கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் முடங்கிப் போயிருக்கின்றன. இந்திய நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாது, மக்களின் பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

21 நாள்கள் முழுமையான ஊரடங்கினால், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. வேலைகள் முடங்கிவிட்டன. பலருடைய வேலையும், சம்பளமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்தப் பொருளாதார பதற்றத்தை, பாதுகாப்பில்லா தன்மையைக் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

Also Read: 21 நாள் ஊரடங்கு… இந்தியப் பொருளாதாரம் பற்றி நிறுவனங்களின் மதிப்பீடும் பரிந்துரைகளும்!

”முடக்கம் அறிவித்து 36 மணி நேரத்தில், ஏழை மக்கள் மற்றும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கு யாரும் கையில் பணமில்லாமல், உணவில்லாமல் பசியில் துடிக்கக்கூடாது என்பதற்காக 1,70,000 கோடி ரூபாயில் பல திட்டங்களை அறிவிக்க உள்ளோம்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்திருந்தார்.

“முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டிருக்கும் 15,000 கோடி ரூபாய் நிதியிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படும். ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜனா’ திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்கள் அனைவருக்கும் ஏற்கெனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் மூன்று மாதங்களில் மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும்.

ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு, மாதம் 500 ரூபாய் என, அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டில் 20 கோடி பெண்கள் பயனடைவர்.

இவை தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வகை வழங்கப்படும்.  விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 2,000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்தப் பணம் செலுத்தப்படும். 

ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டில் 20 கோடி பெண்கள் பயன் அடைவர். 60 வயதைக் கடந்தவர்கள், விதவைகள், ஏழை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வங்கி நேரடி பணம் செலுத்தும் திட்டத்தின்கீழ் ஒருமுறை 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. 

நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடியின், ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு, மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ் வரும், சுய உதவிக்குழுக்களுக்கு, தீன் தயாள் கடன் திட்டத்தின்கீழ் அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது. வருங்கால வைப்புநிதி பங்களிப்பில் இருக்கும் நிதியில் 70% பணத்தை ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது மூன்று மாத சம்பளத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ், முறைப்படுத்தப்பட்ட குழுக்களில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு, வருங்கால வைப்புநிதி பங்களிப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு 24% தொகையை அரசே செலுத்தும். 100 பேருக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களில் மாதம் 15,000 குறைவாகச் சம்பளம் பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்” என்பதுதான் நிதி அமைச்சரின் முதல்கட்ட அறிவிப்பு. 

Also Read: வளர்ச்சியை வேகப்படுத்தும் நிதி அமைச்சரின் நடவடிக்கைகள்!

எங்கிருந்து எடுத்து செலவு செய்வது? 

“நிதி அமைச்சர் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய், சலுகைகளுக்கு, மத்திய அரசிடம் பணம் இருக்கிறதா? எங்கிருந்து பணம் கொண்டுவருவார்கள்? உள்ளிட்ட கேள்விகளைப் பலர் எழுப்புகிறார்கள்.  முதலில், மத்திய அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் இந்தத் தொகை, தற்போதைய பிரச்னைக்குக்கூட போதுமானதல்ல. இன்னும் பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். பத்து லட்சம் கோடி ரூபாய் வரைகூட தேவைப்படலாம். சுகாதாரத்துறைக்கு இன்னும் அதிக பணத்தை மத்திய அரசு ஒதுக்க வேண்டியிருக்கலாம். அதனால் இப்போது அறிவித்திருக்கும் நிதியும், திட்டங்களும் போதுமானதல்ல. இன்னும் பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

உடனடியாகச் செய்யவேண்டியது என்னவென்றால், ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுவது. முடிந்தால், உடனடியாக கரன்சியை அச்சிட்டுக்கொள்ளலாம். இதில் ஒரே ஒரு பிரச்னை, உலக வங்கி கேள்வி எழுப்பும் என்பதுதான். ஒரு நாட்டின் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என உலக வங்கி சொல்லியிருக்கிறது. ஆனால், இதைப் பல நாடுகள் பின்பற்றுவது இல்லை. கொரோனோ போன்ற திடீர் பேரிடருக்காக பல லட்சம் டாலர்களை அந்த நாடுகள் ஒதுக்கியிருக்கின்றன. இதனால் இந்திய அரசாங்கம், இந்தச் சதவிகிதத்தை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

உலக  வங்கி, கொரோனா பதிப்புக்குப் பிறகு, நாட்டின் நிதிப் பற்றாக்குறையைத் தளர்த்திக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருப்பதால், நாட்டின் நலன் கருதி, நிவாரண  நிதியைச் சற்று கூடுதலாகவே மத்திய அரசாங்கம் ஒதுக்க வேண்டும்” என்கிறார், அனைந்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ.

