடிவுகளை நாம் எடுக்க முடியாது. இதையெல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு பேசினால், கருத்துகளை அரசிடம் பறிமாறலாம். அதற்கு அவர்கள் தயாராக இல்லையே!

கே.எஸ்.அழகிரி

குடும்ப அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்களே?

தனித்திருக்கும் போது மத்திய தர வர்க்கத்திற்குக் கீழானவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒருவாரமாக யாருக்கும் வேலையில்லை. இச்சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்களில் வறுமை கோட்டுக்குக் கீழானவர்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். ஜன்தன் வங்கிக் கணக்குகளின் விவரங்கள் அரசிடம் இருப்பதால் பணம் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தங்களுக்குக் கொரோனா வந்துவிடுமோ என்று ரேஷன் ஊழியர்கள் பயப்படுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்கு வீட்டுக்கு வீடு ரேஷன் பொருள்களை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை இரண்டு மாதத்திற்கு நடைமுறைப்படுத்தலாம்.

Also Read: நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் பேருக்கு உணவு… கொரோனாவைச் சமாளித்து
அசத்தும் அம்மா உணவகங்கள்!

தினமும் 50 பேரிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தை நடத்துகிறீர்களே?

ஆமாம். கொரோனா வைரஸின் தாக்குதல், அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது குறித்து தினமும் ஐம்பது பேரிடமாவது காங்கிரஸ்காரர்கள் தொலைபேசி அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகப் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், கட்சியும் துடிப்புடன் இருக்கும் என்பது என் கருத்து. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் மருத்துவ அணியையும் களமிறக்க நாங்கள் தயார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.