கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க எதுவுமே செய்யவில்லையென்றும், பிரசாந்த் கிஷோருக்கு அவ்வளவு பணம் கொடுத்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் தி.மு.க மீது திட்டமிட்டுப் பொய்ச் செய்தி பரப்புவதாக பா.ஜ.க மீது தி.மு.கவினர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதிலுக்கு பா.ஜ.கவினர் மக்களுக்குக் கொடுத்ததை விட கிஷோருக்கு அதிகமாகத்தான் கொடுத்திருப்பீர்கள் எனப் பதில் கருத்து கொடுக்க இருவருக்குள் கருத்து மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்பு

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. உலகநாடுகள் பெரும் பொருளாதாரச் சிக்கலில் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிலையில் மக்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க எதுவும் செய்யவில்லை என்றும் பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக மக்களை ஆள நினைக்கும் தி.மு.க வெறும் ஒரு கோடி ரூபாய்தான் கொடுத்திருக்கிறார்கள் என்றும் பா.ஜ.கவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், ட்விட்டரில் அவதூறு பரப்புவதாகவும் அப்பதிவை நீக்கக் கோரியும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான ‘தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் முருகன், பா.ஜ.க ஐடி விங்க் டீம் மீது வக்கில் நோட்டீஸ்அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க வழக்கறிஞர் வில்சனிடம் பேசினோம். “மக்களுக்கு தி.மு.க சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தொனியில் பா.ஜ.கவினர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், எம்.பி,எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர்.

வழக்கறிஞர் வில்சன்

அதைத்தொடர்ந்து தி.மு.க தலைமை நிலையமான ‘அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கை’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பல எம்.பி, எம்.எல்.ஏ க்கள் அவர்களுடைய சொந்த வீடுகள் மற்றும் விடுதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் முதல்வருடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவதற்காக ஸ்டாலின் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தி.மு.கவிற்கு வேலை செய்ய பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 கோடியும், கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடியும் கொடுத்ததாகப் பொய்க் குற்றச்சாட்டைப் பா.ஜ.கவினர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாங்கள் பணம் கொடுத்தற்கு ஆதாரம் அவர்களிடம் இருக்கிறதா? இந்த நேரத்தில் தேவையில்லா பிரசாரம் எதற்கு செய்யவேண்டும். கொரோனா விவகாரத்தால் மக்கள் நிலைகுலைந்து நிற்கும்போது இப்படித் தரம்தாழ்ந்த அரசியலை பா.ஜ.க செய்யலாமா? இந்த விவகாரத்தில் நாங்கள் ஆளும் கட்சியோடு ஒத்துப்போகும் சூழலில் தேவையில்லாத பதிவுகளைப் போட்டு மக்கள் மனதில் தவறான கருத்துகளைப் பரப்பப் பார்க்கிறார்கள். அதைக் கண்டித்துத்தான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம்” என்றார்.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ் நரேந்திரனிடம் பேசினோம்.“நாங்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக மக்களைக் கையில் வைத்துக் காப்பதாக தம்பட்டம் அடிக்கும் தி.மு.க தலைவர், என்ன செய்திருக்கிறார்?. வீட்டில் உக்கார்ந்துகொண்டு வாட்ஸ் அப் வீடியோவில் நிர்வாகிகளோடு பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் வீதியில் இறங்கி துரிதமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கே.எஸ் நரேந்திரன்

பிரசாந்த் கிஷோர் உங்களிடம் சும்மா வேலை செய்ய வந்திருக்கிறாரா? அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறீர்கள்? அதைச் சொல்ல முடியுமா? மக்களுக்குக் கொடுத்த ஒரு கோடியை விட அதிகமாகத்தான் கொடுத்து இருப்பீர்கள். அதைத்தான் நாங்கள் சொன்னோம். இதில் என்ன தவறு இருக்கிறது? அத்தோடு தி.மு.கவிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா முதல் தி.மு.கவில் உள்ள ஒவ்வொரு தொண்டனிடமும் நீங்களே கேட்டுப்பாருங்கள்.

கமலாலயம்

பிரசாந்த் கிஷோருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்று அவர்களே சொல்வார்கள். ஒரு செய்தி சொல்லிவிட்டோம் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் அல்லவா, அப்படியே முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் எங்கே என்று நீங்களே கேட்டுச்சொல்லுங்கள். அதற்குப் பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம். மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் இந்த அரசியல் வேலையை அரங்கேற்றியிருக்கிறார்கள். எந்தப் பிரச்னை வந்தாலும் சரி, சட்ட ரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.