நாட்டின் நிதிச் சிக்கல்களை சமாளிக்க, மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவது வாடிக்கையானதுதான். அதனால், இந்த கொரோனா பிரச்னைக்குக் கொஞ்சம் கூடுதலாக நிதியைப் பெற்று, நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் சீர் செய்ய வேண்டும். 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அதில் முதல் வழி, அரசுப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி  வெளியிடுவது. இதுதவிர, மக்களிடமிருந்து பணத்தைத் திரட்ட, ஸ்பெஷல் டெபாசிட்களைப் பெறுவது அல்லது மக்களிடமிருந்து கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலஅவகாத்தில் பெற்று, அதற்கென ஒரு குறிப்பிட்ட வட்டியை மக்களுக்கு வழங்குவது. இந்த முறையின் மூலம் சமீபகாலமாக ரிசர்வ் வங்கி நிதியைத் திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் பெறுவதுபோல, வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கியும் கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம்தான் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’. இதை ரிசர்வ் வங்கி தற்போது நான்கு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. நான்கு சதவிகிதத்தில் வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று, அதை அரசுக்கு அவசரகால நிதியாக வழங்கலாம். அதேபோல, சர்வதேச சந்தைகளிலும் குறைவான வட்டியில் ரிசர்வ் வங்கியால் நிதி திரட்ட முடியும். அந்த நிதியையும் மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். 

கச்சா எண்ணெய் விலை சரிவை இதற்குப் பயன்படுத்தலாம்!

உலகிலேயே பெட்ரோலை அதிக விலைக்கு விற்கும் நாடு இந்தியா தான்,பெட்ரோலின் விலை கச்சா எண்ணெய்யின் விலையை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் $61 ஆக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை, இன்று $36 டாலர்கள் குறைந்து $25 டாலராக உள்ளது. $36 டாலர்கள் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும் இன்னும் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டும் குறையாமல் அப்படியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசு இந்தச் சூழலைச் சமாளிக்க, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

Petrol

அப்படிச் செய்யாத பட்சத்தில், அரசுக்கு கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைத்துள்ள நிகர கையிருப்புத் தொகையைக் கொண்டு மத்திய அரசு இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கலாம். ஒருவேளை கச்சா எண்ணெய் விலை இதே விலையில் தொடர்ந்தால், வாங்கி ரிசர்வ் செய்துகொள்ளப் போதுமான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாததால், ஆறு மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை முன்னதாக புக்கிங் செய்து கொண்டு, அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, கொரோனா பாதிப்புக்கு அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கச்சா எண்ணெய் விலை சரிவால், மத்திய அரசு  ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.

இதுதவிர, அரசுக்கு அனைத்து தொழில் நிறுவனங்களும் தொடர்ந்து நிதி உதவி செய்துவருகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாகவும், மத்திய அரசால் அதிக நிதியைத் திரட்ட  முடியும். ‘கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’ பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல கோடி ரூபாயை சமூக அக்கறைக்காகச் செலவுசெய்து கொண்டிருக்கின்றன. ‘சுவச் பாரத்’ திட்டத்துக்காக அதிக நிதியை அந்நிறுவனங்கள் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிதியை இப்போது கொரோனாவுக்காக மத்திய அரசாங்கம் ஒதுக்கிக்கொள்ளலாம். 

நிதி உதவி

தற்போதைய பாதிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, இன்னும் சில மாதங்களில் இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. இதன் தாக்கம் சில ஆண்டுகள் வரை நீடிக்கலாம். வெளிவராத பல பிரச்னைகள் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கின்றன. ஊரடங்கு முடிந்த பிறகே, அந்தப் பிரச்னைகள் கண்ணுக்குத் தெரியும்.

அதனால் அதற்கு முன்பாக மத்திய அரசாங்கம் நிதிகளைத் திரட்டி, தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரச்னைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது, நிதியை மக்களுக்குக் கொடுத்தால்தான், தலைகுப்புற கவிழ்ந்துகிடக்கும் பொருளாதாரத்தை, சிறு, குறு தொழில்களை, வங்கித்துறை மற்றும் விவசாயிகளைத்  தூக்கிநிறுத்த முடியும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.