கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 24-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.

கொரோனா வைரஸ்

மதுக்கடைகள் மூடப்பட்ட போதிலும் ஓரிரு இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றது. ஆனால், காவல்துறையினரின் தீவிரக் கண்காணிப்பைத் தொடர்ந்து மது விற்பனை முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

அருகில் உள்ள கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படுவதால் மது போதைக்கு அடிமையானவர்களுக்கு மது பாட்டில்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் மது போதைக்கு அடிமையானவர்கள் திண்டாடி வருகிறார்கள்.

Also Read: `பாதிப்பை சரி செய்யவும், தற்கொலைகளை தடுக்கவும் மட்டுமே.!’ -குறைந்த அளவில் மது விற்பனை செய்யும் கேரளா

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தசரதன் என்பவர் மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான அவர் அங்குள்ள தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்.

வயதான தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் தசரதனுக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது குடிக்க முடியாமல் திணறியிருக்கிறார். பசியின்மை, படபடப்பு, அச்சம், கை நடுக்கம் போன்றவை ஏற்பட்டதுடன் மன அழுத்தம் ஏற்பட்டதால் வீட்டைப் பூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பணகுடி காவல்துறையினர் உதவி

அந்த நேரத்தில் அதே பகுதியில் பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் காவல்துறையினர் ரோந்து சென்றிருக்கிறார்கள். சம்பவத்தைக் கேள்விப்பட்டபோலீஸார், தற்கொலைக்கு முயன்ற தசரதனிடம் ஆறுதலாகப் பேசி தற்கொலை முயற்சியைக் கைவிடச் செய்தனர்.

தசரதனுக்குத் தொடர்ச்சியாக வேலை இல்லாததால் குடும்பமே கஷ்டத்தில் தவித்திருக்கிறது. அதுவே அவரை தற்கொலை முடிவுக்குத் தள்ளியிருப்பதை போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அதனால், தசரதன் குடும்பத்தினருக்கு உணவு வாங்கிக் கொடுத்த போலீஸார், அவர்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிட வைத்தனர். 

Also Read: `பார்’ போல் மாறிய புதிய பேருந்து நிலையம்! -குவிந்து கிடக்கும் மது பாட்டில்கள்

அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் வாங்கிக் கொடுத்தார்கள். அதனால் நெகிழ்ச்சியடைந்த தசரதன், `இனி இதுபோல தற்கொலை முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டேன்’ என போலீஸாரிடம் சத்தியம் செய்து கொடுத்தார். பணகுடி காவல்துறையினரின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.